தரிசனம்

சிலை சிரிக்குமா என்ன ?

“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணராஜ தஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லஷ்மீம் ஜாத வோதோ மாஆ – வஹ தாம் ம ஆவஹ..”

மந்திர சுலோகங்களை வாய் உச்சரிக்க, கைகள் வெங்கலக் குடத்தைக் கவிழ்க்க, நீர் அருவியாய்க் கொட்ட, அர்ச்சகர் மனம் மட்டும் எங்கோ, எதிலோ அலை பாய்வதை அறிந்து கொண்டவள் போல் முறுவலித்து நின்றாள் அம்மன்.

மஞ்சள் வண்ணத் திரைச்சீலை கசங்கலாக, கொஞ்சம் அழுக்காக, யாரோ குங்குமக் கையைப் பல தடவைகள் அதில் துடைத்துக் கொண்ட அடையாள மிச்சத்தோடு காற்றில் அசைந்தது.

“பத்துமலைக்கு எப்படியும் இன்னிக்கு சம்பளம் கொடுத்தரணும், கோவில் கமிட்டித் தலைவர் கையக் கால பிடிச்சி கூத்தாடியாவது, மாசம் கொறைஞ்சது அம்பதுனு இந்த ஆறு மாசத்துக்கு முன்நூறு வெள்ளி வாங்கி அவன்கிட்ட கொடுத்தாத்தான் நேக்கு நிம்மதியா தூக்கம் வரும். இவ்வளவு நாள் தள்ளிப் போட்டுட்டா மாபாவிகள்… இனியும் தள்ளிப்போடவிடப்பிடாது… இவாளெல்லாம் நம்பி நான்ல முட்டாள்தனமா அவன் கிட்ட வாக்கு கொடுத்துட்டேன். இப்போ முழுச்சுண்டுண்ணா இருக்கும்படியா ஆயிடுத்து…”

எண்ணங்கள் வட்டமிட்டு வட்டமிட்டு மீண்டும் மீண்டும் அதே இடத்தில் சிறகுமடக்கி அமர்ந்து கொண்டன. “ஜாத வேதோ லஷ்மீ மநப காமினீம் யஸ்யாம் ஹிரண்யம்… விந்தேயம் காம்சவம் புருஷா அஹம்..”

தலையைச் சிலுப்பிக் கொண்டு சுலோகத்தை விட்ட இடத்திலிருந்து தொடர, மீண்டும் எண்ணங்கள் கிளை பிரிந்து நீண்டன. வாயின் முணுமுணுப்பில் அந்தச் சுலோகங்கள் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருந்தன.

“அம்பாளுக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் ஒட்டாமல், ஒடுங்காமன்னா இந்தப் பித்துக்கொள்ளி மனசு பத்துமலை சம்பளம் பத்தி பேயாய் ஆட்டம் காட்டி அலைக்கழிக்கிறது” சலிப்புடன் அந்தச் சிந்தனையை உதறிவிட்டு சேலையை எடுத்து அம்மனுக்குச் சுற்றும் போது திரைச்சீலையை மெல்ல விலக்கிவிட்டு காற்றின் கையைப் பிடித்துக்கொண்டு கருவறையின் உள்ளே நுழைந்தது மல்லிகையா இல்ல மரிக்கொழுந்தா… அல்லது இரண்டும் கலந்ததன் மணமா என நினைவு ஓடியது.

“இதுவுமே பத்துமலை கொடுத்த கொடைதானே. அவனில்லாவிட்டால் ஏது இந்த நந்தவனம். என் நாசிக்கு இந்தப் பூமணம் எல்லாம்.

ஏதோ ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்… அழகான இந்த இடத்தில, நதிக்கரையோரமா, அம்பாள் திவ்யமா குடியிருக்கா… வைகையைப் பார்த்துண்டு மீனாட்சி தரிசனம் தராப்பல… ஆனா கோவில சுத்தி இப்படியா புல்லும் புதருமா காடா மண்டிக் கிடக்கணும்னு ஏதோ எதார்த்தமாத்தான் சொன்னேன். ஒரு நாளா, ரெண்டு நாளா.. ஒரு வாரமா, ராப் பகலா ஒத்த ஆளாண்ணா நின்னு கொத்து கொத்துனு கொத்தி, எல்லாத்தையும் சுத்தம் பண்ணி சொலிக்க வைச்சுட்டானே இந்த ஊமையன்.”

“ஊமையன்” என்ற நினைவு வந்த மாத்திரத்திலேயே அர்ச்சகருக்குத் தன்னுள் அவன்பால் மேலும் இரக்கம் சுரந்தது.

“ச்சே…ச்சே எல்லோரையும் போல நானுமா அவன ஊமையன்னு சொல்லணும்… ஒருத்தருடைய அங்கஹீனத்த குறிப்பிட்டு அவாள பேர் சொல்றது ரொம்ப தப்பில்லையோ… மறந்தும் ஊமையன்னு சொல்லிடப்படாது…” திருத்திக் கொண்டார்.

பத்துமலை அப்படியொன்றும் பிறவிச் செவிடோ ஊமையோ அல்ல. ஐந்து வயதில் வந்த வலிப்பு நோயில் அவன் நாவின் நரம்புகள் பாதிக்கப்பட்டது போக கூடவே வலது காலும் பலஹீனப்பட்டுப்போய் எல்லாரையும் போல சரளமாக அவனால் பேச முடியாமல் போய்விட்டது. கஷ்ட்டப்பட்டு ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்வான். அதுவும் யாருக்குமே புரிவதில்லை. பெரும்பாலும் பேசுவதாய் எண்ணிக் கொண்டு போடுகிற சப்தம் ஏதோ அர்த்தமற்ற இரைச்சலாய்த்தான் முடியும். பேச எத்தனிக்க அவன் படாத பாடுபடுவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அப்போது அருகில் இருப்பவர்கள் முகம் சுளிப்பதைப் பார்த்துவிட்டால் போதும் அவன் மௌனித்து விடுவான். அதனாலேயே அவன் பேச முயற்சிப்பதை நிறுத்தியே விட்டான். எல்லாம் சைகைதான்.

ஆனால் அதற்கெல்லாம் ஈடுகட்டுவது போல் பத்துமலைக்கென்று ஒரு சிரிப்பு இருக்கிறது. அஃது ஓர் அலாதியான சிரிப்பு. சப்தமில்லாமல் மலர்ந்து, அவன் முகத்தில் அஃது எப்போதுமே இருக்கும்படியாகச் செதுக்கி வைத்துவிட்டது போன்ற புன் சிரிப்பாய் எந்த நேரமும் அந்தச் சிரிப்பு தவழ்ந்து கொண்டிருக்கும். எந்த வேலை யார் சொன்னாலும் அதே சிரிப்புதான். எரிச்சலோடு அவன் மீது எரிந்து விழும் ஏசுகின்ற பெரியவர்களுக்கும், அன்பாக அவனோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் பரிமாறிக் கொள்ள எண்ணும் சிறுவர்களுக்கும் அவன் பதிலாக தருவது அந்த அடக்கமான, சிநேகமான, இதமான மனதை மிருதுவாக வருடிக்கொடுக்கிற அந்தச் சிரிப்புத்தான்.

“டேய் பத்துமலை… உனக்கு நூறூ வெள்ளி சம்பளம் போட்டுத் தரச் சொல்றேன்னு சொல்லும் போதும் அந்தச் சிரிப்புத்தான்… இந்த மாசம் முடியாதுண்ட்டா… அடுத்த மாசம் சேர்த்து தர்றேன்னு ஒவ்வொரு மாதமா தள்ளிப் போட்டிண்டு வந்தப்பவும் அதே சிரிப்புத்தான். அவனை‎ அடிச்சாலும் அந்தச் சிரிப்புதான். அணைச்சாலும் அந்தச் சிரிப்புத்தான். அவன் சிரிப்போடு பொறந்திருக்கான்… லேசாக இதழ் மலர்ந்த கொஞ்சம் வெட்கத்தோடு கூடிய பணிவான அந்தச் சிரிப்பு எத்தன பேர் முகத்துக்குக் கூடிவரும்? கர்ணன் கவசத்தோடு பிறந்த மாதிரி இவன் இந்தச் சிரிப்போடு… இவனும் ஏதோ பூர்வாஸ்ரம பாபத்தினால அந்தக் குலத்தில பொறந்திட்டானேயொழிய அவன் முகத்தல அப்படி ஒரு தேஜஸ்.. ஒரு ஒளி… ஒரு ஸாந்தம்… லெக்க்ஷணமா அமைஞ்சுடுத்து…

“ஏண்டா டேய்… பத்துமல.. வேல நேரம் போக மீதி நேரம் இந்த வூர்காரங்க மாதிரி குடிகிடி கூத்தியானு திரியாம ஏதோ இந்தக் கோவிலுக்கு நாம செய்த தொண்டா… நாவுக்கரசர் செஞ்ச மாதிரி, சுத்தமான மனசோடு செய்.. நோக்கும் புண்ணியமாப் போகும், அம்பாளுடைய பூர்ண ஆசிர்வாதமும் அநுக்கிரஹமும் கிடைக்கும்… நானும் கமிட்டில்ல எடுத்துச் சொல்லி சம்பளம் போட்டுத் தர்றேன்…” சொல்லி  ஆறுமாசமாச்சு… கோவில சுத்தி பூத்துக் குலுங்குதுக செடிகளெல்லாம்… எத்தன வக செடிகள் கொண்டு வந்து பாத்தி கட்டி நட்டுட்டான் பாவி… மாங்கான்னும் தென்னங்கன்னும் நெஞ்ச தூக்கிண்டு நிக்கிற இளவட்டமான்னா நிக்குதுக… பச்ச கம்பளத்த விரிச்சு வச்ச மாதிரி புல்லு… முல்லையும், மல்லிகையும், நந்தியாவட்டையும், செம்பருத்தியும், அரளியும், துளசியும், பன்னீர் புஷ்பமும், பவழமல்லியும்… சொலிச்சுப்பிட்டானே சொலிச்சு… இந்தச் சோலைவனமே சௌந்தர்யமா ஆடிப்பெருக்குல ஆத்துக்குப் போற புஷ்பமான பொண்ணுங்க கணக்காக பூத்துக் குலுங்கறது அவனாலில்லையோ…”

‘டங் டங்’னு மணியடித்தது. கோவில் மணியை இழுத்து விட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்தனர் சில சிறுவர்கள். அர்ச்சகர் கோபமாக ஏதோ திட்டிக்கொண்டே வெளியே வந்தார்.

மறுநாள் காலை அர்ச்சகர் அவ்வளவு நல்ல ‘மூடில்’ இல்லை. அன்றை மாலை ஏதோ விஷேச பூஜை பண்ணுவதற்கான ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். மனம் அதில் லயிக்காமல், எதைக் கேட்டு அழுகின்றேன் என்பதே தெரியாமல் அடம் பிடித்துக் கதறும் குழந்தைப்போல் முரண்டு கொண்டிருந்தது.

 

“பூஜ பண்ணுங்கோனு சொன்னாப் போதாதா… இப்படி இப்படிப் பண்ணுங்கோனு சொல்லணுமா… நேக்கு தெரியாதான்ன… இங்க முந்தி இருந்த பட்டர் ஏதேதோ பண்ணினாருன்னா நானும் அதே மாதிரித்தான் பண்ணனும்னு இவா என்னை வற்புறுத்த முடியாது… தந்தரம்னா என்ன மந்தரம்னா என்னனு தெரியாதவா… என் தொழில்ல நான்தான் ராஜானு இவாளுக்குப் புரிய வைக்கனும்… நேக்கு தெரியாதா பூஜை புனஸ்காரம் பத்தி, இவாள்ளாம் அட்வைஸ் பண்ணி என் பிராணனை வாங்க வந்துட்டாளே… நீர்கோவில் கமிட்டித் தலைவர்னா நேக்கு என்னய்யா… நான் செய்றதுதான் பூஜ.  நீர் கையைக் கட்டிண்டு எட்டத்துல நின்னுபாரும்… நேக்கு பாடம் சொன்னவா வேத, வைதீக, சாஸ்த்ரீய மஹானுபவ சிவ ஸ்ரீ தட்புருஷாய தெய்வசிஹாமணி சிவாச்சாரியார்னு இங்கே யாருக்குத் தெரியும். முந்தின பட்டர் வித்தைன்னா காட்டிருக்கான். கார்நீக ஆகமத்தின்படி என்ன செஞ்சிருப்பான்… என்னமோ அவாள தலையில தூக்கி வைச்சிண்டு ஆடறா… படீர்னு கேட்டிருப்பேன்… “என்ன தலைவரே.. இந்தவூர்ல நீர் பெரியவாளா இருக்கலாம் ஆனா அம்பாளுக்குப் பூஜ எப்படி பண்ணனும்னு நேக்கு சொல்லித்தராதேயும்… இன்னிக்கு வரைக்கும் வாழ்நாள் பூராவும் அவளுடைய கருவறயில் கழிச்சவன்… பூமியில் விழுந்து கண்ணு முழுச்சு உலகத்த பார்த்த நாள் முதலா இனி கண்ண மூடுற நாழிவரை என்பேச்சு, மூச்சு, பொழப்பு, தவிப்பு, வாழ்வு, தாழ்வு எல்லாமுமே அவள சுத்தித்தான் வந்திண்டிருக்கு… இனியும் வந்திண்டிருக்கும்.. எப்போ ஏதோ விஷேசம்ன்னா பட்டு வேஷ்டி சில்கு ஜிப்பா போட்டிண்டு வந்து நிக்கிற பெரிய மனுஷால்லாம் ஐதீகம், ஆகமம், சாஸ்திரம், சம்பிரதாயம்னு பேச வந்துட்டேள்னா நாங்களெல்லாம் வாயையும் இதையும் பொத்திண்டு கேட்டிண்டு கிடக்கணுமோ… அவா அவா அதை அதைத்தான் சொல்லணும் செய்யணும்னு இருக்கோலியோ… ஆகம விதிகளையும் அனுஷ்டானங்களையும் பத்தி அளக்கிறதுக்கு நோக்கு என்ன யோக்யத இருக்கு” ன்னு கேட்க எவ்வளவு நேரமாகும்? ஆனால் ஏண்டா வம்பு வந்த இடத்துல வாயைப் பொத்திண்டு சொல்றவா எதவேணுனாலும் சொல்லிண்டு போட்டும் நாம் தலைய மட்டும் நன்னா அப்படியே செஞ்சுட்டாப் போவது செஞ்சுடறேன் பாருங்கோ..ன்னு” பல்ல காட்டிண்டு போக வேண்டியதுதானே.

வேத பாராயணம் பண்ணின வாயில, “அடடே உங்கள போல உண்டோன்”னு எவா எவாளையோமோன்ன புகழ்ந்து வசனம் பேச வேண்டியதாப் போச்சு… செய்யாதுபோனா விசாவையும் பாஸ்போட்டையும் கையில கொடுத்து மூட்டை முடிச்ச கட்டிண்டு ஊருக்குப் போயிட்டு வாங்கோன்னு அனுப்பிட்டாள்னா பொழப்பு போச்சே.. ச்சி.. இன்னும் எத்தன நாளைக்கு இந்தப் பாவனை.. என்ன பொழப்பு இது… இதுகூட பரவாயில்ல… இவா கொட்டு மேளத்துக்கு, அடிக்கிற கூத்துக்கு நான் டான்ஸ் ஆடிண்டு இருக்கேன். பணம் கொடுக்கறாளோல்லியோ… கொஞ்சம் ஆடினாத்தான் என்ன கொறைஞ்சு போறது… ஆனா இந்தப் பத்துமல என்ன பாவஞ் செஞ்ஞான்.. ஏழ ஆத்மா… மாடான்னா உழைக்கிறான்… பச்சக்காடு பாங்காடா கிடந்ததை பசுஞ்சோலையா பண்ணின பாவத்துக்குக் கேவலம் ஒரு அம்பது வெள்ளி காசு ஒரு கேடா… மனமறிஞ்சு கொடுக்க மாட்டேங்கறாளே…!

கமிட்டியைக் கேட்கனும்னு… சரி ஒத்துக்கிறேன்… கமிட்டியோட தலைவர கேட்கனும்னு… அதுவும் சரி… ஆனா இந்தத் தலைவங்கிரவா என்ன சொன்னார்.. “இந்த முனிசிபல் ஆட்கள் கிட்ட நான் சொன்னாப் போதும்… வாரம் ஒருத்தன் வந்து கூலி  கேட்காம சும்மா பார்த்துக் கொடுத்துட்டு போவங்க… இதுக்கு எதற்கு பத்துமல… அவனுக்கு எதுக்கு சம்பளம்னு கேட்கிறேன்… ஐயரே… உங்களுக்கு இந்தவூர் வழக்கமெல்லாம் தெரியாது பாருங்க… பாருடா பத்துமல… நல்லா பாரு வேலைய… உனக்கு அடுத்த ஜென்மத்துக்கு இது புண்ணியமா போகும்னு சொல்லி வையுங்க… இவன்களயெல்லாம் எப்படி நடத்தனும்னு எங்களுக்குத் தெரியும்… உங்களுக்குத் தெரியாது… கும்பாபிஷேகம் அது இதுனு ஏகப்பட்ட செலவு இருக்கு… பின்னால பார்ப்போம்…என்ன ஐயரே!”

‘ஆஹா நோக்கு உடம்பெல்லாம் மூளை… ஆனா அந்த  மூளையெல்லாம் விஷமானா இருக்கு’ன்னு மனசுள்ள சபிச்சிண்டு தலைய மட்டும் நன்னா ஆட்டத்தான் முடிந்தது என்னால், வேறென்ன செய்ய முடியும்?

இவாளெல்லாம் ரொம்ப சின்ன மனசு கொண்ட பெரிய மனுஷாளுங்க. கோவிலும் கடவுளும் இவாகிட்ட மாட்டிண்டு முழிக்குதுக. பாவம். எவ்வளவு பணமும் கொடுத்து, விசா எடுத்து, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து என்னப் போலவாள கூட்டியாந்து கும்பாபிஷேகம் கதாகாலஷேபம் செய்வா… இங்கேயே கிடந்து மாடா உழைச்சு ஓடா தேஞ்சு போற பத்துமலைக்கு நாலு காசு கொடுக்க மாட்டா… பேஷ்… நல்ல மனுஷாளுங்க… கோவில் செலவுல கணக்கு எழுதிட்டு மடியில கொட்டிக்கிறா… கோவிலுக்குனு சாமான்கள் வாங்கி சொந்தத்துக்கு யூஸ் பன்றா… இன்னும் என்னவெல்லாமோ பண்ணி சுருட்டிக்கிறா… பத்துமலைக்குச் சம்பளம் தரமாட்டாளாம்”.

‘டங்’ என்று கோவில் மணி அடித்தது. திடுக்கிட்டு மருண்ட விழிகளால் வெளியே பார்த்தார். கோவில் மணியின் கயிற்றை யாரோ இழுத்திருக்க வேண்டும். யாராக இருக்கும் என்று எட்டிப் பார்த்தார். யாருமில்லை. நல்ல வேளையாக தான் சிந்தித்ததை யாரும் கேட்டிருக்க முடியாது என்று எண்ணி சுற்றும் முற்றும் பார்த்து லேசாக தன்னுள் சிரித்துக் கொண்டார். தனிமையில் சிந்திப்பது கொஞ்சம் தீவிரமடைந்தால் வாய்விட்டு தனக்குள் பேசிக்கொள்வது தன்னியல்பாக நடந்துவிடுகிறதல்லவா. அதுபோல் ஏதோ சில வார்த்தைகள் தன்னையும் அறியாமல் வெளியே வந்து விழுந்துவிட யாராவது கேட்டு அதை அங்கே போய் பற்றவைத்து நம்மை ஊரைவிட்டு ‘பத்தி’ விட்டானா பொழப்பு என்னவாகும் என்று தன்னை நொந்து கொண்டே குடுமியை அவிழ்த்து உதறிக் கட்டிக்கொண்டார்.

அந்த மெலிந்த, சிவந்த தேகமும், வெற்றிலைச் சாறு தேங்கி நிற்கும் வாயும், அடர்ந்த கூந்தலும், அகலமான குங்குமப் பொட்டும், திருநீற்றுப்பட்டையும் பழுப்படைந்த வெள்ளை பஞ்சகட்சமும் தவிர, இங்கு வந்தபின் வந்து சேர்ந்த தங்கமுலாம் பூசிய கண்ணாடி பிரேமும், கழுத்தில் தொங்கிய தடிமமான தங்கச் சங்கிலியும், அதில் ஒளிர்ந்த சிவப்புக்கற்கள் பதிந்த டாலரும் அவருக்கு அவரைப்பற்றியதான அபிப்பிராயத்தை மாற்றிவிட்டிருந்தன. மார்பின் குறுக்காக தொங்கிய பூணூலை இழுத்து முதுகை லாவகமாக சொறிந்து கொண்டார்.

“இவ்வளவு அலட்டிக்கொள்றேனே… ஏன் நாமதான் ஒரு அம்பது வெள்ளியை அவனுக்கு கொடுத்துட்டாத்தான் என்ன கொறைஞ்சு போறது? லெஷ்மி கடாஷமோ என்னமோ தெரியல நேக்கு நல்ல நேரம் இந்தவூர்ல… எந்த விசேஷத்துக்கு நம்ம கேட்காம செய்றா? ஏதோ ஒவ்வொரு நாளும் கிழமையும் ஒரு விசேஷம், விழா சுபகாரியம்னு நேக்கு பகவான் கையைக் காட்டிண்டுதான் இருக்கா… சலங்க பூஜை செய்றவாலிருந்து சவரக்கடை திறக்கிறவா வரையில் நம்மள ஒரு வார்த்த கன்ஸல்ட் பண்ணிண்டுதான் செய்றா… பகவான் க்ருபையில் பணத்துக்கு குறைச்சல் இல்லாமன்னா வண்டி ஒடறது… கொடுப்போமே… ஏழ ஆத்மா… அதிலும் வாய் பேசமுடியாத அப்பாவி… வாய்விட்டு இதுவரயில காசுன்னு கேட்டதில்ல.. அவன பெத்தவதான் சாடமாடையா வீட்டுக் கஷ்டத்த பத்தி மூக்கால அப்பப்ப அழுதுண்டு போறா… இதுகூடவா புரியாது நேக்கு… நன்னாவே புரியறது… இன்னிக்கு அம்பது வெள்ளியைக் கொடுத்து.. “டேய் பத்துமல புள்ளையாண்டான் கோவில் கமிட்டித்தலைவர் இருக்கிறார்லியோ… ரொம்ப நல்ல மனுஷன்… நோக்கு சம்பளம் தரப்போறதா நேக்கு தோணல.. இந்தா அம்பது வெள்ளி… இத்தோட நின்னுக்கோடா..”ன்னு பவ்யமா சொல்லிடனும்.

இங்க கிடந்து உழைக்கிறத வேற எங்காவது உழைச்சான்னா ஏதோ நாலு காசாவது மிஞ்சுமே… கோவிலுக்கு உழைக்கிறது, பகவானுக்கு சேவை செய்றது, புண்ணியம்னு சொல்லிண்டே நன்னா நான் மட்டும் சம்பாதிச்சுக்கிட்டு சாமர்த்தியம் பண்ண, அவன் ஒன்னுமில்லாம ஒழைச்சு ஒழைச்சு ஓட்டாண்டியா ஆறது பாபமோலையோ… ஆனா இப்படினு கேட்டதும் ரொம்ப வருத்தப்படுவான்… ஏன் கோவம் வந்தாலும் வரும்… நியாயம்தானே… சாதுமிரண்டால் காடு கொள்ளாதுனு சொல்வா… கோவத்துல எது செஞ்சாலும் செய்வான்… ச்சே… ச்சே.. அவன் நல்லவன்… என்ன நாலு திட்டு திட்டுவான்… அதுவும் மனசுக்குள்ள ஒழைச்சவனுக்கு ஊதியம் தரலேனா திட்டாம என்ன செய்வான்… எப்படியோ இன்னிக்கு பத்துமலய சமாளிக்க வேண்டியதுதான்…”

பத்துமலை மணலோடு சிமிண்ட்டைக் கொட்டி அதனை சிமிண்ட் குழைக்கும் சுரண்டியால் கொத்திக் கொண்டிருந்தான். கோவிலின் தெற்கு சுவரில் சில செங்கற்கள் பெயர்ந்து விரிசல் கண்டிருந்தன. அதனைச் செப்பனிட மும்முரமாகிக் கொண்டிருந்தான்.

கையில் ஐந்து பத்து வெள்ளித் தாள்களை மடித்து வைத்துக் கொண்டு அர்ச்சகர் வெளியே வந்தார். அவன் எதிரில் சென்று நின்றார். அவனுக்கே உரிய அந்தப் புன்னகையுடன் அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தான். கைகளைத் தட்டி வேலையை நிறுத்தச் சொல்லி அவனைக் கோவிலின் பக்கமாக அழைத்தார், மனதுக்குள் ஏதோ ஒருவித இனம்புரியாத உணர்வு ஆக்ரமித்திருந்தது.

பத்துமலை பக்கத்திலிருந்த பூவாளியைக் லேசாக கவிழ்த்து, கைகளைக் கழுவிவிட்டு, கீழே கிடந்த தன் காக்கி சட்டையில் கைகளைத் துடைத்துவிட்டு, மடக்கி விட்டிருந்த பேண்ட் கால்களைக் கீழே இறக்கிவிட்டு முழங்கால் பகுதியில் கிழிந்து, இளைத்துக் கொண்டு நிற்கும் நாயின் நாக்கு போல தொங்கிய துணியை மடக்கி உள்ளே தள்ளி, நாளை இதைத் தைத்து விட வேண்டும் என்று எண்ணியவாறு, தன் கறுத்த தேகத்தில் அங்குமிங்குமாக ஒட்டிக்கொண்டிருக்கும் மணலை தட்டிவிட்டுக் கொண்டவாறே அர்ச்சகர் முன் சென்று நின்றான்.

“பத்துமல… நீ ரொம்ப நல்லவண்டா. உன்ன மாதிரி நல்லவன்களுக்கு இந்த இடம் லாயக்கு இல்லை தெரியுமோ? நோக்கு சம்பளம் தரமாட்டாளாம்… ஏதேதோ காரணம் சொல்றா… அதெல்லாம் நீ மனசுல வச்சிக்காதே… இங்கே நல்லவாளுக்குக் காலமில்லேடா… இது கலிகாலம்… நேக்கு உன்ன இனிமேலையும் இங்கே வேல செய்யச் சொல்றதுல சம்மதமில்ல… நோக்கு என் நிலம புரியறதோ… இதோ இந்தப் பணத்த வாங்கிண்டு இனிமே சமத்தா வேற எங்காவது போய் தோட்டவேல பாரு… நாலு மனுஷாள போல நாலு காசு சம்பாதிச்சுக்கோ… எல்லாம் நாம நினைக்கிறாப்ல நடக்கிறதில்லை… பகவான் ஒருத்தன் இருக்கான்லையோ… அவன் பாத்துக்குவான்.. நோக்கு ஒரு குறையும் வராது…” என்றவாறு பணத்தை நீட்டினார்.

பத்துமலை அவரை ஒரு கணம் தயக்கத்தோடு பார்த்தான். தலையை இருமருங்கும் வேண்டாம் என்பதுபோல் அசைத்தான்.

பணத்தை மடித்து கைகளில் வைத்திருந்தவர் எவ்வளவு பணம் என்று கூடத் தெரியாமல் இவன் ஏன் மறுக்கின்றான் எனத் திகைத்தார். ரொம்பவும் தாமதமாக கொடுப்பதால் எரிச்சலோ. உடனே வாங்கிடப்படாது என்று தன்மானம் தடுக்குதோ. “டேய்… காச நீட்டினவுடனேயே வாங்கிடப்படாதுன்னு யோசிக்கிறியோ… பரவாயில்ல நல்ல பழக்கம் தாண்டா… இது இனாம் இல்லடா… நீ உழைச்சதுக்குக் கூலி… காசில்லாமல் இந்த லோகத்தில என்னடா நடக்கும்… எல்லாத்தையுமே காச வைச்சு நிர்ணயம் பண்ற இந்த உலகத்துல ஒன் உழப்புக்கு எவ்வளவோ கொடுக்கலாம் தான்… குறைவா இருக்கேனு கோவிச்சுக்காத… சரி… சரி… மனசுல ஒன்னும் வச்சுக்காதே… இந்தா வச்சுக்கோ…” என்றவாறு பணத்தை நீட்டினார்.

பணிவாகத் தன் இரு கைகளாலும் அதனைப் பெற்றுக் கொண்டு… அதே மலர்ச்சியுடன்… பாதி விரிந்த இதழில் படரும் அந்த வெள்ளைச் சிரிப்புடன்… பிள்ளைச் சிரிப்புடன்.. அந்தச் சிவப்புத்தாள்களை அதில் எத்தனை தாள்கள் உள்ளன, எவ்வளவு மொத்த பணம் என்பதை அறிந்து கொள்வதற்கான குறைந்தபட்ச ஆர்வம் கூட இல்லாதவனாய், கோவிலுக்குள் நடந்தான்.

அர்ச்சகர் சற்று வியப்புடன் அவன் எங்கே போகிறான் என்று புருவங்களை நெளித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். பலஹீனமான தனது வலதுகாலின் தொடையில் வலதுகையை ஊன்றி, வலப்பக்கமாக சாய்ந்து, நிமிர்ந்து… நிமிர்கையில் காலை லேசாக உதறியவாறு நடந்து நேரே உண்டியலின் அருகில் சென்றான்.

சந்நிதானத்தின் நேர் எதிரிலேயே, மூல விக்ரஹத்தின் முழுப்பார்வையின் கீழே உள்ள இடத்தை உண்டியலுக்கு உரியதாக நிர்மாணித்தவர்கள் அறிவாளிகளாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அந்தச் சிவப்புத்தாள்களை நான்காக மடித்து, உண்டியலின் துவாரத்தில் திணித்து, விரலால், உள்ளே குத்தித் தள்ளிவிட்டு, அதே மலர்ச்சியுடன், லேசான பூரிப்போடு கூடிய புன்னகையுடன், மெதுவாக தலை இரு மருங்கும் அசைய, பாடும்போது தன்பாடலில் தானே லயித்துவிடும் பாகவதரைப் போல் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு, நிதானமாக, கெந்தி கெந்தி நடந்து மணல் கொட்டிக் கிடந்த இடத்திற்கே வந்து தரையில் அமர்ந்து கொண்டான்.

அவனிடத்தில் எந்த ஏமாற்றமும் இல்லையே. எதிர்பார்ப்பு இருந்தாலல்லவா ஏமாற்றம் இருக்கும். அதிருப்தியை, கோபத்தை, எரிச்சலை எதிர்பார்த்த முகத்தில் வழக்கம்போல அந்த நிறைவான சிரிப்பு, கொஞ்சம் கூடுதலான மகிழ்ச்சியோடு.

அர்ச்சகரின் நெற்றியில் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் கோர்த்து நின்றன. நெஞ்சின் ஆழத்தில் எங்கோ, ஏதோ ஆழமாக தைத்தாற் போலிருந்தது. உச்சந்தலையில் உருவாகிய ஏதோ ஒன்று நெஞ்சில் படர்ந்து அடிவயிற்றில் சில்லிட்டது.

கண்ணாடியைக் கழற்றி துடைத்து மாட்டிக் கொண்டார். முகம் லேசாக வெட்கப்பட்டது போலிருந்தது. கொஞ்சம் ஆச்சரியமும், ஏதோ ஒரு புரியாத தன்மையும் கலந்த ஒருவித ஸ்தம்பித்துப்போன பார்வையுடன் அவனைத் தொடர்ந்தவாறே… “ஏண்டா… பத்துமல… கோவிச்சுண்டியா…” என்று குழந்தையைச் சமாதானப்படுத்த முயலும் ஒருவித கெஞ்சும் மிருதுவான குரலில், கேட்போமா வேண்டாமா என்று குழம்பியவாறே வந்தவர் கேட்டே விட்டார்.

பத்துமலை பேச முயலும் தருணங்கள் மிக மிகக் குறைவே. அர்ச்சகரின் கலக்கம் அவரது உடைந்துபோன குரலின் தொனி, அவனை என்னவோ செய்தது.

“ச…சா…ச்..  ச்சம்ப்… ளம்” என்று முகம் கோணி, நாசிவிடைத்து, உதடு சுழித்து, தலையை மேலும் கீழுமாக உயர்த்தி தாழ்த்தி, தொண்டையில் சிக்கிக்கொண்டதை வெளியே கொண்டுவரும் நரக வேதனையோடு சில சொற்களை… இல்லை எழுத்துக்களைத் தான் அவனால் பிரசவிக்க முடிந்தது.

அந்தச் சில கணங்களில் அவனின் வேதனையைப் பகிர்ந்து கொண்டு மேலும் அவனைப் பேசவிடமால் அர்ச்சகரே “வேண்டாங்கிறியா… வேண்டாங்கிறியா… புரிறது… புரிறதுடா.. ஏன்னு சொல்லலியே… நீதான் எப்படிச் சொல்லுவே… நோக்கு சொல்லவும் வராதே…” அழாத குறையாக மெல்ல கேட்டார்.

திக்கித் திணறி ஏதோ சொல்ல முற்பட்டவன், சட்டென நிறுத்திக் கொண்டு அம்மனைச் சுட்டிக் காட்டிவிட்டு, தலையை ஒருபக்கமாய் சாய்த்து அவரைப் பார்த்து, கடைவாயில் வழிந்த எச்சிலைப் புறங்கையால் துடைத்தவாறே சிரித்தான்.

அந்த மனம் திறந்த மழலை சிரிப்பு அர்ச்சகரை ஆசுவாசப்படுத்தியது.

விருட்டென திரும்பியவர் அம்பாளைப் பார்த்தார். பின் மீண்டும் பத்துமலையைப் பார்த்தார்.

அவன் கோவிலுக்குள் சென்றதே அபூர்வம். அவன் சன்னிதானத்தில் மற்றவர்களைப் போன்று நின்று வணங்கி அறியாதவன். அவனது வழிபாடெல்லாம் அவனது உழைப்புத்தான். அவன் பூஜிக்கும் விக்ரஹம் அந்தச் செடிகொடிகள்தாம். அவன் வலம் வரும் கோயில் அந்த நந்தவனம்தான். அவனறிந்த மதம் அவன் பரஸ்பரம் வழங்கி பெறும் மனிதநேயம்தான். இவைகள் விளக்கங்கள் வேண்டாது, வார்த்தைகளுக்கு அப்பால், மொழியையும் கடந்து, இந்தக் கணப்பொழுதில், இருள் கவிழ்ந்த அறையில், விசை அழுத்த, இமைப்பொழுதில் கண்கூச நிறைந்துவிட்ட ஒளிவெள்ளம் போல் அவரின் மனம் கூச நிறைந்து ஆக்கிரமித்துக் கொண்டது.

ஒரு கணம் உலகின் இயக்கங்கள் எல்லாம் நின்று விட்டு, மீண்டும் துவங்குவது போலிருந்தது.

“நோக்கு அம்பாளின் பூர்ண ஆசிர்வாதமும் அநுக்கிரஹமும் கிடைக்கும்னு சொன்னது நான் தானே… காசு கொடுத்தா அது கிடைக்கும்… இல்ல செய்றதுக்கெல்லாம் காச கணக்கா எண்ணி வசூல்பண்ணி செஞ்சாவா கிடைக்கும்… மத்தவா மாதிரி பேருக்கும் புகழுக்கும் செய்யறதினால, அது கிடைக்குமா… இல்ல பண்ணின பாவத்தெல்லாம் தொலைக்கிறதுக்குப் பேரம் பேசிண்டு பட்டு சாத்தி அபிஷேகம் பண்ணினா கிடைக்குமா… அப்படியெல்லாம் இல்லாம… அவளுக்காக… அவளுக்காகவே முழு அர்ப்பணிப்பா செஞ்சேன்னு சொல்றானா…”

யுக யுகமாக தவம் இருந்தபின் கிடைத்த தரிசனம் போல உள்ளுக்குள்ளே ஒரு வெளிச்சம். ஒரு உள்ளார்ந்த அமைதி.

அர்ச்சகர் பத்துமலையையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் ஒரு கையால் பூவாளியைச் சாய்த்தவண்ணம், மறுகையில் அமர்ந்தவாறே குழைக்க ஆரம்பித்தான். அவனருகில் சென்று தண்ணீருடன் கூடிய பூவாளியைக் குனிந்து அர்ச்சகர் தூக்கினார்.

மனம் ஒன்றியது. கண்கள் தானாக மூடிக்கொண்டன.

“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணராஜ தஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லஷ்மீம் ஜாதவேதோ மா ஆவஹ” மந்திர சுலோகங்களை வாய் முணுமுணுத்தது.

பூவாளியின் நீர் மிக மென்மையாக பத்துமலை மீது கொட்டியது. அவன் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே கைகளை ஆட்டி குதூகலித்தான். சிறு பிள்ளை போல் அர்ச்சகர் தன்னோடு விளையாடுகிறார் என்ற எண்ணுவது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

அம்மன் அவர்களைப் பார்த்து ஆனந்தமாக சிரித்துக் கொண்டாள்.

சிலை சிரிக்குமா என்ன?

அன்று சிரித்தது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *