நடப்பு

கம்போங் தேசாவின் மற்றைய இல்லங்கள் அந்த நடுநிசியில் துயில் கொண்டிருந்தன. அந்தச் சிறிய வீட்டில் மட்டும் மனித ஆரவாரம் வழக்கத்திற்கும் மாறாக சற்று அதிகமாகவே இருந்தது. தொலைக்காட்சி பெட்டியின் முன்பாக ஐந்தாறு சிறுவர் சிறுமிகள் சற்று நெருக்கமாகவே அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி நடுநாயகமாய் ஒரு ஈஸி சேரில் பாச்சிஹசான் மடியில் தன் பேரனுடன் அமர்ந்திருந்தார். இருமருங்கும் நாலைந்து ஆண்களும் பெண்களுமாக உட்கார எது தோதாகக் கிடைத்ததோ அதையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்துகொண்டிருக்க, தொலைக்காட்சிப் பெட்டி ஜகார்த்தாவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நெடுந்தூர நடைப்போட்டியை நேரிடையாக அஞ்சல் செய்து கொண்டிருந்தது.

சிறுவர்களில் குணசேகரன் மட்டும் அடிக்கடி எழுந்து டிவியில் சப்தத்தை எந்தக் காரணமுமின்றி கூட்டுவதும் குறைப்பதுமாகவும் இருந்தான். அவன் கைகள் பரபரத்தற்கு இப்பொழுது இதுதான் அவனால் செய்ய முடிந்தது. கால்களின் பரபரப்பை, உந்துதலை அங்கே தொலைக்காட்சியில் தெரியும் தன் தந்தையின் கால்களுக்குள் மானசீகமாக இடமாற்றம் செய்து கொண்டிருந்தான்.

குணாவிற்கு பதின்மூன்று பதினான்கு வயதுதான் என்றாலும் பார்ப்பதற்குக் கொஞ்சம் வயதுக்கு மீறிய வளர்ச்சி போல் தோன்றும். தந்தை நடைவீரர் நல்லசாமியின் மூன்று குழந்தைகளில் இவனே மூத்தவன். அவரைப் போலவே ஒல்லியான தேகம். அவர் சற்று கறுப்பு. அவனோ தாயைப் போல சற்று மாநிறம். சுறுசுறுப்போடு கூடிய துருதுருத்த பார்வை. களையான முகம்.

தந்தையிடம் குணாவிற்கு எப்பொழுதுமே ஒரு லயிப்பு, பெருமை. டிவியின் சப்தத்தைக் கூட்டி வைத்துவிட்டு வந்து அமரும்போதெல்லாம் “இவர் என்னுடைய அப்பா. இதோ இந்தப் போட்டியில் முதலாவதாக வரப்போகிறாரே அவர்தான்… என்னுடைய அப்பா” என்பது போன்ற கம்பீரமான ஒரு பார்வையை உடன் அமர்ந்திருக்கும் மற்ற சிறுவர்களிடம் பூரிப்போடும் பெருமையோடும் செலுத்திவிட்டு அமர்ந்துகொள்வான். திடீரென்று எழுந்து அந்த ஹாலின் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு “இப்பத்தான் இந்த டிவியில நல்லாத் தெரியும்” என்பது போல் ஏதோ சொல்லிவிட்டு எல்லோரையும் பார்த்தான். டிவியில் கண்களையும் புலன்களையும் பதித்து ஒன்றிப்போன அந்தப் பெரியவர்கள் இவன் செய்ததையோ சொல்வதையோ கண்டு கொள்ளாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

இன்னும் சுமார் பத்து நிமிடங்களில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் நல்லசாமியா அல்லது அவருக்குச் சற்று முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கும் தாய்லாந்து வீரரா தங்கப்பதக்கத்தைப் பெறப்போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். நல்லசாமியின் முகத்தில் சோர்வின் ரேகையே இல்லை. உடலை வேர்வை ஆராதித்துக் கொண்டிருந்தது. இடுப்பை வளைத்து நெளித்து, மடக்கிய கைகளை முன்னும் பின்னுமாகப் பக்கவாட்டில் வீசி வீசி அவர் நடக்கிறாரா அல்லது மெல்ல ஒடுகின்றாரா என்று சொல்ல முடியாது. இரண்டுக்கும் இடையிலான ஒரு நடையோட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

அந்த விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவும் நல்லசாமியும் பெறப்போகும் முதல் தங்கம் இதுவாகத்தான் இருக்கும். இவருக்கு அந்தத் தேசத்து ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்து உற்சாகப்படுத்துவது இங்கே எல்லோருக்கும் கொஞ்சம் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவுமே இருந்தது.

மெல்ல மெல்ல எல்லோருடைய மனதிலும் ஒரு பரவலான பரபரப்பு. காரணம் தாய்லாந்து வீரரின் நடையில் ஒரு தளர்ச்சி. முகத்தில் வேதனையின் சுளிப்பு. தோல்வியின் அருகாமையில் வெற்றி நழுவுகையில் ஏற்படும் ஒருவித நம்பிக்கையற்ற சோர்வு. இதற்கு மாறாக நல்லசாமியின் நடையில் ஒருவித அதீத வேகம் அதிகரிக்க, ஏதோ முடுக்கிவிடப்பட்ட எந்திரம் போல் அவர் நடக்க, வெகு அனாயசமாகத் தாய்லாந்து வீரரை முந்திச் செல்கிறார். நேர்முக வருணனையாளர் உணர்ச்சி வயப்பட்டு நாத்தழுதழுக்க உச்சஸ்தாயியில், நிகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றியை வார்த்தைகளாக்கி நெகிழ்ந்து கொண்டிருக்கிறார். குணா பக்கத்திலிருக்கும் நண்பனின் கைகளைப்பற்றி அழுத்திக் கொண்டு, எச்சிலைகூட விழுங்க மறந்தவனாய், உடலும் முறுக்கேறி, மூச்சை சற்று நேரம் நிறுத்தி, விழிகளை அகல விரித்து…

இந்த மாதிரியான நேரங்களில் ஜெயலெட்சுமி தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள இயலாது தவிப்பாள், கணவனின் வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிக்கும் பக்குவம் இருந்தென்ன, இந்தப் போட்டியின் உச்சக்கட்டத்தில் அவளால் உணர்ச்சி வயப்படாமல் இருக்க முடியவில்லையே, இது ஒரு விளையாட்டுப் போட்டி தானே என்ற உணர்வுக்கு அப்பால் இந்த வெற்றிக்குத் தன் கணவன் தன்னையே அர்ப்பணித்து, வருத்திக் கொள்கிறாரே என்று கசிந்து, கரைவாள். கண்களில் நீர்மல்க யாரும் பார்த்துவிடாதவாறு ஏதோ வேலையாகப் போவது போல் சமையலறைக்குச் சென்று கண்ணீரை துடைத்துக் கொள்வாள்.

ஜெயலெட்சுமி வெளியில் வந்து எல்லோருக்கும் காபி பரிமாறுகையில் வீடே கலகலப்பாயிருந்தது. தன் கனத்த குரலில் பாச்சிஹசான் மனம்திறந்து பாராட்டிக் கொண்டிருந்தார். நல்லசாமியால் நமது நாட்டிற்குப் பெருமை என்று மலாய்க்காரரான அவர் புகழ்வதைக் கேட்கையில் எல்லோருக்குமே ஒரு நிறைவு. ஒரு நெகிழ்வு. அந்தக் குடியிருப்பில் அவர்தான் எல்லாருமே மதிக்கத்தக்க பெரியவர். தமிழர்களிடமும் மலாய்க்காரர்களிடமும் சமமாக சகஜமாக ஒருவித வாஞ்சையோடு பழகும் நல்ல மனிதர்.

எல்லோரும் விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள். ஜெயலெட்சுமி குழந்தைகளைத் தூங்க வைக்கப் படுக்கையை எடுத்து விரித்துக் கொண்டிருந்தாள். மனதில் சொல்ல இயலாத ஓர் அமைதி. ஓர் ஆனந்தம்.

குணா நாளை பள்ளியில் அவனுக்கு கிடைக்கவிருக்கும் பாராட்டுக்களை எண்ணிப் பூரித்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட மலேசியாவில் எல்லோருமே இன்று அப்பாவையும் அவரின் சாதனையைப் பற்றியும் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதாக அவன் நம்புகையில், இது வரையில் உணர்ந்திராத ஒருவிதமான பெருமை கலந்த மகிழ்ச்சி நெஞ்சமெல்லாம் பொங்கி பரவியது.

அதே இன்ப மயமான உணர்வு தந்தையை வரவேற்க சுபாங் ஏர் போட்டில் காத்திருக்கையிலும், நல்லசாமிக்கு நகர மேயர் மாலை அணிவித்து அணைத்துக்கொண்ட போதும், பின் நல்லசாமி குணாவை அங்கிருந்த பிரமுகர்களுக்கு அறிமுகப்படுத்தும் போதும், பின் ஒரு பெரிய கரு நீலக் காரில் அவர்கள் இருவரையும் வீட்டருகில் வரையில் ஏற்றி வந்த போதும், மனமெல்லாம் வியாபித்து, உடலெல்லாம் ஊடுருவி ஆட்கொண்டிருந்தது.

இந்த மகத்தான வெற்றியை நல்லசாமி, உறவினர்கள், நண்பர்கள். அலுவலக ஊழியர்கள், ஏன் நாடே கொண்டாடியது. ஆனால் அவர்களையெல்லாம் விட குணாதான் அவ்வெற்றியை மொத்தமாக உள்வாங்கி மகிழ்ந்தான். அந்த வெற்றி அவனுக்கு என்னவெல்லாமோ அர்த்தங்களை சொன்னது. அப்பாவின் பல ஆண்டுகால கடுமையான உழைப்பு. வெற்றியை இலக்காகக் கொண்டு அதை நோக்கி முன்னேறிய உறுதி, அதற்குத் தேவையான மனோபலம்.. அதன் பலன்கள்… என்று என்னவெல்லாமோ அவன் புரிந்துகொண்டான்.

நினைவு தெரிந்த நாள் முதலாய் தான் தெரிந்து வைத்திருந்த அப்பாவை இப்போது புதிய பார்வையில், புதிய அர்த்தம் தொனிக்க, புரிய ஆரம்பித்ததை, புரிந்து கொண்டதாகத் தோன்றியதை எல்லாமுமாகச் சேர்த்து மனதுக்குள் பத்திரமாக சேமித்துக் கொண்டான்.

புகழ் எவ்வளவு சுகமானது என்பதும், அது எவ்வளவு போதையானது என்பதுமான உண்மையும் அவனுக்கு புதிது.

அதுவரையில் ஒரு சாதாரண டெலிகாம்ஸ் ஊழியராக இருந்த அப்பா, பத்திரிக்கைகளில் படமாக வந்ததும், தங்கப்பதக்கத்தை தூக்கி காட்டியபடி சரிந்து பால்பவுடருக்கு விளம்பரம் ஆனதும், ஐம்பது வெள்ளி சம்பளத்தில் உடனடியாக உயர்த்தப்பட்டதும், அது வரையில் ஒதுங்கியிருந்த சொந்தங்கள் திடீரென்று பாசமாக வழிந்ததும், கூட்டத்தோடு கூட்டமாகப் பள்ளியில் இருந்த அவன் குறிப்பிடதக்க ஒருவரின் மகன் என்று ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் அடையாளம் காட்டப்பட்டதும், தினமும் தினமும் பத்திரிகைகளின் விளையாட்டுச் செய்திகளில் அப்பாவை பற்றி ஏதும் வந்திருக்கிறதா என்று அவனை ஆவலுடன் பார்க்க வைத்ததுமான அந்த வெற்றியின் பல பரிமாணங்களை, அவன் மீது அது ஏற்படுத்தியிருந்த பாதிப்புக்களை, தனித்தனியாக சிந்திக்கச் சிந்திக்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனந்தமாகவும் இருந்தது.

சமீப காலமாக அவனுடைய மன உலகத்தில் ஒரு புதிய பிரதேசத்தில் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் உலவ முடிந்தது சற்று புதுமையாகத்தான் இருந்தது.

“உன் அப்பா எடுத்த பெயரை காப்பாத்துறாப்பல நல்லா படி” தலைமையாசிரியரின் இந்த அறிவுரை வழக்கமானதானாலும் இப்போது அது மனதில் ஆழமாகப் புதிய அர்த்தகனங்களுடன் இறங்கி பரவலாகப் பறந்தது. தன்னைப் பற்றியதான தன்னுடைய பார்வையுமே மாற்றம் கொண்டது.

அவன் பாடங்களை மனனம் செய்யும் போதெல்லாம் மனத்திரையில் அப்பா கால் வலிக்க, இடுப்பு நோக வேகவேகமாக நடப்பார்.

இந்த இன்பமயமான நிகழ்காலம், ஒரு நினைவு கூறத்தக்க கடந்த காலமாக மாற இரண்டு ஆண்டுகள் ஆயின. மாறுதலுக்கெல்லாம் மாறுதலாக ஈராண்டுகள் கழித்து மணிலாவில் நடந்த போட்டி அமைந்தது.

நடைவீரர் நல்லசாமி போட்டிக்குப் புறப்படும் முன்பாகவே தங்கப்பதக்கத்தை பத்திரிக்கைத்துறை விளையாட்டு விமர்சகர்கள் அவருக்கே உறுதி செய்துவிட்டது போன்று எழுதித் தள்ளினார்கள். மலேசியா பெறப்போகும் மொத்தத் தங்கப்பதக்கங்களில் நிச்சயமானது, நிச்சயமில்லாதது, உறுதியாக எதிர்பார்ப்பது, அரைகுறையாக எதிர்பார்ப்பது என்றெல்லாம் கணக்குப்போட்ட விமர்சகர்கள், ஜகர்த்தாவில் நடந்த போட்டியில் வெற்றிக்கு முன்பாக நல்லசாமியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத குறையை, தங்களின் முந்திய கணிப்பின் பலஹீனத்தை நிறைவு செய்வது போல் இம்முறை தங்கத்தில் நல்லாசமியின் பெயரைப் போட்டிக்கு முன்பாகவே மணிலாகாரர்கள் பொறித்து விட்டதைப் போன்று எழுதினார்கள்.

ஆனால் நல்லசாமியோ, அந்தப் போட்டியில் ஏழாவது நபராக முன்னே சென்றவர்களை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தார்.

வயதாகி விட்டது, போதிய பயிற்சி இல்லை என்று விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்களும், அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த முட்டை, பால் அலவன்சு நீண்ட காலமாக நிறுத்தப்பட்டது ஒரு காரணம் என அவர் அலுவலகத் தொழிற்சங்கத் தலைவரும், வலதுகால் நரம்பொன்று திடீரென்று வீங்கியதால் வந்த வினையென்று ஸ்போர்ட்ஸ் கவுன்ஸில் தலைவரும், மருத்துவரும், மணிலாவின் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் கொசுவலை கொடுக்காததால் முந்தின இரவு நல்லாசமியும் தானுமே தூங்க இயலாமல் போய் விட்டது ஒரு காரணம் என்று அவரது கோச்சுமாக ஆளுக்கு ஆள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை அறிக்கை மேல் அறிக்கை விட்டுத் தோல்வி என்ற கசப்பான உண்மைக்கு நியாய முலாம் பூச முயன்றனர். தோல்வியின் தாக்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் எங்காவது எவர் மேலாவது இறக்கி வைக்க வேண்டுமே!

ஒரு பொன்னான வாய்ப்பை, தங்கத்தை இழந்தது நல்லசாமிக்கும், ஸ்போர்ட்ஸ் கவுன்சலுக்கும், ஏன் நாட்டிற்குமே ஏமாற்றமாக இருந்தது. இப்பவுமே அந்த ஏமாற்றத்தை வலிக்கும் தன் நெஞ்சில் வேதனையுடன் மொத்தமாக உள்வாங்கி வருந்தியவன் குணாதான்.

அந்த வேதனையின் உச்சத்தை அவன் தந்தையை அழைத்துச் செல்ல சுபாங் ஏர்போட்டுக்குச் சென்றபோது முழுதுமாக உணர்ந்தான். அவரை அழைத்துப்போக அப்போது அவன் மட்டுமே வந்திருந்தான். அவரைப்  பார்த்தபோது கண்கள் கலங்க, விம்மல் மேலெழ நின்றான். நல்லசாமி வழக்கம் போல்  மெல்ல சிரித்தபோதும்… அதற்குப் பெயர் சிரிப்பா, ஆறுதலாக அவன் தோள்களைப் பற்றி அழுத்த ஒரு கணம் அணைத்துக் கொண்ட போதும் சப்தம் போட்டு அழ வேண்டும் போல் இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தவாறு அடக்கிக் கொண்டான். அடக்கிக் கொண்டது அடங்கியா விடுகிறது, மாறாக ஆட்கொண்டு விடுகிறதே. ஏர்போர்ட்டில் பஸ்ஸுக்கு காத்திருக்கையில் விரக்தியும் எரிச்சலுமாய் அவனை மென்று விழுங்கியபோது அது கசிந்தது. கண்களையும் மறைத்து. கிள்ளான் பஸ் நிலையத்தில் டாக்ஸியில் வீட்டுக்கு போகலாம் என்று இருவரும் தீர்மானித்து முயன்ற போதும் இடத்தைச் சொன்னதும் திரும்பிவர ஆள் கிடைக்காது என்று டாக்ஸிகாரர்கள் மறுத்த போதும், மனதுக்குள் பெரு வெள்ளமாக பிரவாகமெடுத்தது கரையோர மரங்களையும் செடிகளையும் வேரோடு, வேரடி மண்ணோடு பேரிரைச்சலோடு ஊழி வெள்ளமாக அடித்துச் சென்றது. மனசுக்குள் காலங்காலமாகக் கட்டி அழகு பார்த்த ஏதோ ஒன்று இடிந்து, சரிந்து, சிதைந்து வெள்ளத்தோடு போய்விட்டதை உணர்ந்தான். குணா அழுதான்.

தராத பக்குவத்தை இன்றைய தோல்வியும் யதார்த்தமும் நேற்றைய வெற்றியின் சுகமும், புகழின் போதையும் தரும்போது ஏன் விரக்தியும் அழுகையுமாய் வருது என்று தன்னையே நொந்து கொண்டான்.

“ம்ம இன்னும் அழு. இந்த எரிச்சலும் விரக்தியும் போதாது உனக்கு… “பக்குவம்” அது வலிய வருந்திப் பெறுவது அல்ல. தானாக கனிவது. அந்த கனிதலுக்கு இந்த வேதனையும் விரக்தியும் தானே உரம்” பஸ்ஸில் வீடு திரும்பும் வரையில் இதே ரீதியில் சிந்திப்பது கொஞ்சம் அர்த்தம் உள்ளதாகப்பட்டது.

நடைவீரர் நல்லசாமி இனி வேலைக்கும், மார்கெட்டுக்கும், வீட்டுக்குமாத்தான் நடக்க முடியுமேயொழிய நாட்டுக்காக நடக்க முடியாது என்பதுபோல் பரவலாகப் பேசப்பட்டது.

அவர் நடந்து நடந்து காராக் நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் தேய்ந்து விட்டதனால் பொதுப்பணித் துறை அவரிடம் “டோல்” வசூலிக்க பரிசீலித்து வருவதாக அலுவலகத்தில் அவர் காதுபட கேலி பேசப்பட்டது.

குணா இன்று பள்ளியில் கூட்டத்தில் ஒருவனாக தான் கலந்து கரைந்து காணாமல் போனது போன்று உணர்ந்தான்.

“ப்பூ.. இவ்வளவுதானா எல்லாம்” என்ற சலிப்பு மனசு முழுசுமாக வந்து ஆக்ரமித்துக் கொண்டது.

இந்த மாற்றத்திற்கெல்லாம் சிகரமாக ஒன்று நடந்தது.

ஒரு சூடான நண்பகற் பொழுதில் நல்லசாமியின் குடியிருப்பின் அருகாமையில் பெரிதும் சிறிதுமாக நாலைந்து புல்டோசர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. அந்த நிலங்களை ஒரு ஜப்பானியக் கம்பெனி ரசாயணக் கழிவுகளை கொட்டுவதற்கு வாங்கி விட்டதாகவும், கூடிய விரைவில் எல்லோரும் இடத்தை காலி செய்யுமாறும் ஒரு இரும்பு தோப்பி கையில் வரைப்படங்களுடன் சொல்லிச் சென்றது. மண் அள்ளும் எக்ஸ்கவேட்டர் ஒன்று தன் இரும்பு தும்பிக்கையை தூக்கி பிளிரி மிரட்டி விட்டு நகர்ந்தது.

அந்தக் குடியிருப்பில் இருந்தவர்களையெல்லாம் கவலை கவிழ்ந்தது. அன்று இரவு பாச்சிஹசானின் தலைமையில் கூட்டம். அவரவர்களுக்குத்தெரிந்த அரசியல்வாதிகளையும், ஆட்சி மன்ற உறுப்பினர்களையும் சந்தித்து இந்த வீட்டு அழிக்கும் படலத்தை ஒத்திப்போட அவகாசம் கேட்க தீர்மானமானது.

நல்லசாமி தலைமையில் நகர மேயரையும், விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்திக்க ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் நல்லசாமி இது மாதிரியான, தன்னை முன்னிலை படுத்தி எழுப்பும் விண்ணப்பங்களும் வேண்டுகோள்களும் எந்தப் பலனையும் அளித்ததில்லை. அளிக்கப் போவதுமில்லை என்று நிராகரித்துவிட்டது எல்லோருக்குமே ஏமாற்றமளித்தது.

அதன்பின் அதனால் எந்தப் பாதிப்பும் அற்றவனாய் வழக்கம்போல காலை, மாலை என்று தினந்தோறும் பயிற்சிக்குப் புறப்பட்டு நடையாய் நடக்கலானார் நடைவீரர் நல்லசாமி. இன்னும் ஆறுமாதத்தில் மணிலாவில் நடக்கவிருக்கும் போட்டியே அவரை இந்த விரட்டு விரட்டியது. அவர் தினமும் கண்ணுக்குத் தெரியாத எதையோ துரத்திக்கொண்டு வேக வேகமாக நடந்தார். இழந்த பெயரை அவருக்கு மீட்டுத்தர வேண்டும் என்று அவரின் கால்களின் தசைநார்கள் நாளுக்கு நாள் உறுதி கொண்டன. இந்த போட்டிக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்வதிலேயே அவர் தன் வீட்டுப் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனை, பணப்பிரச்னை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமா, செளகரியமாக மறந்திருந்தார்.

இந்த ஆண்டு இறுதித் தேர்வு எழுதவிருக்கும் குணாவினால் வீடு இடிக்கப்படும் என்ற அச்சமும், தந்தையால் அதுகுறித்து ஏதும் செய்ய இயலாமல் போவது மட்டுமல்லாமல், அவர் தன் நடைபோட்டியே குறியாய் இருப்பதும் வியப்பாக… வியப்பு விரக்தியாக… விரக்தி எரிச்சலாக… எரிச்சல் சினமாக பரிணாமம் கண்டது.

தந்தையைப் பற்றியதான தன் கடந்தகால பிரமிப்பும் பெருமையும் தன்னுள் குறைத்து கலைந்து போனதையும் ஒரு புதிய, பெரிய வீடு கட்டித்தர முடியாமல் போனாலும் பரவாயில்லை. இருக்கும் இந்தப் பலகை வீட்டையாவது தந்தையால் காப்பாற்ற முடியாது என்ற யதார்த்த உண்மையையும், இன்னாருடைய மகன் என்ற உணர்வாலும் உந்துதலாலும் அவன் கஷ்டப்பட்டு படித்து வருவதும் பல்கலைக்கழகம் போகப்போவதாகக் கற்பனை செய்து லயித்ததும்கூட முட்டாள்தனமாக படுவதையும், தனது மதிப்பீடுகள், அபிலாஷைகளை யாரோ கருக்கலைப்பு செய்தது போன்ற தன் மனோநிலையையும் அவ்வப்போது ஜெயலெட்சுமியிடம் பிரலாபித்தான்.

அவன் வயதுக்கு மீறி சிந்திப்பதைப் பார்த்து அவள் மலைத்துப் போனாள். தன்மைந்தன் இன்னமும் பையன் அல்ல, அவன் மனிதனாகின்றான் என்ற மலர்ச்சி அவளுக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும் அவனின் இந்தக் கழிவிரக்கம்?

அவனால் மனிதர்களையும் சம்பவங்களையும் தாண்டி அதன் பின்னால் இயங்கும் மனித இயல்புகளை பற்றியும் சிந்திக்க தெரிந்திருந்தது குறித்து ஒரு பூரிப்புத்தான். இருந்தாலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த கண்ணுக்குத் தெரியாத, விலக்கிவிட முடியாத ஒரு மாயத்திரை?

ஜெயலெட்சுமி புழுங்கினாள். அவளால் மனதுக்குள் ரகசியமாக அழத்தான் முடிந்தது. அழுதாள்.

போட்டியும் வந்தது.

அன்று மாலை குணா புத்தகங்களோடு வெளியில் புறப்பட்டான். ஜெயலெட்சுமிக்கு அது வியப்பாக இருந்தது. அன்றிரவு அவனது அப்பாவின் நடைப்போட்டி மணிலாவிலிருந்து நேரிடை ஒளிபரப்படுவதை அவனுக்கு நினைவூட்டினாள். தனக்குக் கணக்கு பரீட்சை இருப்பதாகவும், அதற்காக நண்பன் ஒருவன் வீட்டில் படிக்கப்போவதாகவும் அவன் மிகச் சாதாரணமாகச் சொன்னான்.

ஜெயலெட்சுமி அதிர்ந்தாள்.

அவனின் இந்த மாற்றம் அவளால் ஜீரணிக்கக் கூடியதாக இல்லை. இருக்கும்படி வற்புறுத்தினாள். கெஞ்சினாள்.

“அப்பா அவருடைய எதிர்காலத்துக்காக நடக்கிறார். நான் என்னுடைய எதிர்காலத்துக்காக படிக்கிறேன். நீங்க வீட்டைப் பாத்துக்குங்க… புல்டோசர் வந்து இடிச்சிறாம…” என்று மட்டும் கூறிவிட்டு நகர்ந்தான்.

ஜெயலெட்சுமி பிரமித்துப்போய் ஒரு கணம் செய்வதறியாது மலைத்து சிலையானாள். அவன் சொன்னது நிஜம். நெஞ்சைச் சுடும் நிஜம்.

அன்றிரவு நண்பனின் வீட்டு மாடியில் ஒரு அறையில் குணா கணக்குப் புத்தகத்தோடு தன்னைச் சுற்றி எதுவுமே நடவாதது போல் அமர்ந்திருந்தான். கீழே அவனது குடும்பத்தினரும் டிவி முன்பாக ஆரவாரம் செய்துக் கொண்டிருந்தது அவன் காதுகளில் விழத்தான் செய்தது. போட்டி கடுமையாகத்தான் இருக்கும் போல் தோன்றியது.

நல்லசாமியின் கால்கள், தாங்கள் புதிய வரம் பெற்று வந்தவை போன்று தம் வலிமையையும் வேகத்தையும் நிருபித்துக் கொண்டிருந்தன.

நல்லசாமியின் வீட்டில் சிறுவர் சிறுமிகளும், அண்டை வீட்டார்களும், பாச்சிஹசானும் ஆவலோடு வெற்றியை எதிர்நோக்கி டிவியின் முன்பாக குழுமியிருந்தனர்.

ஜெயலெட்சுமி டிவியையும் வாசலையும் மாறிப் மாறிப் பார்த்திருந்தாள்.

கீழே ஹாலில், டிவியில் அறிவிப்பாளர் தன் கனத்த குரலில் கர கரத்துக் கொண்டிருந்தார். குணாவின் நண்பர் குடும்பத்தினர் கைதட்டி குதூகலித்துக் கொண்டிருந்தனர். உற்சாகத்தின் உச்சாத்தில் ஒரு கணம் பெண் வீல் என் கத்தினாள்.

குணாவின் கண்கள் கணக்குப் புத்தகத்தில், கால்களில் ஏதோ ஒருவிதப் பரபரப்பு. நெற்றியில் சொட்டுச்சொட்டாக வேர்வைத் துளிகள் முதுகுத் தண்டின் ஊடே ஒருவிதச் சிலிர்ப்பு. இது அந்த நடைப்போட்டியின் கடைசி நிமிடங்கள் என் உள்ளுணர்வு சொல்லிற்று.

விசில் சப்தத்திற்கும் கைதட்டலுக்கும் இடையில் உச்சத்திற்கு ஏறிய அறிவிப்பாளரின் தொனி சகஜ நிலைக்குத் திரும்ப, குணா முடிவை ஒருவாறாக யூகித்துக் கொண்டான்.

குணா கணக்கு புத்தகத்தை மூடினான். நாற்காலியில் சாய்ந்து கால்களை நீட்டிச் சரிந்தான்.

விழிகளை மெல்ல மூடினான்.

இமைகளின் விளிம்பில் இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் முத்தாய்க் கோர்த்து கன்ன மேடுகளில் வழிந்து கணக்குப் புத்தகத்தை நனைத்தது.

ஜெயலெட்சுமி எழுந்து சமையலறைக்குச் சென்று முந்தானையால் கண்களை பொத்தி மௌனமாக அழுதாள். இம்முறை கணவனுக்காக அல்ல, மகனுக்காக.

நல்லசாமியின் வெற்றியை நாடே கொண்டாடுவதாக அந்த அறிவிப்பாளர் கூறிக்கொண்டிருந்தார்.

Share

One thought on “நடப்பு”

  1. வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. மிக்க மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *