கரை மீறும் அலைகள்

“எல்லாமே நமக்கு இங்கு சரியாத்தானே இருக்கு. நீங்க ஏன் எப்பவும் ஏதோ இந்த இனம் ஒரு சமூக நெருக்கடியிலேயே இருக்கிற மாதிரி பேசுறீங்க” என்று என்னைப் பார்க்கும் போதேல்லாம் அங்காலாய்ப்பார் சமூகத்தின் மேல்தட்டில் சௌகரியமாக வாழும் நண்பர் ஒருவர். இந்த நெருக்கடியை ஏன் இவர்கள் உள்வாங்கிக் கொள்ளமுடியவில்லை என்ற விந்தையும் வேதனையும் இதனை எப்படியெல்லாம் நமது படைப்புகள் பேச வேண்டும் என்ற சிந்தனையும்தான் என்னை அலைக்கழிக்கும்.

பால்மரக்காடுகள் அழிக்கப்பட்டு அவை செம்பனைத் தோட்டங்களாக மாற்றம் கொண்ட காலத்திலேயே தோட்டப்புற இந்திய மக்களின் வாழ்வில் தொழிலியல் ரீதியான நெருக்கடிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. பால்மரத்தோடு ஒரு தோட்டப்புற பெண் ஏத்துளி,மங்கு,காண்டா,பீலி போன்றவற்றுடன் உறவாடிக் கொண்டிருந்த காலம் போய் செம்பனை குலை அறுக்கும் கத்தியுடனும் டிராக்டருடன் போராட வேண்டிய காலமாற்றம் தோட்டத்து வாழ்வில் சில அடிப்படைக் கூறுகளை மாற்றியது. குடிசைத் தொழில்களை தொழிற்சாலைகள் விழுங்கியது போல பால்மரங்களை பனைமரங்கள் வீழ்த்தின.

தோட்டங்கள் விற்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வீடுமனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் ‘மேம்பாடு’ காணும்போது பெட்டிப் படுக்கைகளுடனும், தட்டு முட்டுச் சாமான்களுடனும் புறநகர் பகுதியின் புறம்போக்கு நிலங்களில் அனாதரவாக வாழ்விடம் வேண்டி நின்றது இந்த இனம்.

வேலையோ வாழ்விடமோ நாளை என்ற நம்பிக்கையோ இழந்து நிற்கும் ஒரு இனத்தில் என்றும் முதலில் நழுவிச் செல்வது சமூக மதிப்பீடுகளும் ஒழுக்க வரைமுறைகளுமாகத்தான் இருக்க முடியும். குண்டர் கும்பல் கலாச்சாரம், வன்முறை, குடி என குற்றச் செயல்களின் விளை நிலமாக இந்திய இளைஞர்களின் வாழ்நிலை மாறி வந்ததை அரசோ, இந்த இனம் சார்ந்த அரசியல் கட்சியோ, பொது இயக்கங்களோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவேயில்லை. இந்திய கோட்டாவை மீற அரசு தாராளமாக அனுமதித்த ஒரே இடம் சிறைகூடம் தான்.

ஆரம்பப் பள்ளிக்கே செல்லாத இந்தியக் குழந்தை களின் தொகையும், அப்படியே சென்றாலும் படிவம் ஒன்று, மூன்று, ஐந்து என்ற ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு கட்டத்திலும் சரிந்து விழுந்து காணாமல் போகும் மாணவர்களின் எண்ணிக்கையும் மனசாட்சியுள்ள எந்த மனிதனையும் தூக்கம் இழக்கச் செய்யும்.

கீழே விழும் மாணவர்களை கைகளில் ஏந்தி தடம் மாறிச் செல்லாமல் அவனவனது திறமைக்கு ஏற்ப மாற்று வழிகளில் முன்னகர்த்தி செல்ல இங்கு எந்த நாதியும் இல்லை. மிகப்பெரிய போராட்டத்தில் பலனாக பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்கள் கூட வெளியே வரும் எந்த சமூகச் சிந்தனையுமற்ற ‘பெரிய ரோபோட்டுகள்’ (பேராசிரியர்கள்) உற்பத்தி செய்து எந்திர கதியில் தள்ளிவிடும் ‘சிறிய ரோபோட்டுகளாக’ (பட்டதாரிகள்) வெளிவரும் அவலம் இங்கேதான் நடக்கின்றது.

பல்கலைக்கழகம் போக வாய்ப்பற்ற, ஆனாலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் தரமற்ற நடுத்தர தனியார் கல்லூரிகளில் மதிப்பற்ற டிப்ளோமா சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்புச் சந்தையில் சீந்துவாரின்றி புறந்தள்ளப்பட்டு கடைநிலை ஊழியத்துக்காக பங்களாதேஷ், நேப்பாள அயலகத் தொழிலாளர்களுடன் முண்டியடித்துக் கொண்டு முகம் காட்டும் பரிதாப நிலை இந்நாட்டு பிரஜை என்று சொல்லிக் கொள்ளும் இந்திய இளைஞர்களின் தலைவிதியாக இருக்கிறது.

பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் சகல வசதிகளுடன் பிரமிக்கத்தக்க பல்கலைக்கழகங்கள் பெருகி வரும் இந்நாளில் கழிவறைகள் கூட சரியாகக் கட்டப்படாத நிரந்தரமற்ற நிலங்களில் தமிழ்ப்பள்ளிகள் ஏதோ ஒரு நெருக்கடிக்காக காத்திருக்கின்றன. இதனால் எல்லாம் எந்தச் சலனத்திற்கும் ஆட்படாத இந்திய சமூக மனம் கோயில்கள் உடைபடும் போது மட்டுமே வலியை உணர ஆரம்பித்தது. இன்றைய உலக அரசியல் அரங்கிலும் கூட காய்களை நகர்த்தும் கரங்கள் மதங்களுடையதாகத்தான் இருந்து வருகிறது. சக மனிதர்கள் காயப்படுவதைக் காட்டிலும் அவர்கள் வணங்கும் கடவுளர்களை காயப்படுவதை பொறுத்துக் கொள்வதில்லை எந்த சமூகமும். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் வரை பொறுத்திருந்து கடவுளையும் கோவிலையும் இடிக்கும் போதாவது ஏற்பட்டதே இந்த ஞானம், இது மனிதன் செய்த புண்ணியம் அல்ல, கடவுள் செய்த புண்ணியம் தான் போலும்.

கொஞ்சம் சத்தமாக சிந்தித்தாலேயே “ஐயோ இது ரொம்பவும் சென்ஸ்சிடிவான இஷ்யு சார்” என்று எங்கே சிந்தித்தது சொல்லாக மாறி வெளியில் சிந்தி விடுமோ என்று அஞ்சி நம் வாயை பொத்துவார்கள் நம் கல்விமான்களும் அரசியல்வாதிகளும். இவர்களுக்கு மத்தியில்தான் மகாத்மா காந்தியின் படத்துடன் காலனித்துவ ஆங்கில அரசிடம் நஷ்ட ஈடு கேட்டு போராட்டத்தில் இறங்கியது ஒரு பெருங்கூட்டம். எங்கிருந்து வந்தது இதற்கு இந்த தைரியம்? எத்தனை காலமாக புழுங்கித் தவித்ததின் புறப்பாடு இது? வியந்ததது உலகம். சோம்பல் முறித்து கொட்டாவி விட்டுக் கொண்டு காலை எழுந்த மேல்தட்டு மனிதர்கள் பதற்றத்துடன் கண்களை கசக்கிக் கொண்டு கதவைத் திறந்து பார்த்தனர். தேர்தல் தூய்மையாக இருக்க வேண்டும் என மலாய்க்காரர்கள் நடத்திய போராட்டமும், உரிமைக்காக இந்தியர்கள் வலம் வந்த வீதி ஊர்வலமும் அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அரசு எந்திரம், அறிவு ஜீவிகள், மேல்தட்டு வர்க மக்கள், ஊடகங்கள் இவர்கள் யாரும் புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு உண்மையை உணர வைத்தன.ஜனநாயக நாட்டில் ,வீதிப் போராட்டங்கள் நடப்பதற்கான நியாயம்தான் என்ன? சமூக, அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் தவிர்க்க முடியாத விளைவாகத்தான் பாதிக்கப்பட்ட மக்களின் வெளிப்பாடாக போராட்டம் வெடிக்கின்றது. சிறு சிறு குழுக்களாக ஆங்காங்கே அவ்வப்போது பாராளுமன்றத்தின் முன்பாக பாதகை ஏந்திய கூட்டம் கண்டனக் கடிதமோ, கோரிக்கைகளின் விண்ணப்போ கொடுத்துவிட்டு கலைந்து செல்லும். அக்கறைக் காட்டாத அதிகார வர்க்கத்தின் தோல்கள் தடிமமானவை. சமூக நெருக்கடிகளை முன்கூட்டியே பார்க்க, புரிந்துக் கொள்ள உள்ளுணர ஒரு பக்குவம் வேண்டும். மக்களின் கண்ணீரைத் துடைக்க அரசின் கரங்களுக்கு கொஞ்சம் கருணை வேண்டும். குறைகளை கேட்க செவிகள் வேண்டும். இனங்களிடையே இவர்கள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகச் செயற்கையாகக் கிழித்து வைத்திருக்கும் கோடுகளை அழித்தெழுத மனம் வேண்டும்.இவைகள் இருந்தால் போராட்டங்கள் எதற்கு?

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தங்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளின் ஏமாற்றங்களை ஏக்கங்களை , ஆத்திரங்களை, ஆட்சியாளர்களின் குற்றங்குறைகளை, வாக்குப் பெட்டி வழியாகத்தான் தெரிவிக்க வேண்டும் என்பதும், அப்போதுதான் அது புரிந்து கொள்ளப்படும் என்பதும்தான் ஜனநாயகம் செயல்பாட்டுமுறை என்றார் சட்டத்துறை அமைச்சர்.சரிதான் அதுவரையில் மக்கள் படும் பாடு?

கோயில் குருக்களைக் கடித்த நாய் செத்த பின்பு நேரே நரகத்திற்குத்தான் போகுமாம் – அதுசரி அதுவரையில் குருக்கள் படும் பாடு?

Share

2 thoughts on “கரை மீறும் அலைகள்”

 1. பலர் மனதில் கோபத்தோடு உள்ள கருத்துகள் இந்த கட்டுரை ….. ஆனால் நீங்கள் மென்மையாக சொல்லும் போது … கோபம் போய் யோசிக்க வைகிறது ….. இன்னும் சில கருத்துகளை இங்கே நீங்கள் சேர்க்கலாம்,

  1. கோயில்களுக்கு கட்டிஅழும் பணத்தில் ஒரு சிறு பங்கை கூட அறிவு வளர்ச்சிக்கு துணை வராத பணம் படைத்த வர்கம்.

  2. வாசிக்கும் பழக்கத்திற்கு விதை விதைக்காத மன்றங்களும்,கழகங்களும்,கட்சிகளும்.

  3. கூட்டம் சேர்த்து கொள்ளை அடிக்கும் கூட்டறவு கழகங்களால் மக்களுக்கு நன்மை இல்லாதது.

  4. தமிழ் உணர்வு இல்லாமல் தமிழை நேசிப்பதாக போலி வேசம் போடும் தமிழ் தலைவர்களின் போக்கு.

  5. எப்போதும் படித்த பட்டத்தாரிகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் அதிகார வர்கம்.

  உங்கள் கட்டுரை எனக்கு ரொள்த்திரம் கற்று தர வில்லை. மனமே சிந்தை செய் என்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *