சாமிமூர்த்தி சிறுகதை தொகுப்புக்கு எழுதிய கருத்துரை :மௌனமாய் சில தருணங்கள்…

எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு பின் மாலைப் பொழுது…

“கிளினிக்” முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல மழை ஓய காத்திருந்தேன். மழைச் சாரலுடன், பொட்டு பொட்டாக நனைந்த சட்டையும், கலைந்த ஈரமான வெண்கேசமும், கையில் புத்தகக் கட்டுமாக அறையினுள் நுழைந்தவரை “சாமிமூர்த்தி” என்று அறிமுகப்படுத்தியவர் ஜீவானந்தந்தான்.

என் மேஜையின் மீது இலக்கியச் சிந்தனையின் சிறுகதை தொகுப்பு, புளியமரத்தின் கதை (சுந்தர ராமசாமி) கடல்புரத்தில் (வண்ணநிலவன்) சாயாவானம் (சா. கந்தசாமி) கிடை (கி. ரா.) க.நா. சுவின் விமர்சனக் கட்டுரை தொகுப்பு என ஒவ்வொன்றாய் அடுக்கி வைத்துவிட்டு “இந்த பொஸ்தகங்கள ஒங்களுக்கு வேண்டியத எடுத்துக்குங்க டாக்டர்” என்றவரை புத்தகங்களோடு சேர்த்து ஒரு புத்தகமாக பார்க்க நேர்ந்ததும் ஒரு விந்தைதான்.

அவரை இன்றுவரை அப்படித்தான் பார்த்தும், படித்தும் வருகின்றேன்.

உணர்ச்சி வசப்பட்டு உருகி வழியும் பக்கங்கள்,
சின்னச் சின்ன சலனங்களுக்கெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும் பக்கங்கள்,
அழுத்திக் கொண்டிருக்கும் வாழ்வின் சுமைகளைத் தாங்கமுடியாது
வலிக்கும் தோள்களுக்கு தடவிய, இலக்கிய களிம்புகளின் மீதியை
விரல் நுனியிலிருந்து புரட்டுகையில், பதிவாக்கிக் கொண்ட பக்கங்கள்,
ஞாபகத்தின் பொருட்டு முனைகள் மடக்கப்படாத பக்கங்கள்,

பாவனைகளற்ற, இயல்பான வாழ்வையும், ஒப்பனைகளற்ற உண்மையான
மனதையும் காட்டும் பக்கங்கள் என புரட்டப் புரட்ட சில சமயங்களில்
புதிராகவும், பல சமயங்களில் மனிதத்தை நேரடியாக ஸ்பரிசித்த பரவசம்
தரும் பக்கங்களாகவும் இருக்கும்,

இவரது அப்பாவித்தனத்தைப் பார்த்து ஆத்திரம் வந்த தருணங்களும் உண்டு.

ஜீவாவின் (அரு.சு.ஜீவா) வசவுகளை வாங்கிக்கொண்டு, தள்ளி நிறுத்தி அடிக்கும் தாயை, முட்டி முட்டி மார்பில் விழுந்து அழுதவாறே அணைத்துக்கொள்ளும் குழந்தையைப் போலாகும்; அவரை பார்க்க வேடிக்கையாக இருக்கும். அடித்துக் கொண்டே அணைத்துக்கொள்ளும் அந்த நட்பின் வலி தரும் சுகமும், எந்த மூடித் திறப்பிலோ நுரைத்துப் பொங்கி வழிகிற நேயத்தின் சுகம் தரும் வலியையும் பார்க்க பார்க்க அழகாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

***
பாறைகளின் இடுக்குகளில், போருக்கு முந்திய (PRE WAR) பழைய கட்டிடங்களின் ஜன்னல் விளிம்புகளில் என்றெல்லாம் எந்த நம்பிக்கையில் செடிகள் வளர்ந்து காற்றில் திசைகளில் கைகளை வீசிக்கொள்கிறது.

சற்றும் சாதகமற்றச் சூழலில்தானே இங்கேயும், இவரும் இவரைப் போன்றோரிடமிருந்தும் எழுத்துக்கள் முகிழ்கின்றன.

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அடுக்குமாடிக் கூண்டுக்குள், அளவான டெலிகம்ஸ் ஊதியத்தில் பிள்ளைகள் வளர்ந்து பெரிதாகிக் கொண்டிருந்த வேளையில், செலவினங்களுக்கு மூச்சு முட்டிக்கொண்டிருந்த காலமது.

ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தின் நகர வாழ்க்கையில் மனிதனை விட்டு நகர்ந்து சென்றவைதான் ஏராளம். நகராதது வறுமைதான்.

ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பகுதிநேர வேலை கிடைத்திருந்தது. தன்னையும் தன் எழுத்துக்களையும் விலைபேசி, பேரத்தை முடித்து, பேனாவின் மசியில் இழைத்து இழைத்து எழுதி கொடுத்துவிட்டு துண்டை விரித்து ஏந்தி வாங்கிக்கொள்ளாமல்,

“மன்னிச்சிடுங்க… என்னால முடியாது, நா வர்ரேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு, ஹெல்மட்டை மாட்டிக்கொண்டு மோட்டார் சைக்களில் அவர் கடந்து சென்றது முந்தியநாள் மழையில் சேறும் சகதியுமான பிரிக்பீல்ட்ஸின் புறக்கடை வீதியும் ஒரு பத்திரிக்கை அலுவலகமும் மட்டுமல்ல.

“மனசுக்கு, நல்லா இல்லே சார்… எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வந்துட்டேன்” என்றபோது அவரது மை பூசப்படாத மீசையின் மேல் வரிசை நரையுடன் கூடிய முகம் அசாதாரணமானதாக இருந்தது.

கடக்க வேண்டியதையெல்லாம் கடந்தாயிற்று.

உருண்டு, உருண்டு, நடந்து, நடந்து, கடந்து, கடந்து… ஊமைக் காயங்களோடுதான் எனினும் நண்பர்களை காண்கையில் கூப்பிய கரங்களோடு “வணக்கம் வாழ்க” என்று கூறும் கண்களின் ஒளியில் வாழ்வை தூக்கி நிறுத்தும் நம்பிக்கையின் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.

கதைகளைப் பற்றி, கதை சொல்லிகளைப் பற்றி, வாழ்வின் மேடு பள்ளங்களைப் பற்றி, சுக துக்கங்களைப் பற்றி, என்றெல்லாம் கனல் கொண்ட மனதோடு சிலரோடு மட்டும்தானே இந்த நீளமான பேச்சுக்களை தொடர முடிகிறது.

அதற்கு இசைவான, இணக்கமான மனங்களை நாடிச் சென்று அணுக்கமாக வைத்துக்கொள்ள முடிகிறதும் அபூர்வமாகத்தான் நடக்கிறது.

எழுத்தாளர்கள், அல்லது இவர்கள் எழுதுகிறார்கள் என்பதனால் மட்டுமேவா இந்த நட்பின் நீட்சி தொடர்கிறது.

அவரவரது சுபாவங்களை வைத்துத்தானே உறவுகள் தீர்மானிக்கப்படுகிறது.

மழை ஓய்ந்த மாலையின் மஞ்சள் வெயில் பூசிய மதில்களுக்கருகில் உட்கார்ந்து சாமிமூர்த்தி, ஜீவா, கந்தா, ரெசாவுடன் பேசிவந்த பௌத்த கோவிலின் பனிக்குடம் சுமந்த புல் வெளிகளில், நேயம் நீர்த்துப் போகிற அன்றாட வாந்வின் பாவனைகளிலிருந்து விலகி, கலை, இசை, இலக்கியம், மானுடம் என்று சம மன அலை வரிசையில் சிநேகம் உணர்கிற நெருக்கமான பொழுதுகளில், விரும்பிக் கூடினது போன்ற ஒரு சுகம் வருமே, அது அலாதியானதுதான்.

“அகம்” இலக்கிய வட்டம் அங்கு தோன்றியதுதான்.

எல்லோரிடமிருந்து பெறுவதற்கும், பகிர்வதற்கும் நிறைய இருக்கிறதை உணர முடிகிறது. தமிழகத்திலிருந்து அவ்வப்போது வெளிவரும் நாவல்கள், சிறுகதை தொகுப்புக்கள், சுபமங்களா, கணையாழி என நூல்களை அங்கே கொண்டு வந்து சேர்ப்பதுவும், அவைகளை தொட்டு விவாதங்கள் செய்வதும் சாமிமூர்த்தியாகத்தானிருக்கும்.

ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா என்னிடம், விமர்சனக் கட்டுரைகளில் அடிக்கடி பேசப்படுகின்ற “கரிச்சான் குஞ்சு” என்ற பழம்பெரும் எழுத்தாளர் எழுதிய எந்த நூலும் தனக்கு கிடைக்கப்பெற்றதில்லை என்று கூற, “எங்கவூர் சாமிமூர்த்தியிடம் உள்ளது, அவர் எழுதிய “பசித்த மானுடம்” என்று மகிழ்ச்சியோடு சொல்ல முடிந்தது.

தற்கால இலக்கியம் குறித்த சிந்தனை நூல்களை கொண்ட நூல்நிலையம் ஒன்றை தனிமனிதரான இவரிடம்தான் கண்டிருக்கின்றேன்.

புத்தகங்களையெல்லாம் சுமந்து திரியும் புத்தகம் இவர்.

***

உடைந்த தர்மாமீட்டரிலிருந்து குமிழிகளாக சிதறி உருண்டு ஓடும் பாதரசத்தைப் பார்க்க ஒரு சுட்டிப்பையன் அதனை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

உள்ளம் உடைந்து கைகளைப் பற்றி விழிகளில் திரண்டு வழியும் கண்ணீர் சொட்டுக்களில் வாழ்வின் மொத்த சோகத்தையும் ஒரு கணத்தில் பார்த்த தருணங்களும் உண்டு.

அப்படித்தான் அவரால் அன்பொழுக “அம்மோய்” என்றழைக்கப்படும் அவரது மனைவி, கடும் விஷக் காய்ச்சலில் நினைவிழந்து, மூளையில் ரத்தக் கசிவிருக்குமோ என மருத்துவ நிபுணர் நம்பிக்கையற்றுச் சொல்லி சென்ற அந்த கணங்களில் அவருக்கு ஆறுதல் சொல்லி, தேற்றிவிட்டு மூளையை ஸ்கேன் எடுக்க ஏற்பாடு செய்யும் பொருட்டு கீழிறங்கிச் செல்கையில், மனதுள் சோகமும் பீதியுமென புயல் திரள்கிற நேரத்தில், நைந்து போன வார்த்தைகளைக் கொண்டு நான் என்ன சொல்ல முடியும் என இறுகிப் போன பொழுதுகள் உண்டு.

வாழ்க்கை அவரை அடித்து துவைத்துக் கொண்டிருந்த நேரமது. அன்று மாலை நான் அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்ட போது, என்னை வழியனுப்ப கார் பார்க் வந்தவர்,

என்னை கொஞ்சம் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு திரும்புகையில், கையில் புத்தகங்கள்!

“நம்ம திலிப்குமார் மெட்ராஸிலிருந்து அனுப்பி இருக்கிறார். சமீபத்துல வெளியான புஸ்தகங்கள். ஜெயமோகன், தோப்பில் மீரான் நாவல்கள், இந்தாங்க… படிச்சிட்டு குடுங்க” என்றார்.

“கத புஸ்தகம் படிக்கிற நேரமா இது. என்ன சார்… என்ன பேசுறீங்க… என்று எரிச்சலோடு சொல்லிவிட்டுத் திரும்புகையில், அவர் கொடுத்ததும், நான் மறுத்ததும் வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல, என எனக்கு புரிய வெகுநேரமானது.

அன்றும் சரி, இன்றும் சரி, சாமிமூர்த்தி எனக்கு ஒரு புத்தகம் தான்.

இன்னும் படித்து முடிக்காத புத்தகம்.

–    மா. சண்முகசிவா
23-11-2000

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *