ஜீவானந்தன் சிறுகதை தொகுதிக்காக 1994ல் எழுதிய கருத்துரை…

அன்பு ஜீவா,

குறுந்தாடியும் குறுநகையுமாய், தலைநிறந்த கேசங்களோடு பழுப்பேறிய ‘நேசனின்’ தாள்களில் புகைப்படமாய்… நீங்களும் உங்களின் கதைகளுமாய்… பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன், அறிந்து கொண்டவை எவ்வளவோ… இனி அறியக் கிடப்பவை எவ்வளவோ… நிச்சயமாக நான் எழுதவேண்டியவை இன்னும் எவ்வளவோ… இன்னும் எவ்வளவோ என நீங்களும் உங்கள் பேனாவுமாய்…


ஆழத்தில் தகித்து எரியும் பாலுணர்வின் வேட்கை, அகத்தினுள் புழுங்கித் தவித்த ‘அந்த’ப் பருவ வயதின் உக்ரமான வெக்கை, இவை வடிகால் தேடி sublimation உருமாறிக் கவிதையாய், கதையாய், எழுத்தாய் உருகி ஆறு பெருக்கெடுக்க, நீங்களும் உங்களின் உணர்வுகளுமாய்…

இளமையோடும் அந்த இளமைக்கே உரிய வேகத்துடன், கெண்டைக் கால் ஆடுதசையின் முறுக்கேறிய நார்கள் ஆக்ரோஷமான பந்து எத்தலின் பின்னும், இன்னும் இன்னும் என்று குதித்த வண்ணம், நீங்களும் உங்களின் எண்ணங்களுமாய்…

புரிந்ததுபோன்றும், ஆனால் முழுதுமாய்ப் புரியாதது போன்றும் நடு மயக்கத்தில், விடிந்ததும் விடியாததும் போன்ற நடுச் சாம்பல் கருக்கலில் மனம் மையம் கொண்டு, அநத நேரத்து மனப்பதிவுகளை அந்தப் பின்னணியில், படைப்பாளர் மூலம் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ள எத்தனிக்கும் முயற்சியில், நீங்களும் உங்களின் ‘அந்தக் காலமுமாய்…’ இக் கதைகளின் வழி நான் படிக்கும் மிகவும் சுவாரஸ்யமான விஷயம்… நீங்கள் தான். படைப்பைப் புறந்தள்ளிவிட்டுப் படைப்பாளியைப் பார்ப்பது அந்தப் படைப்புகளுக்குச் செய்யும் நியாயமாகது என்பீர்கள்.

தவறு.

படைப்பைப் புறந்தள்ளவில்லை.

அப்படைப்பினூடே, எழுத்துகளை ஊடுருவி எழுதியவனைப் பார்ப்பது, கலையின் வழியே கலைஞனைக் காண்பது, ஆக்கத்திற்கும் ஆக்கியவனுக்கும் செய்யும் கௌரவமாகும். இந்தப் பார்வை, மனிதனுள் நுழைந்து அவன் மனதைத் தொட்டுப்பார்க்க எத்தனிக்கும் பார்வை. அதன் உன்னதங்களில் மெய்சிலிர்த்து, பெருமைகளில் பெருமிதம் கொண்டு, சிறுமைகளில் சீற்றமும் கொள்ளும் தேவை.

இப்பார்வையின் மூலமே என்னால் அந்த எழுத்துகளில் எழுதிய ஜீவாவையும் அவர் எழுத்துக்களையும், தொண்ணூறுகளில் நானறிந்த ஜீவாவையும் அவர்தம் சிந்தனைகளையும் வெவ்வேறு தளங்களில் பார்க்கமுடிகிறது. இந்தக் கால இடைவெளியை மனத்தில் நிறுத்திய இந்தக் கதைகளையும் தங்களையும் நானும் வாசகர்களும் பார்க்க வேண்டியுள்ளது. மீண்டும் மீண்டும் உங்களிடம் எத்தனை முறை கேட்டிருப்பேனே ஜீவா… பத்தாம் பர்சுந்தையின் பால்மரச் சருகுகளின் மத்தியில் எப்படி ஒரு ரோஜாச் செடி வளர்ந்து முளைத்தது என்று.

யார் அதை விதைத்தார்கள், அதன் ஆரம்பம் எப்படி நிகழ்ந்தது, அதன் மூலம் எது, அந்த வளமான வரிகள் எழுதி வைக்கப்பட்ட அந்த முதல் புள்ளி யாரால் எங்ஙனம் வைக்கப்பட்டது… அன்றைய வாழ்வின் நெருக்கடியில் உங்களுக்கும் உங்களைப் போன்றோர்களுக்கும், முற்றிலும் சாதகமற்ற சூழலில், இந்த இலக்கியத் தேடல், தாகம், ஏன் எப்படி ஏற்பட்டது என்று எத்தனை முறை கேட்டிருப்பேன். விடைகளை நானும் நீங்களும் இன்னமும் தேடிக் கொண்டுதானிருக்கிறோம். எண்பதுகளின் தொடக்கத்தில், கவிதைக் களத்தில் ‘மரபும் புதுக்கவிதையும்’ நடத்திச் சென்ற போராட்டத்தில் நாமிருவரும் பார்வையாளர்களாக அறிமுகமானோம்.

இரண்டையும் புரிந்துகொண்ட நீங்கள் அந்தக் கயிற்றில் லாவகமாக நடந்தீர்கள். மரபு வெல்வதே மரபாகிவிட்ட அந்தக் களத்தில் நான் அன்னியமானேன். பின் நண்பர் திரு. சாமிமூர்த்தியுடன் நானும் நீங்களும் சந்தித்து, இலக்கியம் பற்றி ஒரே தளத்தில், ஒரு முனைப்பாகச் சிந்தித்து, தீர்க்கமான கருத்துக்களை, நேரங்களை, நூல்களைப் பறிமாறிக்கொண்டு பயணித்த அந்தக் காலங்களில்தான், அந்த ‘விபத்து’ உங்களுக்கு நிகழ்ந்தது. தெரிந்தோ தெரியாமலோ க. நா. சுப்பிரமணியம், ரஃமான், வெங்கடசாமிநாதன், கைலாசபதி, சிவதம்பி, தமிழவன், கேசவன், ஞானி என்னும் அந்த விமர்சன, திறனாய்வுக் கூட்டத்தினுள் தூக்கி எறியப்பட்டீர்கள்.

படைப்பிலக்கிய மனதோடும் இவர்களின் திறனாய்வுக் கொள்கைகளோடும் நீங்கள் போராட்டம் நடத்த, நடத்த… உங்களின் படைப்புலகம், படைப்பில் மனவுலகம் தன்னைச் சுருக்கிக்கொண்டு, உங்களின் அறிவுலகம் ஆய்வியலில் விரியத்தொடங்கி, வியாபித்து உங்களைத் தன்னோடு ஆகர்ஷ்த்திக்கொண்டது. இன்னும் ஈரம் காயாத உங்களின் இலக்கிய விளைநிலத்தில் இவர்களின் விமர்சனச் சக்கரங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் ஆழ்த்திய, இலக்கியக் கொள்கை கோட்பாடுகள் விதிகளை நிர்ணயித்துக் காட்டி விழி உருட்ட… உங்களின் படைப் புலகம், படைப்பில் மனவுலகம் உறைந்து போய்விட்டது. மறுபக்கம் பகுப்பாயும் ஆய்வு மனம் தன்னை அடையாளம் கண்டுகொண்டது.

இதுவும் ஒரு பரிணாமம்தான்.

மனத்தின் வேறொரு பரிமாணமும்கூட. ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்றின் தேக்கம் தேவைப்படுகிறது. ஒரு மேடு உருவாக ஒரு பள்ளம் தோண்ட வேண்டியுள்ளதே! உங்களின் ‘படைப்புலகம்’ கூட்டுப் புழுவின் “குளிர் உறைநிலைப்” பருவத்தில் இருந்தது போலும்.

நம் வட்டம் திரு. கந்தசாமி, திரு. ரெ. ச., திரு சோதிநாதன் என்றும் ‘அகம்’ என்றும் விரிவடையப் படைப்பிலக்கியம் உங்களை ஒரு எதிர்ப்பார்ப்புகளோடு பார்க்கிறது. நாம் தமிழ்நாட்டுக்கு அப்பால், தமிழ் வளர்க்கும் ஒரு பாரம்பரியத்தின் கூறுகளாய், சங்ககாலம் தொட்டு வளரும் இந்தத் தொன்மையான தமிழ் மரபின், மாபெரும் சங்கிலியின் தொடரும் கண்ணிகளாய் நம் மனம் தரிசனம் கொள்ளும்போது, இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கிய வரலாற்றை நம்முள் செறித்துக் கொண்டவாறே, கடந்து வந்த பின்புலத்தைப் புரிந்துகொண்டபோது, ‘வீர்யம்’ கொள்ளும்போது, பெருமிதம் கொள்கிறோம்.

இந்தப் பெருமிதம் வெறும் தற்புகழ்ச்சியாய் ஆகிவிடாமல் செயலாக்கம் மிக்க படைப்புகளாய், கவிதைகளாய், கதைகளாய், கட்டுரைகளாய் வடிவம் பெறவேண்டும். இந்நாட்டின் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் கேள்விகளோடு நம்மை எதிர்கொள்ளும் போது, நாமும் அதற்கான பதில்களோடு அதை வரவேற்போம்!

ஜூன், 1994
அன்புடன்,
மா. சண்முக சிவா

Share

One thought on “ஜீவானந்தன் சிறுகதை தொகுதிக்காக 1994ல் எழுதிய கருத்துரை…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *