உணர்வின் வெளிப்பாடா? அறிவின் செயல்பாடா?

கவிதை என்ற மந்திரச் சொல்லுக்கு எத்தனை எத்தனை விளக்கங்கள் சொல்லப்பட்டுவிட்டன. இன்னும் சொல்வதற்கு நிறையவே இருக்கின்றன என்பதுதான் அதன் சிறப்பு. ஒரு வேளை கவிதை என்பது கடவுளைப்போலதானோ என எண்ணத்தோன்றுகிறது, எல்லோரும் தரும் எல்லாவிதமான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் மீறி தள்ளி நின்று பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது.

கவிதை என்பது அடிப்படையில் அறிவின் செயல்பாடா அல்லது உணர்வின் வெளிப்பாடா என்பது குறித்தான விவாதம் தொடர்கின்றது. கவிதைக்கு இதுவரையில் முற்றும் முடிவுமான ‘definition’ வரைவிலக்கணம் இருப்பதாகத் தெரியவில்லை. அறிவு ரீதியானா விசயங்களுக்குத்தான் இது சாத்தியமாகும். கலைவடிவங்களுக்கான விளக்கங்கள் திட்டவட்டமான வரையறைகளுக்குள்ளோ வார்த்தைகளுக்குள்ளோ கட்டுப்பட்டு நிற்காது என்றே தோன்றுகிறது.

படைப்பு மனம் தன்னை பாதிக்கும் நினைவுகளை, உணர்வுகளை, அனுபவங்களை மொழிக்குள் தளமாற்றம் செய்யும்போது கவிதை பிறக்கிறது என்கிறார்கள். கவிதையினுள் இருக்கும் இந்த ‘உள்ளுறை’ அனுபவம் வாசகனிடத்தில் ஒரு கலை அனுபவமாக அகவயப்படும்போது அது வெற்றி அடைகிறது. எல்லமே ‘சொற்கூட்டம்’ தானே. எது வெறும் செய்தியாக நின்றுவிடுகிறது, எது அழகியலின் தேவையில் கலையாக உருமாற்றம் பெறுகிறது என்பதைப் பொறுத்து கவிதை தன்னை கட்டமைத்துக் கொள்கிறது.

“வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே” என்ற வரிகள் இன்றைய கவிதை வாசகனுக்கு எந்தக் கவித்துவ அனுபவத்தையும் தராது. ஆனால் ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்’ என்ற வரியோ இன்றும் நம் மனங்களில் புதிய உடைப்புகளை உருவாக்குவதாக உள்ளது. இரண்டு வரிகளுமே விடுதலையைப் பற்றியதுதான் என்றபோதும் இரண்டிற்கும் இடையில் எவ்வளவு தூரம்” – (மனுஷ்ய புத்திரன்)

கவிதைக்கு இலக்கண வரையறைகள், வரம்புகள் ஒரு காலத்தில் தேவையானதாக இருந்தது. இன்று கவிதையும் கூட “விட்டு விடுதலையாகி” தான் நிற்கிறது. வரையறைகள் அறிவு சார்ந்தவை. கவிதை தரும் கலையனுபவம் மனம் சார்ந்தது. அறிவு அதிகபட்சம் கவிதைக்கு மிக அருகில் நம்மை அழைத்துச் செல்லக்கூடும். அறிமுகம் செய்துவைக்கும். உள்ளுணர வைக்குமா? உணர்வதற்கென்றே மூளையில் வேறொரு வலைப்பின்னல் (neural network) இருக்கிறதே. ‘அறிந்து கொள்வது’ என்பதற்கும் இடையிலான தூரத்தை நிர்ணயம் செய்யும் இடத்தில் கவிதை வாழ்கிறது.

சமீபத்தில் வெளியான “A GENERAL THEORY OF LOVE” என்ற மூன்று மனோவியல் மருத்துவர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல் “The secret” என்ற Denise levertov எழுதிய கவிதையில் ஆரம்பிக்கிறது. உடற்கூறு மனோவியல் நூலொன்று கவிதையுடன் திறப்பு காண்பது வியப்பாக இருக்கலாம். Poetry transpires at the junction between feeling and understanding- and so does the bulk of emotional life. (Thomas Lewis). உணர்தல் என்பதற்கும் புரிதல் என்பதற்குமான இடையில் இழையோடுகிறது கவிதையின் இருப்பு.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு கணித மேதை Blaise Pascel எழுதினார். The heart has its reasons whereof Reasons Knows nothing. ஆனால் அந்தக் கணித மேதைக்கு அன்று தெரிந்திருக்கவில்லை, உணர்வுகளை நிரப்பிக் கொண்டிருக்கும் மனம் வேறு, காரண காரியங்களை ஆராயும் அறிவு வேறு என்று. உணர்வுகள் ஊற்றெடுக்கும் சுரங்கமும், அறிவு வேலை செய்யும் அலுவலகமும் அருகருகே இருந்தாலும் அவை மூளையின் வெவ்வேறு பகுதிகள் என்பதை சமீபத்தில்தான் நாம் புரிந்துகொண்டுள்ளோம். உணர்வின் பெருக்கைப் போலவே சில நேரங்களில் கவிதையையும் நாம் தர்கித்து புரிந்துகொள்ள முடியாது போவதும் இதனால்தான். மனதோடு பேசும் கவிதையில்தான் கலையின் மர்மம் ஒளிந்துகொண்டிருக்கிறது. கவிதை நேரடியாக அறிவுரை சொல்ல முற்படும் போது, நம் அறிவோடு பேசும்போது கலையம்சம் விடைபெற்ருக் கொள்கிறது. கவிஞனின் பேரனுபவத்தின் பரப்பில், விரிவில் வாசக மனங்களை உள்ளிழுத்துக் கொள்வதற்கான முயற்சிதானே கவிதை என்பது.

தன் சுய அனுபவத்தின் சாரம்சத்தை கண்டு சொல்ல முற்படும் கவிதையில்தானே கலையின் உயிர்ப்பு இருக்கிறது. கவிஞனின் நுட்பமான உணர்வு, அழகுணர்ச்சி, உண்மையை தொட அவன் மனம் கொள்ளும் முன்நகர்வு, மொழியின் வீச்சு, அவனது தனி அனுபவத்தை சக மனிதனோடு அவன் கொள்ளும் பகிர்வில் உள்ள நேர்மை உண்மை, என்பன கவிதையின் தரத்தை நிர்ணயம் செய்கின்றன. உணர்வில் அரும்பி மொழியினூடாக பயணம் செய்து மலரும் கவிதை இறுதியில் வாசகனிடத்தில் விட்டுச்செல்வது கவித்துவமான அனுபவமின்றி வேறு என்னவாக இருக்கமுடியும். மொழியின் போதாமையால் துன்புறும் கவிஞன், தேங்கிப்போன, பழசாகிப்போன, பொருட்ச்செறிவற்ற சொற்களை பட்டை தீட்டி, புதுமெருகேற்றி, அதற்கு புதிய பரிமாணங்களை காட்டி ‘சொல்புதிது, பொருள் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவ கவிதையை’ அதன் மரபான வடிவங்களை மாற்றி, கவிதைக்குள், சொல்லின் பொருள் தொடர்ந்து நகர்ந்து கொண்டும் மொழியை நகர்த்திக் கொண்டும் இருக்கும் வண்ணம் தன் கவிமொழியைப் புனைந்து கொள்கிறான்; புதுபித்தும் கொள்கிறான். கவிதையின் உருவத்தை உள்ளடக்கத்தை உத்திகளை தொடர்ந்து மாற்றம் கொள்ளச் செய்யும் முயற்சியின் விளைவுதானே புதுக்கவிதை.

மலேசியா சிங்கப்பூரில்தான் மரபுக்கவிதை புதுக்கவிதை சர்ச்சை இன்னும் தொடர்கின்றது. உண்மையில் மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையே பிரச்சனை ஏதுமில்லை. மாற்றம் கொண்டு வரும் மனித வாழ்வில் தனிமனித, சமூக, மொழி, பண்பாட்டுச் சூழலில் தன்னையும் தன் மொழியையும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் கவிஞனுக்கும் காலத்துக்குமான பிரச்சனைதான் அது.

அவலமாகட்டும் ஆனந்தமாகட்டும், அவை மொத்த மனித சாதிக்குமான அடிப்படையான உணர்வுகள். ஆனால் அவ்வனுபவங்களை உணர்வது புரிந்துகொள்வது உணர்த்துவது என்பதில் ஏற்படும் மாற்றங்களில் காலங்காலமாகக் கவிதையில் கட்டுமானங்களும்… உடைப்புகளும்… ஒழுங்கமைவுகளும்… மீறல்களும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது.

இந்தப் புரிதல் இல்லாத சூழலில்தான் மலேசியாவின் புலமைமிக்க மரபுக்கவிஞர்கள் புதுக்கவிதைக்கு இன்றுவரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்க்கவிதை மரபு தெரியாத பல புதுக்கவிஞர்கள் வாக்கியங்களை வெட்டிப் போட்டுவிட்டு அதனை புதுக்கவிதை என்கின்றனர். இந்த இரண்டு சாரார்களுக்கும் நடுவில் நம்பிக்கை தரும் சில இளைஞ்ர்களின் கைகளில் கவிதை உயிர்த் துடிப்போடு தன் இருப்புக்கான போராட்டத்தைத் தொடர்கிறது.

மா.சண்முகசிவா

Share

One thought on “உணர்வின் வெளிப்பாடா? அறிவின் செயல்பாடா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *