“சிறுகதைகளில் ‘கருத்துக்களை’ச் சொல்லலாமா?”

“இல்லை கருத்துக்களைச் சொல்ல சிறுகதை வடிவத்தை தேர்வு செய்யாதீர்கள். சிறுகதை கருத்துக்களைச் சொல்ல உண்டான இலக்கிய வகை இல்லை. கருத்துக்களை கட்டுரையில் சொல்லுங்கள்”.

இது பாலபாடம்.

கேட்டவர்: திரு.ரெ.சண்முகம்
பதிலளித்தவர்: திரு. பிரபஞ்சன்

அஸ்ட்ரோ நாவல் போட்டியின் பரிசளிப்பு விழாவில் நடந்தது இது. சிறுகதையில் திட்டவட்டமான ஒரு ‘கதை’யைச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படை இலக்கணமே இன்று மறுபரிசீலனைக்குள்ளாகியுள்ள காலகட்டத்தில் நாம் இன்னமும் கருத்துக்களைச் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்ற சர்ச்சையில் மிகவும் பின் தங்கியுள்ளோம்.

திரு.ரெ.ச. மட்டுமல்ல இன்றும் இன்னமும் நம் நாட்டின் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு பிரபஞ்சனின் இந்த பதிலில் உடன்பாடு இல்லைதான். இதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று சிறுகதை பற்றிய நமது கருத்தமைவுகள். அவற்றை உருவாக்கித் தந்த நம் முன்னோடிகள் .

மேலை நாடுகளிலோ தமிழகத்திலோ கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களின் பரப்பின் உள்ளடுக்குகளில் நிகழ்ந்திருக்கும் பல்வேறு மாற்றங்கள் குறித்தோ மாற்றுச் சிந்தனைகள் குறித்தோ நம் நாட்டு இலக்கியவாதி களிடையேயோ, கல்விமான்களிடையேயோ எந்த ஆரோக்கியமான விவாதமும் நடந்ததாக தெரியவில்லை. படைப்பு நோக்கிலும் சிந்தனையளவிலும் மாற்றுச் சிந்தனைகளுக்கு- விமர்சனங்களுக்கு இடம் இல்லாத எழுத்துலகத்தில் புதிய பார்வைகள், புதிய உத்திகள், புத்திலக்கியங்கள் எப்படி தோன்றும்?

கருத்துக்களுக்கு இலட்சியங்களுக்குக் கதை வடிவம் கொடுத்து கதை பின்னிய அகிலன், நா.பார்த்தசாரதி போன்ற வர்களின் படைப்புக்களும் பார்வைகளுமே நமக்கு முன்னு தாரணங்களாக, முடிந்த முடிவாக, இலக்கியம் குறித்த ஆழ்ந்த மனப்பதிவுகளாக இன்றும் இருந்து வருகிறது.

இதில் முனைவர் டாக்டர் தண்டாயுதத்தின் பங்கு மிக முக்கியமானது. மலாயா பல்கலைக்கழகத்தில் புத்திலக்கியம் பயிற்றுவித்த முனைவர் அவர்கள் பல்கலைக் கழகத்தினுள்ளும் வெளியிலும் அன்றைய காலகட்டத்தில் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் போன்ற ஆளுமைகளைப் பற்றி பேசியதாகவோ அவர்களது படைப்புகளைப் பற்றி விவாதித்ததாகவோ தெரியவில்லை. அவரும் அகிலனையே தன் ஆதர்ஷ புருஷனாகக் காட்டிச் சென்றார்.

ஓர் ஆரோக்கியமான இலக்கிய விவாதம் நம்மிடையே நடந்ததே இல்லை. விவாதம் என்பது தேடலின் ஒரு வழிமுறை அல்லவா? விவாதம் என்பது எப்போதுமே உணர்ச்சிகரமான விஷயமாக, சினமூட்டும் சர்ச்சையாக மட்டுமே பார்க்கப்பட்டால் வளர்ச்சிக்கு இடமேது? படைப்புகளின் கலையம்சங்களை, கட்டுமானங்களை, கதை சொல்லும் பாணியை, கதையின் அழகியலை விமர்சிப்பது தனிமனித வாழ்வில் உயர்ந்த உன்னத மனிதர்களாக திகழ்ந்த நம்முன்னோர்களை அவர்களிடையே விமர்சிப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிற விபரீதம், இங்கே நிகழ்ந்து வருகிறது.

அகிலன் நேர்மையை நல்லொழுக்கத்தை தன் எழுத்திலும் வாழ்விலும் நாட்டிச் சென்றவர். ஆனால் அவரைப் பின்பற்றியே அவரது பாணியில் காலங்காலமாக எழுதுவது என்பது எப்படி நம்மை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லும்? மு.வ வைப் போல – மு.வதான் எழுத வேண்டும். புதுமைப்பித்தனைப் போல புதுமைப்பித்தன் தான் எழுதவேண்டும். ஒரு பாதிப்பால் தன் ஆதர்சன எழுத்தாளனைப் போல் எழுத ஆசை கொள்வான்தான் எந்த ஆரம்ப நிலை எழுத்தாளனும். ஆனால் மெல்ல மெல்ல அவன் தனக்கென ஒரு நடையை, ஒரு மொழியை நாளடைவில் அமைத்துக் கொள்வான். அமைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவன் நகல் எழுத்தாளனாகி காணாமல் போய்விடுவான்.

மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய சீர்திருத்தக் கருத்துக்களைத் திரட்டி சிறுகதை வழியாக நேரடியாக சொல்லி இந்த மக்களை திருத்த வேண்டும் என்ற கடப்பாடு தனக்கிருப்பதாகவும் அதனை இந்த சமூகத்திற்குச் செய்யும் சேவையாகவும் செய்ய வேண்டிய கட்டாயத்தில், தான் இருப்பதாக தன்னை கற்பிதம் செய்து கொள்ளும் எழுத்தாளனின் நோக்கம் உயர்வானதுதான். ஆனால் அதற்காக சிறுகதை பற்றிய அழகியலோ, வடிவ சிந்தனையோ கிஞ்சிற்றுமில்லாத ஒன்றை உற்பத்தி செய்து அதை சிறுகதைதான் என்று நிறுவ முயற்சிப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

கட்டுரையில் ஒரு விவாதம், ஆசிரியனுக்கும் வாசகனுக்குமான விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும். சிறுகதையில் அப்படி அல்ல. சிறுகதை முடிந்த பின்பும் வாசகனுள் அது தொடரும். வாசகனது கற்பனையின் நீட்சிக்கு இடம் தரும். அடுத்த தளம் நோக்கி வாசகனை உந்தித் தள்ளும். அடிப்படையில் இரண்டுமே “புரிதல்” என்ற தளத்தில் இயங்கினாலும் சிறுகதை ஒரு கலையாக, ஓவியம், சிற்பம், இசையைப் போல, ரசனை மிக்கதாக வாசகனின் கற்பனையை பல திசைகளில் பரவப்படுவதாக இருக்கும். ஆனால் கருத்துக்கள் தாங்கி வரும் கட்டுரை, நாம் கட்டுமானம் செய்து வைத்துள்ள கருத்துப் பரப்பில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் அல்லது மறுதலிக்கப்படும்.

‘நான் சொல்கிறேன், நீ கேள்’ என்பதில் பகிர்வு இல்லை. கதாசிரியனுடன் வாசகனை ஓர் உணர்வு தளத்தில் சந்திக்க வைத்து, அனுபவப் பகிர்வு, உணர்தல் என்று முன்னகர்த்தி செல்லும் கதையின் இடைவெளி வாசகனை தன் கற்பனையால் அந்த இடைவெளியை பூர்த்தி செய்து கொள்ளவும் இடமளிக்கும்

சிறுகதை முடிந்த பின்பும் வாசகனுள் அது தொடரும். எழுத்தாளனின் அனுபவம் வாசகனின் அனுபவமாக விசாலமடைகிறது. ஒரு சிறந்த படைப்புகளோடு வாசகன் மேற்கொள்ளும் பயணம் பரந்து விரிந்த மனவெளிக்கு கதவை திறந்து விடுகிறது. செழுமையான அனுபவங்களின் சேர்மானங்களில்தானே வாழ்வு அர்த்தம் பெறுகிறது. இவையெல்லாம் கதாசிரியன் கலைஞனாக உருமாற்றம் கொண்டால்தானே சாத்தியப்படும்.

கதாசிரியன் கலைஞனாகும் காலமாற்றம் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகளும் ஒரு சிலவற்றை பிரச்சார நோக்கில் இனங்காண்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. ஆனால் வளர்ச்சிப் பாதையில் இரண்டாவது காலகட்டத்தில் இதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுக் கலைப்பாதையில் அவர் உறுதிப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. ‘பிரச்சாரத்தின் கீழ்மைகளை ஒரு கலைஞனாக நின்று அவர் ஏற்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டார்’ என சுந்தர ராமசாமி புதுமைப்பித்தனை இனங்காட்டுகிறார். “பிரச்சாரங்களை விட கலைஞனே வாழ்வின் மீது உண்மையான ஈடுபாடு கொண்டி ருக்கிறான். பிரச்சாரங்களின் ஈடுபாடு வாழ்வின் மீதல்ல. அவன் கொண்டிருக்கும் கருத்துலக முடிவுகள் மீது, வாழ்வு அவன் முடிவுகளுக்கு எதிராடும் போது அவன் புறக் கணிப்பது தன் முடிவை அல்ல; வாழ்வை” (வேதசகாய குமார்).

சிறுகதை எதைச் செய்ய வேண்டும் என்பதை கதாசிரியன் தான் தீர்மானிக்கிறான். அனுபவத்தை பொதுமைப்படுத்த வேண்டுமாறு, பகிர்ந்து கொள்ள வேண்டுமென நினைத்தானாகில் வாசகனின் உள்ளுணர்வோடு தொடர்பு கொள்கிறான். மாறாக தன் கருத்துக்களை வலியுறுத்த வேண்டும் என்று எண்ணுவானாகில் அறிவு நிலையிலான விவாதத்தை முன்னிருத்துவான். “அனுபவம் உணர்த்தப்படுகிறது என்பதற்கு பதிலாக சிந்தனை நிலைநாட்டப்படுகிறது. இது அனுபவ வாழ்விற்கு புறம்பானது. கலையாகும் தகுதியற்றது”. (வேதசகாயகுமார்).

நமது பெரும்பாலான கதைகள் கதாசிரியனின் கருத்தை, சிந்னையை நிலைநாட்டவே முற்படுகின்றன. அதற்காகவே கதா பாத்திரங்கள் படைக்கப்பட்டு பேச வைக்கப்படுகின்றன. அந்த பேச்சினிலெல்லாம் கதாசிரியனின் குரலே ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த கதைகளுக்கு வாசகர்களிடமிருந்து வரும் பாராட்டும் “அருமையான கருத்தை ஆசிரியர் சொல்லியிருந்தார்” என்ற ரீதியில் இருக்கும். இந்த வகையான போற்றுதல்களில் எழுத்தாளனும் புளங்காங்கிதம் அடைகிறான்.

நமது வானொலி அறிவிப்பாளர்கள், நேயர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்தக் ‘கருத்துக்களை’ அள்ளி அள்ளி வழங்குவார்கள். ஆழமற்ற, சாரமற்ற, அலுத்துப் போன கருத்துக்களே மீண்டும் மீண்டும் நம்மை வந்தடைந்த வண்ணமிருக்கும். பிறந்தநாள் வாழ்த்து நேரத்திலும் கூட நேயர் ‘நானும் ஒரு கருத்துச் சொல்லி விடுகிறேனே’ என்று மன்றாடுவார்.

எல்லோரிடமும் ‘கருத்துக்கள்’ நிறையவே இருக்கின்றன. அவற்றை எல்லோருக்குமே சொல்ல வேண்டும் என்று ஒரு துடிப்பு இருக்கின்றது. கருத்துக் களாலானதோ இந்த உலகம் என்று வியக்க வைக்கிறது. இதனாலெல்லாம் பாவம் ‘சிறுகதை’ என்ற வடிவம் தான் சிதிலமடைந்து வருகிறது.

மொழிசார்ந்த, வடிவம் சார்ந்த எண்ணற்ற சாத்தியங்களை நிகழ்த்தும் ஒன்றாக சிறுகதை விரிவு பெற்றுள்ளது. கவிதைக்கும் சிறுகதைக்கும் இடையிலான இடைவெளி கணிசமாக குறைந்து பல சந்தர்ப்பங்களில் சிறுகதை கவிதையின் குணாம்சங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.

“சிறுகதை தன் முதன்மையான அம்சமான ‘ஒருமை’ (unity)யை பின்னகர்த்திவிட்டு நாவல்களின் குணமென்று கருதப்படும் ‘பன்முகத்தன்மை’யை ஏற்றி,வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலுமே மாற்றங் கொண்டுவரும் இக்காலக் கட்டத்தில் நாம் இன்னமும் கருத்துச்சொல்லலாமா” என்ற கேள்விக்கு விடை தேடுகின்றோம்.

பல கதைகளில் (என் கதைகள் உட்பட) கதாபாத்திரங்கள் இருக்கின்றார்கள். கருத்துக்கள் இருக்கின்ற, ‘சிறுகதை’ எங்கே என்றுதான் தேடவேண்டி யுள்ளது.

எப்போதோ படித்த கவிதை ஒன்று ஞாபகம் வந்தது

‘மிளகு இவ்வளவு கிராம்
புளியும் பூண்டும் கொஞ்சம்
தக்காளி,சீரகம், கொத்தமல்லி
சிறிதளவு கொதிக்கின்ற தண்ணீரில்
இதையும் போட்டு
பின்பு அதைப் போட்டால்
ரெடி

இதையெல்லாம் போட்டு
யாரு வச்சாலும் ரசம் வரும்
யாரு வச்சா ருசி வரும்’

Share

One thought on ““சிறுகதைகளில் ‘கருத்துக்களை’ச் சொல்லலாமா?””

  1. Rasam varum rusi varuma enpatutan indraya padaippaalanin kelvi.Mu.Va.,Agilan pondravargalin padaipugalil rasamum rusiyum iruntatu,kalaiyamsam iruntatu,virasam uppai pondru naasukkaga soliyiruntaargal.Anaal inru…Atanal otukkave mudiyatu.putiyavargalai varaverkirom,palamayai otuki alla.Taram,taguti iruntaal tane valarum,varalaaru padaikkum…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *