அறிவுமதியில் ‘நட்புகாலம்’ கவிதை நூலுக்காக எழுதிய அணிந்துரை!

நட்புகாலம்

அகத்துறைப் பாடல்கள் முதல் அப்பாதுரை மகன் ஐந்தாம்படிவம் அகிலனின் கையெழுத்துப் பிரதிவரை காதலைச் சொன்ன கவிதைகள் கானகமாய் அடர்ந்து கிடக்கையில், நளினமாதொரு நட்பைச் சொன்ன கவிஞனின் ‘நட்புக்கால’ கவிதைகள் மட்டும் அற்புதமாக இதழ் விரித்து, அபுர்வமான சின்னச்சின்ன பூக்களாய் உயிர்தொட்டுச் சிரிக்கின்றன.


‘அடிவானத்தை மீறிய / உலகின் / அழகு என்பது / பயங்களற்ற / இரண்டு மிகச் சிறிய / இதயங்களின் / நட்பில் / இருக்கிறது’

வானத்திற்குக் கூட அழகு அடிவானத்தில்தான். இதயங்களில் உதயமாகும் நட்பின் அழகிற்கு ஆதி எது? அந்தம் எது? ‘அழகு’ என்பதற்குத்தான் எது ஆரம்பம்? முடிவு?

‘தோள் சாய்ந்து / தூங்கிய / உன் மூடிய விழிகளில் / விழித்தேன் / முதன்முதலாய் / நான்’

தந்தையின் மடியில் குழவியாய், தனையனின் கைகளில் சிறுமியாய், கணவனின் மார்பில் மனைவியாய், கண்மூடும் பெண்மை இன்று தோழனின் தோள்களில் துயில் கொள்ளும் உறவு எவ்வளவு தூய்மையானது! மென்மையான நட்பைக் காட்டி மனிதனை மேன்மைப்படுத்துகிற கவிதை எவ்வளவு சாத்தியமானது!

‘அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த நீ / முதன் முதலாக என்னை / அழைத்துச் / சென்றிருந்தபோது / வழக்கமான அம்மாக்களின் / சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு / நடுவே… / ‘எப்போதும் இவன் உன் / மருமகனாக முடியாது / இவன் என் / நிச்சயிக்கப்பட்ட நண்பன்’ / இப்போதும் கேட்கிறது / எனக்குள் / உன் குரல்.

இரு விழிகளாகப் பாலியல் ஒன்றே பார்வையாகக் கொண்ட இந்தப் பாழும் சமூகத்தின் பிடரியைப் பிடித்துத் திருப்பிச் சொல்லுகிறது கவிதை… ‘பார் இந்த நட்பை. பழகிக்கொள்ளலாம் இப்படியும்… பண்பட்ட மனங்களுக்கில்லை பாலியல் அச்சம். பெண்ணும் ஆணும் பேதமையின்றிப் பழகுவதே பண்பாட்டின் உச்சம்.

‘எனக்குத் தெரிய / அண்ணன் தங்கை / என்று / ஆரம்பித்தவர்களே / கணவன் மனைவியாகவும் / ஆகியிருக்கிறார்கள் / ஆனாலும் சொல்கிறேன் / நட்பு என்பது மட்டும் / நம்மைபோல் / என்றும் / நட்பாகவே இருப்பதுதான்’.

அறிமுகம் காதலாகி, காதல் கல்யாணமாகி, கல்யாணம், “நான் கொடுத்தது இவ்வளவு நீ தந்தது எவ்வளவு?’ என்று காலத்தின் போக்கில் கணிதமாகி, இல்லறம் இளைத்துச் சுருங்கிப் போகுமெனில் திருமணம் என்பது திருந்தா மனங்களின் சேர்க்கையா என எண்ணத் தோன்றும். நட்பு மட்டுந்தான் நட்பின் பொருட்டு விரும்பி அரும்பி நட்பாகவே மொட்டவிழ்ந்து மலர்ந்து நட்பாகவே காயாகிக் கனிந்து நட்பாகவே, கடைத்தேறும் காலம்வரை கனன்று கொண்டிருக்கும்.

‘நீ / நிருபித்த / பெண்மையிலருந்து / வாய்த்தது / நான் / மதிக்கும் / ஆண்மை.’

ஆண் என்றும் பெண் என்றும் அடையாளங்களைக் கழிவறைகளின் கதவுகளுக்குக் கொடுத்துவிட்டு நான் என்றும் நீ என்றும் நட்பென்பது நமதென்றும் ஆத்மாவின் இராகங்களை மீட்டிக்கொண்டு நுட்பமான இந்த உறவுக்குக் கவிதைத் தகுதி கொடுத்த கவிஞனைப் பாராட்ட வேண்டும்.

‘என் துணைவியும் / உன் / கணவரும் / கேட்கும்படி / நம் / பழைய மடல்களையெல்லாம் / படித்துப்பார்க்க / ஒரு மழை தொடங்கும் / நாள் / வேண்டும்.’

இல்லற உறவு என்பது தகிக்கும் உடல் தணலுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொள்வது. அதில் சந்தேகத்தையும் பொறாமையையும் தருவித்துக் கொண்டால் உள்ளம் ஏது? உறவு ஏது? எல்லாமே தணலுக்குத் தீனியாகிவிடும்.

மனைவியின் நண்பனையும் கணவனின் தோழியையும் நேசிக்கும் மனம் வாய்த்தால், உண்மை அன்பின் நேர்மை அதிலிருந்தால், ‘வாழ்வே’ உடலை மீறி வாழும் உன்னதமாகி விடும். அன்பை மட்டுமே பொழியும் மழையாகிவிடும்.

‘கனவில்கூட / என்னைக் / கிள்ளிப் / பார்க்கும் இந்தச் / சுரப்பிகள் / உன்னைக் / கண்டதும் எப்படி / இவ்வளவு / இயல்பாய்த் / தூங்கிவிடுகின்றன.’

ஆண் பெண் உறவில் அரிதாரம் பூசிக்கொண்டு அலங்காரமாய்ப் பவனிவரும் ‘காதல்’ என்பதினுள் கூரிய நகங்களும் கோரைப் பற்களுமாய்ப் பதுங்கியே இருக்கும் புலன்களின் வேட்கை. அங்க அடையாளங்களைப் புறக்கணித்து அம்மணக் குழவியாய் அகலக் கைவிரித்து அழகாய் ஓடிவரும் ‘நட்பு’ ஒன்றுதான் அன்பின் பரிமாணங்களிலேயே ஆழமானதும் ஆத்மார்த்தமானதும் கூட.

காமம் அற்ற காதல் தானே ‘நட்பு’ என்பது!

அன்புடன்,
மா. சண்முகசிவா
10.7.1999

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *