மெய்பொருள் காண்பது அறிவு

யு.பி.எஸ்.ஆர் எனும் ஆறாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 917 ஜோடி கண்களில் வெற்றிக் களிப்பையும் பல்லாயிரக்கணக்கான கண்களில் கவலை, சோகம், விரக்தி, தோல்வி, ஏமாற்றம் என்ற எண்ணற்ற எதிர்மறை உணர்வுகளையும் எழுதிச் சென்றது. ஆண்டு தோறும் நடந்தேறும் நாடகம்தான் இது.

7ஏ வாங்கிய குழந்தைகளின் புகைப்படங்கள், சக மாணவர் புடைசூழ, ஆசிரியர்களின் ஆசிகளோடு பெற்றோர்களின் அரவணைப்போடு பத்திரிகைகளில் பரவலாக வெளியிடப்பட்டிருந்தன. ஆங்காங்கே இயக்கங்களும், நிறுவனங்களும், தமிழ்ப் பள்ளிகளின் நலனில் அக்கறையுள்ள பரோபகாரிகளும், சமூகப் பிரமுகர்களும் இந்த 7 ‘ஏ’ வாங்கிய குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கி விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டார்கள்.

வெற்றியைக் கொண்டாடலாம்தான். உழைத்து, படித்து, ‘ஏ’க்கள் வாங்கிய மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தலாம்; உற்சாகப்படுத்தலாம்; இன்னும் பல வெற்றிகளை அவர்கள் வாழ்வில் சாதிக்க இந்த வெற்றி ஓர் ஆரம்பமாக, அடித்தளமாக அமையலாம். அதையெல்லாம் நாம் குறை சொல்லவில்லை. ஆனால், நமது ஆதங்கம் இத்தகைய தேர்வு முறை எத்தனை வெற்றியாளர்களை உருவாக்கியது என்பதல்ல. எத்தனை குழந்தைகளின் மனதில் தோல்வியை விதைத்து அவர்களைத் துவண்டு விழ வைத்தது என்பதுதான். சென்ற ஆண்டு 5ஏக்கள் எடுத்தும் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவி இன்னமும் என் மனதில் அழுது கொண்டுதானிருக்கின்றாள்.

போட்டி பொறாமையை வளர்க்கின்றது; பொறாமை இயலாமையை வளர்க்கின்றது; இயலாமை தோல்வி மனப்பான்மையை, தாழ்வு மனங்களை உருவாக்குகின்றது. பன்னிரண்டு வயதுள்ள பிஞ்சு மனங்களில் ஏற்றதாழ்வை உண்டு பண்ணவா இத்தகைய தேர்வுகள், ‘ஏ’க்கள், விருதுகள், விழாக்கள்? வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவது தவறன்று. ஆனால், எல்லாக் குழந்தைகளுமே பாராட்டுக்குரியவர்களாக நம்மால் ஆக்க முடியவில்லையே. ஆழ்ந்து பார்த்தால் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் பாராட்டுக்குரிய அம்சங்கள் எவ்வளவோ உள்ளன. அதை வளர்த்தெடுக்கத் தெரியவில்லையே நமக்கு. மேலை நாடுகளில் இத்தகைய தேர்வு முறைகளைத் தவிர்த்துவிட்டார்கள். அங்கெல்லாம் குழந்தைகளின் மனோவியல் படித்தவர்கள் கல்வி இலாகாக்களில் அதிகாரிகளாக, பாடத்திட்டங்களை வகுத்தளிக்கும் ஆசிரியர்களாக இருந்து மாணவர்கள் பயிலும் முறைகளையும் பயிற்றுவிக்கும் கலையையும் அடுத்தடுத்தப் படிநிலைகளுக்கு மேலெடுத்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு மாணவனும் தன்னுடைய முழு ஆக்கசக்தியையும் (Potential) புரிந்து கொள்ளவும் தன்னை வளர்த்தெடுக்கவும் அவ்வாசிரியர்கள் துணையாகவும் தூண்டுகோளாகவும் இருக்கிறார்கள். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? கூட்டமாக ஒரு பூங்காவில் அவரவர் சக்திக்கு ஏற்ப ஓடி ஆடி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை வரிசையாக நிற்கச் செய்து ஓட்டப் பந்தயம் நடத்துகிறோம். முதல், இரண்டாவதாக வந்த குழந்தைகளை வெற்றி பெற்றவர்களாகக் கொண்டாடுகிறோம். மீதமுள்ள குழந்தைகளையெல்லாம் தோல்வியாளர்கள் என்று சொல்லாமல் சொல்லி, பட்டம் சூட்டி பிஞ்சு மனங்களைக் கருக விடுகிறோம். ஓரங்கட்டப்பட்ட தாழ்வு மனப்பான்மை மிகுந்திருந்தும் ஒரு சமூகத்தில், இன்னமும் மோசமாக, ஓரங்கட்டப்பட்ட, தாழ்வு மனப்பான்மை உள்ள குழந்தைகளை வெற்றிகரமாக உருவாக்கித் தருகின்றோம். இத்தகைய கல்வி/ தேர்வு முறைகளில் முதலில் பலியாவது குழந்தைகளின் சுய கௌரவம்தான்.

கல்வியின் நோக்கம் அறிவை வளர்ப்பது என்பது மாறி குதிரைப் பந்தயப் போட்டியில் குதிரைகளைக் களமிறக்குவது போலாகிவிட்டது. 7ஏக்கள் என்ற இலக்குகளைத் தொட்ட குதிரைகளை (குழந்தைகளை) முதுகில் ஏறி ஓட்டிய ஆசிரியர்/ பள்ளிகள் பாராட்டிக் கௌரவிக்கப்படுவார்கள். அந்தக் குதிரைகளின் மேல் பணம் கட்டியவர்கள்/ உரிமையாளர்கள் (பெற்றோர்கள்) ஏக்கள் வாங்கிய சான்றிதழ்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு களிப்பில் குதித்து ஆரவாரிப்பார்கள்.

கல்வியின் நோக்கம் கற்பது என்ற இனிய அனுப வத்தைத் தருவது என்பதில் இங்கே யாருக்கும் நம்பிக்கை இல்லை. கேட்கப்பட்ட வினாக்களுக்கு ஏற்கெனவே தயார் செய்து தரப்பட்ட விடைகளை மனனம் செய்து தருவதன் மூலம் ஆசிரயர்/ பெற்றோர்களின் எதிர்பார்ப்பு களைப் பூர்த்தி செய்யும் புத்திசாலிகளாக இருந்தாலே போதும், அவர்கள் வாழ்வில் வெற்றியடைந்து விடுவார்கள் என்று நம்பவைக்கப்படுகிறார்கள்.

பொதுவாகவே பெரும்பாலான மலேசிய இந்திய பெற்றோர்கள் மிகவும் சுமாரான கல்வித் தகுதிகளைப் பெற்றவர்கள். தங்களால் சாதிக்க முடியாததைத் தங்களின் குழந்தைகள் சாதிக்க வேண்டும் என்ற தணியாத வேட்கை உடையவர்கள். இவர்களது இலட்சியங்களும் இலக்குகளும் கனவுகளும் கற்பனைகளும் 7ஏக்கள் என்ற ஒற்றை இலக்கை குறிவைத்து ஓடுவது தான்.

சமூகத்தின் அறிவாளிகளும் ஆசிரியர்களும், படித்தவர்களும் பள்ளிகளும் இந்த இளம் பிஞ்சுகளை இலக்குகளை நோக்கித் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். கல்வி அமைச்சு, பாடத் திட்டம், தன்முனைப்புக் கருத்தரங்குகள், டியூசன் சென்டர், பகுதிநேர- முழுநேர ஆசிரியர்கள் போட்டிக்கான களம் அமைத்துக் கொடுக்கின்றார்கள். குழந்தைகள் தங்களின் குழந்தைமையைத் தொலைத்துவிட்டு ஏக்களை நாடிப் பதைக்கும் மனங்களோடு ஓடுகின்றார்கள் அல்லது விரட்டப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பிள்ளையும் இறைவனின் பிரத்தியேகமான படைப்பு. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஏதோ ஒரு திறமை, நுட்பமாக ஒளிந்திருக்கின்றது. அதை வளர்தெடுத்து, அந்தக் குழந்தை தன்னைக் கண்டடைவதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மனனம் செய்ததைத் தடம் மாறாமல் இடம் பெயர்ந்து பதிவு செய்வது எப்படி என்று பயிலரங்கம் நடத்துவதே கல்வியின் நோக்கமாக உள்ளது.

ஆறாம் வகுப்பு ஆரம்பத்திலேயே எல்லோருக்கும் போட்டிக்குத் தயாராவதில் சூடு பிடித்து விடுகின்றது. பள்ளிகள் “7ஏக்கள் எடுத்துருவியா? எடுத்தாதான் நீ நல்லபிள்ளை… எடுத்தே ஆகணும், பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல பெயர் எடுத்துத் தரணும்” என்பது போன்ற எதிர்ப்பார்ப்புகளுக்கு தன்னால் செயல்பட முடியாவிட்டால் என்ன செய்வது என்ற மன அழுத்த நோய்க்கு மழலையின் மனதில் விதை தூவி மகிழ்கிறது.

நமது பள்ளிகளில் விவாதங்களுக்கு இடமில்லை. ஒரு வாய் பேச நாற்பது ஜோடி காதுகள் கேட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைகளை கேள்வி கேட்கத் தூண்டும் விதமாகச், சுயமாகச் சிந்திக்க வழிகாட்டும் விதமாக ஆசிரியர்களின் பேச்சு இருக்காது. “அதிகப்பிர சிங்கித்தனமாகப் பேசாமல், அநாவசியமாகக் கேள்விகள் கேட்காமல் சொன்னதைக் கேட்டுக்கொள்” என்பதுதான் ஆசிரியர்களின் இன்றைய கல்வி அமைப்பின் கட்டளையாக இருக்கிறது. கேள்விகளையும் சிந்தனைகளை ஒடுக்கும் சூழலில் சொன்னதைத் திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளை பாடத்திட்டத்தில் புரிந்தோ புரியாமலோ மனனம் செய்து மறுப்பதிப்பு செய்யும் மாணவர்களே வெற்றி அடைகிறார்கள். நம்மிடையே புதிய கண்டு பிடிப்புகள் இல்லாமல் போனதற்கு இதுதான் முக்கியக் காரணம். இந்தக் குழந்தை களின் சுதந்திரமான சிந்தனை களைச், சிறகுககளை இன்றைய கல்வி அமைப்பு கத் தரித்து விடுகிறது. உலக அறிவியல் அரங்கில் நமது பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஆய்வேடுகள் (Thesis) நமது விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகள் அங்கீகாரம் பெறாமல் போனதற்கான காரணங்களை ஆராய வேண்டும்.

கற்பனையின் வளமான விளைநிலம் குழந்தைகளின் மனம். யாருக்கும் அதைப் பற்றிக் கவலை இங்கே இல்லை. படைப்பு மனத்தைப் பாழாக்கிச் “சொன்னதைச் செய்”, “சொல்லிக் கொடுத்ததைத் திரும்ப எழுது” என்று கட்டளைகளுக்கு அடி பணிந்து சேவகம் செய்யும் அடிமை மனங்களை உருவாக்க இந்தக் கல்விமுறைகள்தான் சிறந்தவை என்று காலனித்துவ அரசாங்கங்கள் கண்டு பிடித்துக் கொடுத்துச் சென்றதைப் பத்திரமாகப் பாது காத்து வருகின்றோம் காலங்காலமாக. சுதந்திரமாக இயங்கும் குழந்தையின் மனதைச் சுருங்கிப்போக வைப்பதில் நாம் வெற்றி அடைந்துள்ளோம். இவர்கள்தான் பின்னாளில் பட்டதாரிகளாக உருமாறி கைகட்டி வாய் பொத்தி மாத ஊதியத்தை எதிர்ப்பார்த்து சேவகம் செய்யும் ஊழியர்களாக, அரசு மற்றும் நிறுவன நிர்வாக இயந்திரங்களின் பல்சக்கரங்களில் நசுங்கி தங்களின் தனித்தன்மைகளை இழந்து காணாமல் போகிறார்கள். எந்த சமூக சிந்தனையோ போராட்ட உணர்வோ கற்பனை வளமோ அற்ற இத்தகைய பட்டதாரிகளை, அறிவார்ந்த மாத சம்பள கூலிகளை வெற்றிகரமாக உருவாக்கி தர இத்தகைய பாடத்திட்டங்களும், பல்கலைக்கழகங்களும்தான் எந்த அரசுக்கும் தேவை.

உலகத் தர வரிசையில் நம் நாட்டுப் பல்கலைக் கழகங்களின் நிலை பரிதாபகரமானதாக இருப்பதற்கும் இத்தகைய கல்வி முறைகள்தான் காரணம்.

ஏக்களில் குவிமையம் கொண்டுள்ள ஆசிரிய பெற்றோர்களின் பார்வைகளை, முழுமையான மலர்ச்சி நோக்கி அழகாக மலரும் குழந்தைகளின் ஆளுமையின் வளர்ச்சிக்கு எப்படி திசை திருப்புவது?

தேர்வுகளே! மதிப்பெண்களை நீங்கள் மென்று ருசிக்க எங்கள் மழலையர்களைக் கொன்று விடாதீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. இதையே தான் கவிஞர் அப்துல் ரகுமான் இப்படிச் சொன்னார்:

“புத்தகங்களே எங்கள் குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்”.

Share

2 thoughts on “மெய்பொருள் காண்பது அறிவு”

  1. கல்வியின் நோக்கம் அறிவை வளர்ப்பது என்பது மாறி குதிரைப் பந்தயப் போட்டியில் குதிரைகளைக் களமிறக்குவது போலாகிவிட்டது. – இன்றைய கல்வி முறை, அறிவை வளர்பதற்கு மாறாக வட்டத்துக்குள் சிந்தனையும் மனப்பாட முறையுமே கொண்டுள்ளது. புள்ளிகள் என்பதே இன்றைய கல்வி வளர்சியாகி போய் விட்டது. தனி தன்மை எல்லோரிடமும் உண்டு. எல்லா மாணவனும் திறமையாளந்தான் …. துறைதான் மாறுபடுகிறது ……… என் தேர்வு புள்ளிகளை வைத்து என்னையும் திறமை இல்லாதவன் என்றுதான் பலரும் சொன்னார்கள் ……. நான் போட்டிக்கு தயாரான போது பின் வாங்கியவர்கள் பலர் …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *