கலகக்காரன்

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் நீயூரோ வார்ட் தன் காலை ஏழரை மணிக்கான சுறுசுறுப்புடன் இயக்கம் கண்டது.

எந்த நேரத்திலும் நியூரோசர்ஜன் டத்தோ டாக்டர் அறு வந்துவிடுவார்.

தாதிகளின் நடையில் ஒரு வேகம்.

ஓட்டத்திற்கும் நடைக்கும் இடையிலான ஒரு நகர்வு, இந்தப் பயிற்சி நர்ஸுகளுக்கே உரித்தானது. அவசரத்தைக் காட்டும் உடலின் மொழி அது.

தெரிந்தும் தெரியாதபடி சாயமிட்ட உதடுகளில் ஒரு நளினமான “ப்ளிஸ்” என்ற கண்ணியமான கெஞ்சல், உள்ளே நிற்கும் உறவினர்களை ரவுண்ட்ஸ் முடியும் வரையில் வெளியில் காத்திருக்க சொல்லும்.

டத்தோ டாக்டர் அறுவின் பார்வை ஒரு கணம் பரவலாக விசாரிப்பது போல் பார்த்து விட்டு சூர்யாவில் நிலைத்தது. ஒரு இளம் டாக்டர் கையில் ஏந்திய குறிப்புகளைப் பார்த்தவாறு சூர்யாவின் நிலைமையைப் பற்றி விளக்கினார்.

“வைட்டல் சைன்ஸ்.. ஸ்டேடி
பியூபிள் சலக்கிஸ்…”

டத்தோ, சூர்யாவின் மேல் இமையை விலக்கி, டார்ச் விளக்கின் ஒளியில் பார்வையின் அசைவுகளை பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினார்.

மூளையின் வீக்கத்தைக் குறைக்க ட்ரிப்பில் மானிட்டால் கலக்க உத்தரவிட்டு விட்டு, “இளைஞன்… எனவே கொஞ்ச நாட்கள் காத்திருந்து பார்ப்போம்” என்றார் ஆங்கிலத்தில்.

அவர் சூர்யாவைப் பார்த்தவாறு அதைச் சொன்ன போதிலும், அது தனக்காகச் சொல்லப்பட்டது போன்றிருந்தது செல்வத்திற்கு.

டத்தோவும் அவரைச் சுற்றி நின்ற டாக்டர்கள், தாதியர் குழாம் நகர்ந்து சென்று விட்ட போதிலும் “கொஞ்ச நாட்கள் காத்திருந்து பார்ப்போம்” என்று சொன்னது அதே சப்த அதிர்வுகளுடன் ஒலித்துக் கொண்டே இருந்தது.

விழி மூடிக்கிடக்கும் சூர்யாவைப் பார்த்தான். முற்றிலுமாக சுற்றியிருந்த வெள்ளை பேண்டேஜ் துணியினுள் முழுதுமாக சவரம் செய்யப்பட்ட, துளை போட்டு மூளைக்குள் கசிந்திருந்த ரத்தம் வெளியேற்றப் பட்ட கபாலம்.

மூக்கினுள் செலுத்தப்பட்டக் குழாயினுள் செல்வது ஆக்ஸிஜனாகத்தான் இருக்கும்.

வாயினுள் செருகியிருந்த நீண்ட குழாயின் மறுமுனை ‘படக்… படக்’ என்று அடித்துக் கொண்டிருக்கும் ஒரு எந்திரத்தோடு இணக்கப்பட்டிருந்தது.

சுயமாக சுருங்கி விரியாத நுரையீரலின் வேலையான மூச்சு விடுதலை உடலுக்கு வெளியிலிருந்து செய்து கொண்டு இருந்தது அது.

மௌனம்.

விழிதிறவாத, வாய் பேசாத, செயலற்ற, உணர்வற்ற, உடலின் மௌனம்… ‘கோமா’. மழை நின்ற தாழ்வாரத்தில் சொட்டும் நீரைப் போலச் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்த குளுகோஸ் நின்று விட்டது.

“நர்ஸ்” என்றழைத்தான் செல்வம்.

“ஓ..” என்றவாறு ஓடி வந்தவள் ‘டிரிப்’பை சரி செய்தாள்.

முகத்தை திருப்பாமலேயே “உன் அண்ணனா” என்றாள்.

“இல்லை… நண்பன்” என்றான் செல்வம்.

“நீ ஒருத்தன்தான் இந்த பத்து நாளா வர்ரே… வேற யாரும் இவருக்கு இல்லையா…?”

“இல்லை”

அவளிடமிருந்து ஒரு விசித்திரமான பார்வை.

“இந்தக் கையை அசைக்க விடாம பிடிச்சுக்கணும்… சரியா ?”

அவள் போன பின்பும் கூட அவள் விட்டு சென்ற பவுடர் வாசனையை நுகர முடிந்திருந்தது.

சூர்யாவின் கையைப் பற்றும் போது, பல யுகங்களாக இவனோடு பழகிய நெருக்கம் தனக்கு எப்படி வாய்த்தது என் எண்ணத் தோன்றியது செல்வத்துக்கு.

கம்போங் லிண்டோங்கன் வீடுகள் உடைபடும் போது கட்டப்பட்டது இந்த நட்பு.

கண்களில் நெருப்புடன். “ஏன் எல்லாரும் அழுதுகிட்டு நிக்றீங்க… சாமான்கள எடுத்துகிட்டு எங்க போறிங்க… போவாதீங்க… போலீஸ்க்கு பயப்படறீங்களா ஏன், என்ன தப்பு செஞ்சீங்க.. எம்.பி. வரட்டும் மந்திரி புகார் வரணும். மினிஸ்டர் வந்தாத்தான் போவோம்னு சொல்லுங்க. போராட்டம் நடத்துனாத்தான் நியாயம் கிடைக்கும்… கலகம் பண்ணாத்தான் காரியம் நடக்கும்…” என்ற ஆவேசக்குரலுக்குரியவனான அந்த இளைஞன்தான் சூர்யாவென்று அப்போது செல்வத்திற்குத் தெரியாது.

“ஏப்பா… கொஞ்சமாவது சண்டை போடேன்… பொட்டப்பயமாரி போடான்னா போயிறதா… கோர்ட்டுக்குப் போவேன்.. கேஸ் போடுவேன்னு எதிர்ப்பக்காட்டேன்… ச்சே…நீயேல்லாம் என்னா மனுஷம்பா…” என்று செல்வத்தின் சட்டையைய் பிடித்திழுத்து திட்டியவன்தான், அவனை அழைத்துச் சென்று கொண்டேய்னரில் தன்னோடு குடி வைத்துக் கொண்ட சூர்யா.

அந்த சூர்யாவிடம்தான் வாழ்வு இத்தனைக் காலமாக முரட்டுத்தனம்.. அடிதடி.. வெட்டுக்காயங்கள்.. குண்டர்கும்பல்… லாக்கப்.. என்று விஷக் கோப்பையை ஏந்திக்கொண்டு தானிருந்திருக்கிறது.

காலம், நெருப்பு வேலியை இவனைச் சுற்றி சதா எழுப்பிக் கொண்டே தானிருந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டிய ரணங்களோடு வாழ்ந்தவன்தான் இப்போது இரவல் மூச்சில் சுவாசித்துக் கொண்டிருக்கின்றான்.

நினைக்க, நினைக்கத் துக்கம் தொண்டையை அடைத்தது.

மௌனமான அழுகையையும், ரகசியமான கண்ணீருமின்றி வேறென்ன தரமுடியும் இந்த சூர்யாவிற்கு.
அவன் காதுக்குள் மெதுவாய் சொன்னான் செல்வம்.

“விழி திற சூர்யா…
எத்தனை பாலைவனங்களை கடந்தது உன் பாதங்கள்..
எத்தனை நெருப்பாற்றில் நீந்தியவன் நீ..
எழுந்து நட நண்பனே…
சகலத்தையும்  எதிர்கொள்ளும் யுத்தம் இது
ஜெயிக்கப் போவது நீதான்… சூர்யா…
இது சத்தியம்..”

தூரத்தில் மலைகளுக்கும் பின்னால் இரவு முழுக்கப் படுத்துக்கிடந்த வெளிச்சம் மெல்ல எழ எத்தனிப்பது தெரிந்தது.

இருள் நழுவித் தேய்ந்து கொண்டிருந்தது.

சூரியப் பிரசவத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

பனிக்குடம் உடைந்து சில்லென்ற காற்று முகத்தை வருடியது.

அதிகாலை நேரத்தில், ரயில் பாதைக்குச் சற்றுத் தொலைவில், ஆளுயர வளர்ந்திருக்கும் லாலாங் புற்களின் நடுவில், பிரமாண்டமான ஒற்றைச் செங்கல் போன்ற அந்த கொண்டைனர் மேல் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு இருள் பிரியத்துவங்கும் வானத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் சூர்யா.

மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

வாழ்வோடு போராடும் கணங்களில் மனதை ஒடுக்கும் வைராக்கியம் வேண்டும் அறிவு மனசிடம் ஆனையிட்டது.

கண்களை மூடிக்கொண்டான்.

கொழுந்து விட்டெரியும் தீயைக் கால்களில் கட்டிக் கொண்டு, பிடரிமயிர் சிலிர்க்கப் புரவி ஒன்று ஓடுகிறது. ஒரு துரிதமான தாளகதியில் சீரான அதன் குளம்போசை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எங்கிருந்து புறப்பட்டு எதை நோக்கி ஓடுகிறது என்று புலப்படவில்லை. ஆனால் அதன் ஓட்டம், காற்றைக் கிழித்துக்கொண்டு காலத்தைக் கடந்து, கணத்தை வெல்லும் ஓட்டம். இப்போது குதிரையைக் காணவில்லை.
குளம்படி ஓசை மட்டும் காதுகளில்… மெல்ல.. மெல்ல.. குறைந்து.. நிசப்தம்.

தூரத்தில் ஒரு உருவம். பெண்ணுருவம்.

நெருங்க நெருங்கத் தள்ளிச் செல்லும் உருவம். புகைமூட்டத்தினூடே… அம்மாவா?

சூர்யாவிற்கு அந்த அதிகாலை நேரத்தில் தனிமையில்.. அழவேண்டும் போலிருந்தது. திடுக்கிட்டுத் திரும்பிய போது… செல்வம்.

“என்ன தனியா ஒக்காந்து யோசிச்சுகிட்டு இருக்கே…?”

கொண்டைனர் மேல் ஏறி வந்த செல்வம் கேட்டான்.

“ஒன்னுமில்ல”

“அப்படின்னா?”

“ஒன்னுமே இல்லாத இந்த வாழ்க்கைய பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்”.

முதன்முதலாக சூர்யாவின் குரலில் ஒருவித விரக்தியும் வேதனையும் கலந்திருப்பதை உணர்ந்தான் செல்வம்.

“மனம் விட்டு பேச யாருமில்ல.. மடியில் படுத்து அழக்கூட எனக்கு மனுஷங்க இல்ல.”

“ஏன் சூர்யா.. நானிருக்கேன்…” செல்வம் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

“அப்பப்ப இப்படி தோணும்… அம்மா நெனவு வரும். அம்மாதான் எனக்கு எல்லாமுமா இருந்திச்சு.. அஞ்சு வயசுல அப்பா கேமரன் மலைல மானேஜரை வெட்டிட்டு ஜெயிலுக்கும் போயிருச்சு… அப்பா அவ்ளோதான். நானும், அம்மாவும் சுங்கைவே மார்க்கெட்டுல சீன தவுக்கே கிட்ட வேலை பார்த்தோம்… எட்டு வயசு எனக்கு அப்ப… அம்மா டி.பி. ஆஸ்பத்திரியில இருமி இருமி செத்துப் போச்சி, கடசியா பார்த்தப்ப கட்டிப் பிடிச்சு அழுதுச்சி…” அப்பனும் மொரடன்.. நீயும் மொரடன்.. புத்தியா பொளச்சிக்கடா..ன்னு அழுதுச்சி… இந்த மொரட்டுத்தனம் என் ரத்தத்துல இருக்கு…”

“இல்ல சூர்யா… ரெத்தத்தில ஒன்னுமில்ல… எல்லாம் வாழ்நிலையும் சூழ்நிலையும்தான் காரணம்…”

“இருக்கும்… அந்த சின்ன வயசுல அந்த சீனத்தவுக்கே கிட்ட வாங்கின அடி… பட்ட காயம்… என்னை மொரடனாக்கிடுச்சி… இல்லாட்டி நானும் ஒன்ன மாதிரி பாட்டு, கவிதைனு எழுதுவேன்… காலிப்பயல்க சிநேகம் எனக்குத் தேவப்பட்டது… அதுல கொஞ்சம் அன்பும் பாதுகாப்பும் இருந்தது. அடிதடியில வீரம் இருந்திச்சி… பொழச்சிக்கறதுக்கு அது தேவப்பட்டுச்சி… இந்தாப் பாரு…”

கழுத்தின் பக்கவாட்டில் ஆரம்பித்து, இடது தோள்பட்டையில் இறங்கி நீண்டு படுத்திருந்தது அந்த தழும்பு, பாறை மேல் சயனித்திருக்கும் ஒரு மலைப் பாம்பு போல்.

அந்த வெற்றுடல் பரமபதத்தில் ஆங்காங்கே நீண்ட, குட்டையான, தடித்த, மெல்லிய தழும்புகள் மின்னின திசைக்கொன்றாக.

“வெட்டுக்காயங்கள காட்டி பீத்திக்கிரென்னு நெனைக்கிரியா… இல்ல வெக்கப்படுறேன்… சக மனிதன காயப்படுத்துனதுக்கும் காயம்பட்டதுக்கும், மனசு நொந்துதான் சொல்றேன்..”

“உனக்குள்ள அந்த மாற்றம் எப்படி நடந்துச்சி?”

“தெரியல… எல்லாத்துக்கும் காரணம் இருக்குத்தான்… கரெக்டா சொல்லத் தெரியல எனக்கு… எல்லாத்துக்கும் காரணம் கண்டுபிடிச்சிட முடியாதும்தான்… ஒன்னைப்பார்த்த உடனேயே எனக்கும் உனக்கும் சிநேகம் உண்டாச்சி… எப்படி… யார் யாருக்காகவோ, எது எதுக்கோ சண்டைப்போட்டுக்கிட்டு வெட்டு குத்துன்னு திரிஞ்சாலும் மனசுக்குள்ள ஒரு குரல்… அம்மாவோட குரலோ… இதெல்லாம், தப்பு தவறுன்னு சொல்லிக்கிட்டே இருந்திச்சு. அழுக்குச் சட்டையோட குப்பமேட்ல நிக்கிர சின்னப் பசங்கள பார்த்தேன். தோட்டத்த விட்டுட்டு இங்க தெருவுல நிக்கிர நம்ம பொம்பளைங்கள பார்த்தேன்… ஒன்னைமாதிரி… என்னை மாதிரி… படிக்க ரெடி… ஒழைக்க ரெடி… ஆளு படுத்து எந்திரிக்க ஒரு கூரை கூட இல்லாமத் தவிக்கிற பையன்கள பார்த்தேன்… மனசுல கொஞ்சோண்டு ஈரம் இருந்தாப் போதும் செல்வம்… மனசு தானா மாறும்… ஒரு நாள் தோனிச்சிச்சு, சண்டப் போட வேண்டிய எதிரியே வேரென்னு… அப்புறந்தான் மாறினேன்னு நினைக்கிறேன்.”

“சூர்யா உலகத்துல நடக்கற அநியாயத்துக்கெல்லாம் ஒன்னாலயும் என்னாலயும் போராட்டம் நடத்தி ஜெயிக்க முடியாது… நம்ம நம்ம முன்னேற்றதான் நாம பார்த்துகனும்.”

“போராடனும் செல்வம்… நமக்காகவும் மத்தவுங்களுக்காகவும் போராடனும்… வாழ்றதுக்கு அதுலத்தான் அர்த்தம் இருக்குதுன்னு தோனுது… அநியாயத்த எதிர்க்க பயப்படக்கூடாது… நீ சொகுசா வாழ்ந்தவன்… உனக்குத் தெரியாது… எனக்குத் தான் தெரியும். வாழ்றது எவ்ளோ கஷ்டம்னு… என்கிட்ட இருக்கறது இந்த உடம்பும் தைரியமும்தானே… என்ன மாரிப்பட்ட மனுசங்களுக்காக போய் சண்டப்போட்றதுதான் எனக்கு சந்தோசமா இருக்கு… நா இழக்கறதுக்கு ஒன்னுமில்லை செல்வம்… அம்மா சொன்ன மாதிரி நா மொரடன்தான். நாயமான, யோக்யமான மொரடனா இருந்துட்டுப் போரெனே… அம்மா இத கேட்டா செல்லமா திட்டும்.. உள்ளுக்குள்ள சந்தோசப்படும்.. இப்பெல்லாம் அடிக்கடி அது நெனவுத்தான்…” குரல் தழுதழுந்தது. மேலே பேச முடியாமல் ஏதோ தடுத்தது.

செல்வம் சூர்யாவின் கைகளைப் பற்றிக் கொண்டான். நேசமிக்க கணங்களின் துளிகள் அவை.

“சூர்யாவுக்கு நீதான் ஜாமின் எடுத்து கூட்டுபோக வந்திருக்கியா?” குரலில் ஒரு முரட்டுத்தனம் இருந்தது. அது போலிஸ் குரல். அப்படித்தான் இருக்க வேண்டும்.

“யெஸ்” பவ்யமாக பதில் அளித்தான் செல்வம்.

“என்னடா ‘யெஸ்’ ; தமிழ்ல பேச மாட்டீயா?” அதிகாரத்தோடு ஏளனமும் சேர்ந்துகொண்டது.

‘டா’ என்பதில் இருந்த அலட்சியம். மரியாதைக் குறைவு கோபத்தை ஏற்படுத்தினாலும், தமிழில் பேசச் சொன்னது சந்தோஷமாக இருந்தது.

“நீ என்ன பன்ரே?”

“ஏ.டி.சியில எல்.எல்.பி படிக்கிறேன்… ரெண்டாவது வருஷம்”, குரல் கோபத்தைக் காட்டி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான் செல்வம்.

சிகரெட் நுனியில் நெருப்பு பற்றிக்கொள்ளும் தருணத்தில் வந்த இந்த பதில், தலையை நிமிர்த்தி செல்வத்தைப் பார்க்கச் செய்தது. லைட்டரை அணைத்த கையோடு பற்ற வைக்கப்படாத சிகரெட்டை எடுத்து விட்டு செல்வதைக் கூர்மையாக பார்த்தார் இன்ஸ்பெக்டர் சந்திரன்.

“சிட்… உட்காருப்பா.. ஒன் பேர் என்ன?”

வார்த்தைகளில் இப்போது கொஞ்சம் மரியாதையும், குரலில் லேசான குழைவும் இருந்தது.

“தேங்க்ஸ்” என்றவாறு உட்கார்ந்து கொண்டான்.

“சூர்யாவை எப்படி தெரியும்… சொந்தமா ஃபிரண்டா?”

“இப்பத்தான்.. ஒரு ரெண்டு வருஷமா… நெருக்கமான சிநேகம் சார்… என் படிப்புக்கு அவன்தான் பைனான்ஸ் பண்றான். அவன் நல்லவன் சார்… முழுநேரமா லாரி கிளினரா இருக்கான். இப்படி எங்கேயாவது போராட்டம்னா முன்னுக்குப் போய் நிப்பான்… சொன்னா கேக்கமாட்டான்.

“வாட்…?” அதிர்ச்சி விழிகளில் இறங்கி வார்த்தையில் வெளிப்பட்டது.

“இவன் ஒரு கேங்ஸ்டர்… எவனோ காசு கொடுக்ரான்னு ஃபேக்டரியில் கலாட்டா பண்ணியிருக்கான்… இவனா நீ படிக்க பணம் கொடுத்து உதவி பன்றான்?”, நம்பிக்கை அற்ற குரலில் பேசினார்.

“சார்… சூர்யா முந்தித்தான் கேங்ஸ்ட்ரா இருந்திருக்கான். இப்ப இல்லையே… இப்பக்கூட அந்த சுங்கைபூலோ கெமிக்கல் ஃபேக்டரியில ஸ்டிரைக் பண்ண காரணம் இருக்கு… ரொம்ப கொடிய டோக்சிக் கெமிக்கல் சார். அங்க… எத்தனை வொர்கர்ஸ் பாதிக்கப்பட்ருக்காங்க… கேட்கப் போன இருபது பேரையும் வேலய விட்டு நிறுத்திட்டாங்க. சூர்யாவை விட்டா அவங்களுக்கு வேற ஆளு இல்ல…”

“அதுக்கு யூனியன் இருக்கே… இவனுக்கு ஏன் இந்த வம்பு?”

“யூனியனா? இவன் போய் சத்தம் போட்ட பின்னாலதான் சார் யூனியனே கண்ண முழிச்சுப் பாக்குது… இனிமேதான் அது படுக்கைய விட்டு எந்திருக்கனும்… பாவம் சார்… அவங்கள விடுங்க…”

“யெனிவே. இவன் மேல கம்பிளேண்ட் கொடுத்திருக்காங்க.. செக்யூரிட்டி கார்டை அடிச்சிருக்கான் எம்.பி போன் பண்ணியிருக்கார்.. ஆக்ஷன் எடுத்துதான் ஆகனும். நீ எப்படிப்பா இவனோடு சேர்ந்தே? ஹோம் டவுன் எது?”

“சுங்கைப் பட்டாணி… அப்பா தமிழ் ஸ்கூல் டீச்சர்… இப்ப இல்ல. அவருக்கு டீச்சர் வேல மட்டும்தான் தெரியும். காசு சேர்க்க தெரியல.. எந்தக் கட்சியிலும் இல்ல. வறுமையை எனக்கு உயில் எழுதி வச்சிட்டு போயிட்டாரு… அம்மா வீட்டு வேல செய்ராங்க… நாலு தங்கச்சிங்க… எல்லாம் ஸ்கூல்ல.. நான் கெட்க்கியில பார்ட் டைம் வேல செய்றேன். சூர்யா ஹெல்ப் பண்றான். படிச்சுக்கிட்டு இருக்கேன். வாழ்க்கையோட ஸ்ட்ரகல் தான்… சார்…”

“ஆச்சரியமா இருக்குப்பா… நல்லா படிங்க… எதுவும் உதவி வேணும்னா கேளுங்க… ஆனா சூர்யா யாரோ காசு கொடுத்துத்தான் கலாட்டா செய்ரான்னு நெனச்சேன்…” குரலில் நம்பிக்கை இப்போது லேசாக இழையோடியது.

“நோ.. போனமாசம் கிரீன் மௌண்ட்டன் தோட்டத்துல சம்பளப் பிரச்சினைக்கு சூர்யாதான் போய் ஸ்டிரைக் பண்ணான். யுபிஎம் எஸ்டேட்ட வித்தவனுங்க ஸ்கூல் நெலத்தையும் சேர்த்து வித்துட்டான்க… சூர்யாதான் அந்த தோட்டத் தொழிலாளிகளை எல்லாம் கூட்டிக்கிட்டு போனான் அந்த டெவலப்பர்கிட்ட… அந்த டெவலப்பரோட அடியாளுங்ககிட்ட அடியும் வாங்கிட்டு வந்தான்.. மொரடன் தான்.. ஆனா நியாயமானவன் சார்…”

“கேட்க நல்லாத்தான் இருக்கு… மிஸ்டர் செல்வம். சட்டத்தை மீறக்கூடாது… வன்முறை கூடாது. இத சூர்யாகிட்டச் சொல்லுங்க…”

“உண்மதான்.. இந்த வன்முறை கொஞ்சம் வித்தியாசமானது. ‘தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’னு சொன்னார் ஒரு கவிஞன்… இதுல இருக்குற வன்முறைதான் சூர்யாவுடைய வன்முறை. “கெடுக உலகம் இயற்றியான்’னு சொன்னாரு ஒரு புலவர்… அதுல இருக்குற வன்முறைதான் சூர்யாவுடைய வன்முறை எக்ஸிஸ்டென்ஷியலியம்.. படிச்சிருக்கீங்களா சார்… தமிழ்ல இருத்தலியல்னு சொல்றது” உதடுகள் துடித்தது… வார்த்தைகள் கட்டிப் புரண்டு கொண்டு வந்தது.. நெற்றியில் வியர்வைத் துளிகள்… நண்பனைப் பற்றி நல்லதாக சொல்லவேண்டும்… நிறையச் சொல்லி அவன் நல்லவன் என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்ற அவசரம்.

“பொறுங்க… பொறுங்க மிஸ்டர் செல்வம் ரொம்ப உணர்ச்சிவசப்படறீங்க…”

‘அந்த உடுப்புக்குள்’ இருக்கையில் உணர்ச்சியே தோன்றக் கூடாதோ இவருக்கு என்று எண்ணத் தோன்றியது.
“இண்டியன் கேங்ஸ்டர்ஸ்… சீக்ரட் சொஸைட்டிக்கு நான்தான் பொறுப்பு… எங்கள பொறுத்த வரையல அவன் கேங்ஸ்டர்தான்… ரிகாட்ஸ் அதத்தான் சொல்லுது… ஒனக்குத் தெரியுமா அவன் உண்மையான பேரு ஆறுமுகம். அப்பன் ஏதோ கூலி பிரச்சனையில மானேஜர வெட்டிட்டு ஜெயில்ல இருக்கான்…”

எல்லாமே தெரியும் சார்… நீங்க பேப்பர்ல, ரிக்காட்ல எழுதியிருக்கறத பாத்துட்டு சொல்றீங்க.. நா அவனோடு அன்றாடம் சாப்பிட்டு, தூங்கி, எந்திரிச்சு, அழுது, சிரிச்சி, வாக்குவாதம் பண்ணி, வாழ்க்கய பகுந்துகிட்டு சொல்றேன்.. சொல்லப்போனா அவன் என்னை காட்டிலும் நல்லவன் சார்…” மனசுக்குள் “மிஸ்டர் சந்திரன் அவன் உன்னைக் காட்டிலும் நல்லவன்” என்று சொல்லத் தோன்றினாலும் அப்படிச் சொல்வது இப்பொழுது இங்கே புத்திசாலித்தனமாகாது என்பதால் “என்னைக் காட்டிலும் நல்லவன் சார்” என்று அந்த ‘என்னை’ அழுத்தத்தோடு சொல்லி முடித்தான்.

“அப்ப அவன் திருந்திட்டான்னு சொல்றீயா…?” நிதானமாக சிகரெட்டை பற்ற வைத்து, உள்ளிழுத்து, மெல்ல இதழ் வழியே புகையைக் கசிய விட்டவாறு கேட்டார்.

மண்ணுக்குள்ளே ஓடுற ஜீவ நதி மாதிரிதான் எல்லா மனிதன்களுக்குள்ளேயும் ஒரு குணம் ஓடிட்டுத்தான் இருக்கு சார்… அது அன்பு செலுத்துனுங்கற குணம்… அதுக்கு வாய்ப்பே இல்லாம ஆக்கிடறது இந்த வாழ்க்க… நமக்கிருக்கிற சமூக- பொருளாதார, அரசியல், கலாச்சார நெருக்கடிக்கு எதிர்வினைதான் இந்த வன்முறை, அக்ரஷன், வயலன்ஸ். சார் நீங்க சட்டத்த மட்டும்தான் பாக்றீங்க.. சமூகத்த.. நீங்க சார்ந்த இந்த சமூகத்த பாருங்க… நிராதரவான… நிராகரிக்கப்பட்ட எங்கள மாதிரி…”

“உஸ்ஸ்.. சாரி செல்வம்… இது போலிஸ் ஸ்டேசன்… இது பத்தி இன்னொரு இடத்துல, இன்னொரு சமயத்துல பேசுவோம். நீ இப்ப சூர்யாவ கொஞ்சம் அடக்கிவை. இவன் முகம் தெரியா எதிரிகளோட மோதுரான். அவன்க பிரச்சனைகள தீர்த்துகிற விதமே வேற.

இத டாக்ஸியில் திரும்பும்போது சூர்யாவிடம் சொன்னதற்கு, அவன் சிரித்தான்.

அதே ஏளன, எதற்கும் அஞ்சாத, எதையும் பொருட்படுத்தாத சிரிப்பு.

“நீயும் இன்ஸ்பெக்டரும் உங்களுக்காக மட்டுமே மூச்சு விடுறிங்க… நான் எனக்கும் மத்தவுங்களுக்கும் சேர்த்தே மூச்சு விடுறேன்.. நம்ம எல்லாத்துக்கும் ஒரு நாள் மூச்சு நிக்கத்தான் போவுது.. உங்களுக்கு நோய் நொடியில நிக்கும்.. எனக்கு ஏதோ ஒரு நல்ல காரியத்துக்காக நிக்கும். நிக்கட்டுமே.. இங்கே பாரு செல்வம்.. நீ சீக்கிரமா இந்த சட்டப்படிப்பெல்லாம் படிச்சி முடிச்சிட்டு சட்டபடி போராடு.. நான் என் வழியில் மோதி பாக்ரேன்… இதுக்கெல்லாம் பயந்தா வாழ முடியுமா…?”

இந்த வார்த்தைகளோடும், இந்த வாழ்வோடும் சூர்யா என்ற அந்த இளமனிதன் அடுத்த சில தினங்களில், முகம் தெரியாத சிலரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான், நினைவிழந்த நிலையில்.

முப்பத்திரண்டு நாட்கள் ஜீவமரணப் போராட்டத்திற்குப் பிறகு இப்போது சூர்யாவிற்கு நினைவு திரும்பியிருந்தது.

கடை விழியோரம் கண்ணீர் கசிந்திருந்தது. மெல்ல திறந்த விழி அர்த்தமுள்ள பார்வை பாய்ச்சியது. முகத்தின் உயிர்ப்பின் ரேகை படர்ந்திருந்தது. உடலின் ஒரு பக்கம் செயலிழந்து போயிருந்தது.

“மூளையில் மறுபடியும் ரத்தம் கசியுது. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபரேசன் பண்ணப் போறாங்க.. எல்லாம் சரியாயிடும்னு நம்பு” – செல்வத்தைப் பார்த்து மெல்லிய குரலில் பேசிய சூர்யாவின் குரலில் கலக்கம் இல்லை. தெளிவான செய்தி இருந்தது. விழி நீரைக் கட்டுப்படுத்த முடியாமல் செல்வம் நின்றான். ஆபரேஷன் தியேட்டருக்கு ஸ்டெச்சரில் தள்ளிக் கொண்டு போகும்முன் சூர்யா செல்வத்தைப் பார்த்தான். ஏதோ சொல்ல எண்ணுகின்றான் என்று செல்வம் அவன் முகத்தருகே குனிந்தான்.

“என்னை அடிச்சவன்க நம்ம பையன்கதான்… பிடிபட்டுட்டான்கனு நேத்து இங்க வந்திருந்த இன்ஸ்பெக்டர் சந்திரன் சொன்னாரு.. போய் அவன்களப் பாரு.. பேசு… அவன்களுக்கு புரியவை… நம்ம பசங்கதானே…” இருமல் பேசமுடியாமல் தடுத்தது. முகமும் சொல்லும் ஒரு பக்குவத்தில கனிந்திருந்தது.
நெஞ்சை வருடிக் கொடுத்தான் செல்வம்.

“கலகம் செய்யப்போரேன் செல்வம்.. கடவுள்கிட்ட… ஜெய்ச்சுடுவேன்.. சண்ட மட்டும் நியாயமா இருந்தா..” மெல்லிய சிரிப்பு.. அதனூடே சலனமற்ற, சரளமான கொஞ்சம் ஏளனம் கலந்த அழுத்தமான வார்த்தைகள். ஸ்டெச்சர் தள்ளப்பட்டு, ஆபரேசன் தியேட்டருக்குள்ளே கொண்டு செல்லப்பட்டான் சூர்யா. கண்ணீரைத் துடைத்து விட்டு ஜன்னலின் வழியே, வெளியே பார்த்தான் செல்வம்.

அங்கே இந்தோனியசக் காடுகளை அழிக்க தனவந்தர்கள் மூட்டிய தீயின் புகை மூட்டம் ஏற்படுத்திய தூசு மண்டலத்தினூடே மங்கலாக இன்னுமொரு சூரியன்.

Share

One thought on “கலகக்காரன்”

  1. viru virupaana nadai. “Veerum Viluthugalum” endra cirukathai toguppil ulla anaittu cirukathaigalum arumai. Ungal kathaiyin nadai, karu, kathai pokku, anaitume tani tanmai kondathu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *