மீண்டு எழுவேன் நான் – (ஒரு அமெரிக்க கறுப்பின பெண்ணின் விடுதலைக் கவிதை)

மூலம் : மாயா ஏஞ்சிலோ | மொழிப்பெயர்ப்பு : மா. சண்முக சிவா

வரலாற்றின் புழுத்துப்போன பக்கங்களில்
விசும்பி அழும்
உண்மைகளின் குரல்வளையை நெரித்து
உனக்கான பொய்களை, புனைவுகளை
அதன் ஒப்பனைகளோடு
நீயே எழுதிக் கொள்.
யுகயுகமாய்…
அழுக்கில் என்னை
ஆழ்த்தி வைத்திருந்தாயே
அதனையும் சேர்த்தே எழுது
என்னதான் நீ எழுதினாலும்
மேலெழும் தூசியின் து கள்ககளைப் போல
மீண்டு எழுவேன் நான்
மீண்டும் எழுவேன் நான்

எனது எழுச்சியைப் போல
எனது கவர்ச்சியுமே துன்புறுத்தும் உன்னை
என் வீட்டின் வரவேற்பறையில்
எண்ணைக் கிணறுகளின் ஊற்றுக்கண் இருப்பதுபோல
திமிராக நடந்து கொள்ளும் என்னை
பொறுத்துக் கொள்ள முடியாமல்
புழுங்கித் தவிப்பாய் நீ

புன்னகைக்கும் நிலவினைப் போல
சுட்டெரிக்கும் சூரியனைப் போல
படமெடுத்து ஆடி அடங்கும்
கடலலைகளைப் போல
மீண்டும் மீண்டும் மேலெழுந்து வரும்
நிச்சயமானதாய், நிதர்சனமானதாய்
என் நம்பிக்கைகள்.
மீண்டு எழுவேன் நான்
மீண்டும் எழுவேன் நான்

கவிழ்ந்த சிரமும் தாழ்ந்த விழிகளுமாய்
நான் உடைபடுவதை பார்க்க
நீ காத்திருக்கின்றாய்
விழும் கண்ணீர் துளிகளைப் போல
என் தோள்கள் துவழ
என் ஆன்மா அழுவதை கேட்க
நீ வேர்த்திருக்கின்றாய்

என் கொல்லைப்புரமெல்லாம் தங்கச் சுரங்கம்
எக்காளமிட்டுச் சிரிக்கும் என் எச்சில் சிதறலில்
ஆணவம் பட்டுத் தெறிக்கும்
ஆத்திரப்படத்தானே முடியும் உன்னால்

எனது பெண்ணுடலின் கவர்ச்சியை
அதன் காம்பர்யத்தைக் கூட
சகித்துக் கொள்ள முடியாது
தவிக்கின்றாய் நீ
என் வயிற்றின் அடிப்பாகம்
வயிரத்தால் இழைத்ததோ என
வியக்கும் உன் கண்களில்
வக்கிரம்தானே தகிக்கிறது.
வரலாற்றின் வெட்கங்கட்ட கட்டுமானங்களிலிருந்து….
கடந்த காலங்களின் வலி மிகுந்த வேர்களிலிருந்து….
மீண்டு எழுவேன் நான்
மீண்டும் எழுவேன் நான்

அகன்றும் விரிந்தும்
அலைபரப்பி முன்னகரும்
கருங்கடல் நான்.
குலைநடுங்கும் பயம் நிறைந்த
இரவுகளை கடந்து வந்தவள் நான்.
பகலின் வெளிச்சத்தை பிளந்து கொண்டு
சிதைந்து போன என் மூதாதையரின் சிதைகளிலிருந்து
மீண்டு எழுவேன் நான்
மீண்டும் எழுவேன் நான்

என் முன்னோர்கள் தந்த கொடையாக
அந்த அடிமைகள் கண்ட கனவாக
கனவுகள் தந்த நம்பிக்கையாக
இருண்ட எங்கள் இறந்த காலத்தை புறந்தள்ளி
இதோ புதிதாய் பிறக்கும்
எங்கள் எதிர்காலம் நோக்கி
எழுவேன் நான்
மீண்டு எழுவேன் நான்
மீண்டும் மீண்டும் எழுவேன் நான்.

Share

4 thoughts on “மீண்டு எழுவேன் நான் – (ஒரு அமெரிக்க கறுப்பின பெண்ணின் விடுதலைக் கவிதை)”

  1. Aiya avarkaluku vanakam….tv mun ungalai paartirukiren,matrapadi ungalai patri enaku etuvum teriyathu.intha talathil ungalin padaipukala kandu migavum piramibaga ullathu..maruthuvar,nanbar,padaipaali,kavinyar,inum palakonangalil ungalai kaanpatharku mikka makilchi…kandipaga naan ungalai santhikum vaipai enaku taravendum..engall tamil palliku ungalai alathu poga vendum..engal thalmaiyana vendukol.nadri aiya.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *