சுருதி பேதம்

கடைசியாக ஒரு முறை ‘திரு கனகசபாபதி – தலைமை ஆசிரியர்’ என்றிருந்த அந்த பெயர் பலகையை கண் நிறைய பார்த்துக் கொண்டேன். கண்களின் விளிம்பில் ஈரம் கசிகிறது.

இந்த பள்ளி ஆசிரியர் வாழ்க்கைதானே எனக்கு வாய்த்தது. எனது வாழ்வின் அர்த்தங்களை இங்கேதானே ஓடி ஓடி தேடினேன். காலையிலிருந்து இரவு வரை என் காலங்கள் இங்கேதானே கரைந்தது. ஐந்து வயதில் மாணவனாக நுழைந்து ஐம்பத்தி ஐந்து வயதில் தலைமை ஆசிரியனாக வெளியேறும் வரை என் இளமையும் முதுமையுமான இந்த வாழ்வு இந்த பள்ளிக்கூடங்களைச் சுற்றி சுற்றியேதானே வளர்ந்து, வாழ்ந்து தேய்ந்துள்ளது. மனைவி மக்களற்ற வீட்டில் கழித்த நேரங்களைக் காட்டிலும் இந்த கல்விக் கூடங்களில் வசித்த பொழுதுகள்தானே அதிகம்.

இன்றோடு இதற்கும் ஒரு முடிவு.

முடிவு இல்லாதது எது.

முப்பத்தைந்து ஆண்டுகால உழைப்பிற்குப் பின் இந்த ஆசிரியர் பதவிக்கு ஓய்வு. இரண்டு ஹார்ட் அட்டாக்கிற்கு பின்னும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த இதயத்திற்கு ஒரு நாள் இந்த ஓட்டம் சலித்து, கசந்து… ஓய்வு. அதன் பின் கிடைக்கும் பதவி சிவலோக பதவி… அப்போதும் கூட இந்த ‘ பதவி ’ நம்மை விடாதோ.

ஏதோ ஒரு விசித்திரமான உணர்வோடு திரும்பி நின்று அந்தப் பள்ளிக்கூட கட்டிடத்தைப் பார்க்கிறேன். வெறிச்சோடி கிடக்கிறது. ஏதோ ஒரு அர்த்தத்தோடு, வானுயர்ந்த மரங்களின் பின்னணியில் அது கண்களை இடுக்கிக்கொண்டு என்னைக் கூர்ந்து பார்ப்பது போல் தோன்றுகிறது.
அதோ அந்த ஆலமரம்.

அந்தப் பொந்தில் பாம்பு இருக்கும் என்று எல்லோரையும் பயமுறுத்தி வைத்திருப்போம். இந்த இடைநிலைப் பள்ளியில்தான் என் பால்ய காலம். அந்த காதல் பருவம்… கொஞ்சம் பிஞ்சிலே பழுத்து வெம்பியதும் இங்கேதான். இந்த ஆலமரத்தின் பொந்தில்தானே நானும் ராஜியும் எங்களின் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்வோம். இந்த ஆலமரத்தின் பொந்தில்தான் நான் என் கடிதத்தைப் பதுக்கி வைத்துவிட்டு வந்துவிடுவேன். கைகளால் தன் அடிவயிற்றைப் தாங்கிப் பிடித்தவாறு சாய்ந்து நிற்கும் நிறைமாத கர்ப்பிணி போல் மறுநாள் ராஜியின் கடிதத்தோடு அந்த ஆலமரம் எனக்காக காத்து நிற்கும். ஆனால் இந்தக் கடிதப்போக்கு வரத்துக்கு முன்பாக டீயுஷன் டீச்சர் வீட்டில்தான் எங்களின் சந்திப்பு ஆரம்பமானது.

தன் முன்னால் ஏழை ஆசிரியரின் மகன் என்பதால் எனக்கும், அந்த ஊருக்கு புதிதாக மாற்றலாகி வந்திருந்த செல்வாக்குமிக்க ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் மகள் என்பதால் ராஜிக்கும் மட்டுமே அந்த சுசிலா டீச்சர் டீயுஷன் சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் நாங்கள் எங்கே படித்தோம்.

ஒரு அழகான பெண்ணின் நட்பு எனக்கும், ஒரு சம வயது ஆணின் பரிச்சயம் அவளுக்கும், டீச்சர் ஏற்படுத்திக் கொடுத்த தனிமை எங்களுக்கும் புதிது.

“நீங்க பாய்ஸ் எல்லாம் என்ன பேசிக்குவிங்க…?”

“என்ன பேசுவோம்… ஊர்க்கதைதான்.. நம்ம வீரப்பன் கிட்ட ‘ஒன் அப்பா ரொம்ப வட்டி, குட்டி எல்லாம் வாங்கராரே… காசெல்லாம் எங்கடா பதுக்கி வச்சிருக்காரு’ன்னு சுந்து கேட்டான், ‘அவரோட அந்த கறுத்த பெருத்த தொந்தியிலதா’ன்னு கந்தா சொல்வான்… வீரப்பன் எங்கள அடிச்சு வெரட்டுவான்…”

குலுக்கி விட்ட கால் சலங்கையின் ஓசையைப் போல கலகலவென்று சிரிப்பாள்.

“நாங்க கேர்ல்ஸ் எல்லாம் இப்படி மோசமாலாம் பேசிக்கமாட்டோம். சுந்தரி அம்மா ஏண்டி இந்த வயசுலேயும் இப்படி சின்னப் பொண்ணு மாதிரி மேக்கப் போட்டுகிட்டு அலுக்கி தளுக்கிகிட்டு கோவிலுக்கு வராங்கனு என் காதில கிசுகிசுப்பா ரஞ்ஜினி….”

“ஆகா… புல்லரிக்கிது… எவ்வளவு உயர்வான விஷயங்கள பேசுறீங்க..”
மீண்டும் அதே சிரிப்பு.

வாய்விட்டு… வானம் பார்த்து சிரிக்கும் சிரிப்பு. மனிதர்கள் மனம் விட்டு சிரிக்கும் போது எவ்வளவு அழகு கொள்கிறது அந்த முகம்.
அந்த ரசனைக்கும் ஓர் முடிவு வந்தது.

என் பெயரை அவளது நோட்புக்கில் கண்ட அவளது தந்தை டியூசனை நிறுத்தினார்.

அதன் பிறகுதான் இந்த ஆலமரப் பொந்தில் கடிதம் எழுதி வைக்கும் ‘ஐடியா’ வந்தது. எனக்கல்ல. வீரப்பனுக்கு. ராஜிக்கும் எனக்கும் உண்டான நட்பை ‘காதல்’ என்று பெயரிட்டதும், என்னை கடிதம் எழுதச் சொன்னதும் இந்த வீரப்பன் தான்.

குண்டாக, அளவில் சிறியதான ‘டவுசர்’ புடைத்துக் கொண்டும், கால்கள் எங்கும் உரோமாபுரியுடன், எப்ப பார்த்தாலும் காதல் கதைகள், செக்ஸ் விஷயங்கள், அவனுக்கு தெரிந்த பெரியவர்களின் கூடாத நட்பு, இப்படியாக வயதுக்கு மீறிய பேச்சு பல நேரங்களில் கேட்கவே கூச்சமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். ஆனாலும் சுவாரஸ்யமாக அவன் சொல்வதை கேட்கத்தான் தோன்றும்.
“எங்க அப்புச்சிக்கு ஒரு பெரிய வீடு… ரெண்டு சின்ன வீடு” என்பான் கண்களைச் சிமிட்டிக் கொண்டு.

“வாழ்க்க ரகசியம் எல்லாம் பொஸ்தகத்தில இல்லடா… எனக்குத்தான் தெரியும்… உங்களுக்குத் தெரியாது நீங்க சின்ன பசங்க…” என்று பெரிய மனித தோரணையில் பேசுவான்.

அவன் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு நம்புவதா வேண்டாமா என்று நாங்களெல்லாம் தூக்கமின்றித் தவிப்போம்.

அந்த இடைநிலைப் பள்ளியின் இறுதி நாட்களை கழித்துக் கொண்டிருந்த நேரம். தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. ஒரு நாள் வீரப்பன் என்னை தனியாக ஆலமரத்தடிக்கு அழைத்து சென்றான்.

“நேத்து ஒன் ராஜேஸ்வரி அப்பா, அதான் அந்த திமிரு பிடித்த ஸ்டேஷன் மாஸ்டர் எங்க அப்புச்சிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தாரு… ராஜி பரீட்சைக்குக் காத்திருக்காராம்… அப்புறம் கோலாலம்பூருக்கு வேலைய மாத்திக்கிட்டு போயிடுவாங்களாம்… ஏண்டா.. உன் காதல் என்னடா ஆகப்போவுது… பாவம்டா அந்த பொண்ணு… ஒன்ன நம்பி காதலிக்கிறாளே… அத நெனச்சாதான் கவலையா இருக்கு… நீ ஒன்னும் செய்யலனா… “ச்சீ… நீயும் ஒரு ஆம்புளையா”ன்னு காரி துப்ப போறா… இத நெனச்சா எனக்கு வெக்கமாவும் இருக்கு…”

“ஏய்.. என்ன பேசிக்கிட்டே போரே… நான் இப்ப என்ன செய்யனும்.. அதச் சொல்லு முதல்ல…”

“அப்டி கேளு… ஒரு திட்டம் வச்சிருக்கேன்… அத நீ நெரவேத்தினா ராஜி காலம் பூரா ஒன்னோடத்தான் வாழ்ந்தாகணும்…”

“சுத்தி வளைக்காமச் சொல்லு…”

“நாளைக்கு கடைசி நாளு… நீ அவ ஸ்கூல் விட்டு வெளியே வரும் போது… பாஞ்சிப் போய் கட்டிப் பிடிச்சி ஒரு முத்தம் கொடுத்துடு… அப்புறம் எல்லோரும் கொஞ்சம் ஆய்… ஊய்ன்னு கத்துவாங்க… பிரச்சனதான். எல்லாத்தையும் சமாளிப்போம்… கவலப்படாத நாயிருக்கேன்… என்ன பண்றது… போராட்டம் இல்லாம காதல் இல்லயே…”

“ச்சீ..சீ..உளராத.. நான் ஏண்டா பப்ளிக்கா இப்படி ஒரு மோசமான காரியத்த செய்யனும்… நெனச்சாலே உடம்பு நடுங்குது.. நான் படிச்சி, வேல பார்த்து, முறப்படி பொண்ணு கேட்டு அவள கல்யாணம் பண்ணிக்குவேன்.”

“முட்டாள். ஒன் குடும்பம் எங்கே… ராஜி குடும்பம் எங்கே… ஏணி வச்சாலும் எட்டுமாடா… இப்படி நான் சொல்றமாதிரி செஞ்சினா… அவள வேறு யாருடா கல்யாணம் பண்ணிக்குவான்… வேற வழியில்லாம அவ அப்பன் உங்க அம்மா கால்ல வந்து விழுந்து உனக்குத்தான் ராஜ்ஜின்னு கெஞ்சிடுவான்… இப்ப விட்டுடீன்னா வேற எப்பவுமே ஒன்னால இந்த காதல வெற்றியாக்க முடியாது… சொல்லிட்டேன்… பின்னால நீதான் வருத்தப்படபோரே… படிப்புல கெட்டிக்காரனா மட்டும் இருந்துட்டா என்னடா புரயோசனம்… என்னை மாதிரி வாழ்க்க பத்தி அறிவும் அனுபவமும் உள்ளவன் சொல்றது கேட்டு நடக்கவாவது தெரியணும்…”

குழப்பமும் கவலையும் என்னை விழுங்கி விட்டிருந்தன. மறுநாள் வீரப்பன் பள்ளி முடிந்ததும் என் தோள்களின் மேல் கையை போட்டு ஏதேதோ பேசியவாறு என்னை அழைத்துச் சென்றான். அவனது முரட்டுக் கைகள் என் கழுத்தைச் சுற்றி இறுக்கியது வலித்தது. இந்த கூடுதலான நெருக்கம் ஏன் என்று தெரியாமல் ஏதோ ஒரு மந்திரத்தில் கட்டுண்டவன் போல் அவனோடு போய்க்கொண்டிருந்தேன்.

எதிரே ராஜியும் சில மாணவிகளும் சிரித்து பேசியவாறு வந்து கொண்டிருந்தனர்.

எங்கள் அருகில் அவர்கள் வந்த அந்த கண நேரத்தில், என்னை ஒரு கோழிக்குஞ்சைத் தூக்கி எறிவது போல் ராஜியை நோக்கித் தள்ளிவிட்டான் வீரப்பன்.

பெண்கள் வீலென்று அலறி ஓடிச் சிதறினர். கண்ணிமைக்கும் நேரம்தான்.

நான் அவன் சொன்னதைச் செய்துவிட்டிருந்தேன்.

ராஜி நிலைகுலைந்து அதிர்ச்சியும் அழுகையுமாய் நின்றிருந்தாள். செய்யத்தகாத ஒன்று செய்துவிட்ட பீதியுடனும் கலவரத்துடனும் என் கண்கள் வீரப்பனை தேடின. அவன் காணாமல் போய்விட்டிருந்தான்.

பெரிய வாத்தியார் என் பிடரியில் அசுர வேகத்தில் அடிக்கும் வரைக்கும்தான் எனக்கு நினைவு இருந்தது. அதன் பின் வெகுநாட்களுக்கு பிரமை பிடித்தவன் போல்தான் இருந்து வந்தேன்.

“தகப்பன் இல்லாத பிள்ளை தறுதலனு நிரூப்பிச்சிட்டியேடா…” என்று என் முகத்திலும் மார்பிலும் மாறி மாறி அறைந்தாள் அம்மா.

தாங்கிக் கொண்டேன்.

மற்றைய பள்ளிக் கூடங்களிலும் அவ்வூர் கோவிலின் திருவிளக்கு பூஜையிலும் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.

உள்ளுர் பத்திரிக்கை நிருபர், ‘மாணவனா.. காமக் களியாட்டம் ஆடும் காமுகனா’ என்று பெயர் குறிப்பிடாமல் ஒரு நாளிதழில் துணுக்குச் செய்தியாக இந்நிகழ்ச்சியை எழுதியிருந்தார்.

ஸ்டேஷன் மாஸ்டர் போலீஸில் புகார் கொடுத்து பள்ளியின் பெயரையும் தன் பெயரையும் கெடுத்துவிடாமல் தடுக்கும் பொருட்டும், அவரை திருப்திபடுத்தும் பொருட்டும் கொஞ்சம் கூடுதலான தண்டனை வழங்கும்படியான ஒரு ‘பெரிய விசாரணை’ நடத்த சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார் தலைமை ஆசிரியர்.
ஆலமரத்தடியில், பள்ளி முழுவதும் ‘ அசெம்பிளியில்’ நிறுத்தப்பட்டது.
நான் ராஜியின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி பணிக்கப்பட்டது. செய்தேன்.

சட்டையை கழற்றி, டிசிப்ளின் டீச்சரின் நீண்ட பிரம்பு, நான் வலிதாங்கும் மட்டும், அவரது கை ஓயும் மட்டும் என் முதுகோடு பேசியது.
பொறுமையாக கேட்டுக்கொண்டேன்.

என் விடலைப் பருவத்து உணர்வுகளை என் வசப்படுத்தி வாழத் தெரியாமல் போனதனால், ‘காதல்’ என்ற அந்த மெல்லிய உணர்வுகளை எப்படிக் கைக்கொள்வது என்று புரியாததனால், நான் என்னென்ன கைக்கொள்வது என்று புரியாததனால், நான் என்னென்ன விதமான மான பங்கங்களுக்கு உள்ளாக முடியுமோ அத்தனைக்கும் உட்படுத்தப்பட்டேன்.

எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு மிகவும் தாராளமாகவே கொடுக்கப்பட்டதால், என் சுய கௌரவம் நசுக்கப்பட்டு, நான் சிறுமைப்படுத்தப் பட்டு, என் உணர்வுகள் கொச்சைப்படுத்தப்பட்டு, ஒரு குற்றவாளிக்கு காட்டப்படும் குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட மறுக்கப்பட்டேன்.

சகித்துக் கொண்டேன்.

பின்னொரு நாள் ராஜி என்னிடம் வந்து “ஏன் கனகு… இப்படியெல்லாம் செய்து என் வாழ்க்கைய கொலச்சிட்டீங்களே…” என்று அழுது விடை பெற்றபோது.
நான் சிதைந்துதான் போனேன்.

நடந்த இந்த அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் இந்த ஆலமரம் தான் சாட்சியாக நின்றிருக்கிறது. என்னைக் கனிவோடு பார்த்த ஜீவன் அது ஒன்றுதான், இன்றுவரையில். அதன் அருகில் சென்று, அதனைத் தொட்டு தடவுகிறேன் ஒரு வாஞ்சையோடு. அதனை நான் தொடுவதும், அது இப்படியாக என் நினைவுகளைக் கிளர்வதும், இதுவே கடைசி முறையாக இருக்கக்கூடும்.
ஏனோ இதனைக் கடந்து அப்பால் செல்ல முடியாது நிற்கிறேன்.
நினைவுகள்… நினைவுகள்… மூச்சு முட்டும் வரை நெஞ்சை இறுக்கும் நினைவுகள் தொடர்கின்றன.

வீரப்பன் ஒரு மோசமான நண்பன் தான். இருந்தாலும் ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்வேன்.

அவன் சொன்னதுபோல் நான் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு நாட்டின் ஒரு மூலையில் அமைதியாக வேலைபார்த்து வந்த ஒரு நாள் இருபது வருடங்கள் கழித்து என் வீடு தேடி ஸ்டேஷன் மாஸ்டர் வருவார். அம்மாவிடம் என் திருமணத்தைப் பற்றி, ராஜியை எனக்காகவே வைத்திருப்பதாக மணம் பேசுவார் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்.
நான் அசட்டுத்தனமான மகிழ்ச்சியில் மூழ்கினேன்.

என் கனவுகளில் மட்டுமே வந்து சென்ற என் பால்ய காதலியைக் கரம் பிடித்து, காலமெல்லாம் இன்பத்தில் களிக்கப் போவதை எண்ணி ஆனந்த வெள்ளத்தில் திளைத்தேன்.

இருபது ஆண்டுகளாக எனக்காக காத்திருந்த அந்த தேவதையின் தெய்வீக காதலின் மகோன்னதத்தை எண்ணி எண்ணி மருகி உருகினேன். நண்பர்களிடத்திலெல்லாம் இந்த அற்புதத்தை சொன்னேன்.
ஆனால் ராஜி முதலிரவில் சொன்னது வேறுவிதமாக இருந்தது.
விதி வாழ்க்கை நதியின் சலனமற்ற ஓட்டத்தில் சற்றும் எதிர்பாராத வண்ணம், திடீரென்று ஒரு அதள பாதாளத்தில் பாயும் நீர்வீழ்ச்சியை ஏற்படுத்திச் செல்லும். இந்தத் திருப்பங்கள் கதைகளில் படிக்கவும், நதிகளை நீர்வீழ்ச்சியாய் எட்ட நின்று பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

அந்த வீழ்ச்சியின் துன்பமும் துயரமும் நீருக்குத்தானே தெரியும். அந்த முதலிரவில், தலை குனிந்தவாறு, மங்கிய ஒளியில், மனதை கவரும் மெல்லிய அலங்காரத்தோடு, மிருதுவான குரலில் மெதுவாக பேசினாள் ராஜி.
“நீங்க அப்படி செஞ்சதனாலேயே நாங்க ஊர் மாத்திக்கிட்டு கோலாலம்பூர் போயிட்டோம். அன்னிலிருந்து எனக்கு அப்பாகிட்டேயும் அம்மாகிட்டேயும் நெதமும் அடியும் உதையும்தான். ஒரு நாளாவது… ஒரே ஒரு நாளாவது என்னை அவுங்க ஒழுக்கம் கெட்டவ, பேரக் கெடுத்தவ, மானத்த வாங்கினவ, தரித்திரம் பிடிச்சவனு திட்டாம  இருந்ததில்லை. மேல படிக்கிறதுக்கு நான் எவ்ளோ கெஞ்சினே, கதறினே. வீட்ல போட்டு அடைச்சி வெளில போனாலே என் கால ஒடிச்சி போட்டுடுவேனு சொல்லிட்டாங்க.

என் அத்தை மகன்.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சின்னப்பிள்ளைலேர்ந்து சொல்லி கிட்டு வந்தவுங்க அப்புறம் எங்க வீட்டுப்பக்கமே வரல. அவுங்க இப்ப ஒரு டாக்டராக இருக்காங்க.
அதுக்கப்புறம் பல இடங்கள இருந்து என்னை பொண்ணு பார்க்க வந்தாங்க… அந்தத் தோசம்… இந்தத் தோசம்னு சொல்லி எப்படியோ எல்லாம் தட்டிட்டுப் போயிடுச்சு அப்புறம் அப்பாதான் வேற வழியில்லாமல் உங்களுக்கே என்னை பண்ணி வச்சிறதுன்னு முடிவு பண்ணினாங்க.

நான் விபரம் புரியாத அந்த வயசுல உங்கள நேசிச்சேன்தான். ஆனா… அது ஒரு சின்ன சலனம்தான். உண்மையிலேயே அது காதல் இல்ல. எது நட்பு, எது சலனம், எது காதல், எது வாழ்க்கைனு யோசிக்க எனக்கு அப்ப அறிவு போதல.
இல்லாட்டி ஒரு டாக்டருக்கு மனைவியா ஆகாம ஒரு சாதாரண பள்ளிக்கூட வாத்தியாருக்கு வாழ்க்கப்பட்டு இங்கே இப்படி நிப்பேனா. யாரோ பண்ணின தப்புக்கு எனக்கு ஆயுள் தண்டனையா…?”

விசும்பலுக்கிடையில், மிக மென்மையாகத் தான் தரையை பார்த்தபடி பேசினாள்.

பாவம்தான், அவளும். நியாயம் தானே அவள் கேட்பதும். நான் தான் மெல்ல,மெல்ல, அதிர்ந்து சிதறினேன். மனதுள்… மீண்டுமொரு பள்ளி அசெம்பிளியில் எல்லோர் முன்னிலையிலும் ஆடைகளின்றி, பிரம்பால் அடிவாங்கினேன். இந்த முறை உடம்பும் உணர்வும் மட்டுமல்ல உயிருந்தான் வாங்கிக்கொண்டது.

என் ஆறிய ரணங்களை குத்திக் குதறவா இவள் இருபது ஆண்டுகள் காத்திருந்தாள் என்று எண்ண எண்ண… நதியும், அதன் கதியும், அதன் எழுதிச் சென்ற விதியும், அதள பாதாளத்தில் வீழ்ச்சியுற்று, பாறையில் மோதிச் சிதறிய நீரின் வேதனையுமாய்… என் வாழ்வும், நானும், என் மனமும்.
எல்லோரும் நாங்கள் ஒரே வீட்டில் வசித்ததால் குடும்பம் நடத்துவதாக கூறினார்கள்.

எனது வாழ்க்கைக்கு கொஞ்சம் அர்த்தத்தையும் மகிழ்ச்சியும் கொடுத்து வந்தது எனது எழுத்துக்கள்தான். என் கவிதை, கதைகளுக்கு வரும் வாசகர் கடிதங்கள் முதல் என் நாட்குறிப்பு வரை அனைத்தும் என் மாமனார், மாமியார், மனைவி சகிதம் அவர்களின் தீவிர புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. மார்க்கெட்டில் என்னைப் பார்த்து புன்முறுவலிக்கும் என் மாணவிகள் முதல் என்னோடு சகஜமாக பேசும் என் சக ஆசிரியைகள் வரை அனைவரும் வேவு பார்க்கப்பட்டார்கள். இருப்பினும் ஒரு குழந்தை பிறந்தது.
அதன் பின்னும் அவளோ, அவளுக்கு துர்போதனை செய்யும் அவளது பெற்றோர்களோ மாறவில்லை.

எனக்கு மண வாழ்க்கை சுகிக்கும்படியாக இல்லை என்பதைக் காட்டிலும் சகிக்கும்படியாக கூட இல்லை என்றுதான் கூறவேண்டும்.
நிதமும் சந்தேகமும் சண்டையும்தான்.

அவையிரண்டும் ஒளியும் நிழலும் போலன்றோ.

ஒவ்வொரு சண்டைக்குப் பின்னும் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடப்பது நானாகத்தானிருப்பேன்.

என் பழைய தவறு ஒன்றினை முன்னிறுத்தி ஒரு காமாந்தகனாக என்னைப் பாவித்து இழிவாக பேசுவதும் நடத்துவதும், புண்படுத்துவதும், இந்த திருமணமே அதற்கு நான் செய்யும் பிராயசித்தம் என்பதுபோல் குத்திக்காட்டுவதும் வழக்கமாகிவிட்டபின் ஒரு நாள் அச்சு முறிந்தது.
இனியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்ற நிலைக்கு வந்தபின் நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம்.

முப்பத்தைந்து ஆண்டுகால ஆசிரியர் தொழில், என் மாணவர்கள், என் மனைவியும் மக்களுமாய் இருந்து வந்தனர்.

ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள்தான் இருந்தன. இதே பள்ளிக்கு மாற்றல் கேட்டு வாங்கி வந்தேன். இங்கேதான் நான் ஓய்வு பெற வேண்டும். அதுவும் இந்த, இதே ஆலமரத்தடியில் நின்று, அதனை தொட்டு, நுகர்ந்து, ஒருநாள் ஒரு பொழுதாவது என் வாழ்க்கையைத் திரும்பி பார்க்க வேண்டும். என் காதலிலும், என் கசந்து போன வாழ்விலும் இந்த ஆலத்தின் பங்கு கணிசமானது.
இங்கே வந்த முதல் நாள் மாலை என் அறைக்கு ஒரு வழக்கு வந்தது.
ஒரு பையனின் பிடரியை பிடித்து தள்ளியவாரே என் அறைக்குள் நுழைந்தார் டிசிப்ளின் ஆசிரியர் மகாதேவன்.

இறுகிய முகமும், நகர மறுத்து பின் மகாதேவனின் சட்டை இழுப்பால் அவரது கையை தட்டிவிட்டு விரைப்பாக முன் நகர்ந்து, முறைப்பான பார்வையால் அவரை பார்த்துவிட்டு என்னை நோக்கினான் அந்த பையன்.

இடது கன்னம் நன்றாகவே வீங்கிப் புடைத்திருந்தது. சட்டை கிழிந்திருந்தது. கேசம் குலைந்திருந்தது.

“சார்… இந்த ஸ்டுடண்ட் ஒரு பொம்பளபிள்ளய கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்துட்டான் சார். ராஸ்கல்… முறைக்கிறத பாருங்க…” என்று கையை ஓங்கி என் பொருட்டு நிறுத்திக் கொண்டார் அந்த ஆசிரியர்.

“இது இந்தப் பள்ளிக்கூடத்து ராசி போலிருக்கு” என்று சிரித்தவாறு சொன்னேன்.
என் சகஜமான குரலும் அதன் கிண்டலான தொனியும் அவரை மேலும் உணர்ச்சி வயப்படுத்தியிருக்கும் போலிருந்தது.

“இதுவர இந்த ஸ்கூல்ல இந்த மாதிரி நடந்ததே இல்ல சார்..” கரகரத்த குரலில் தன்னைத் தற்காத்துக் கொண்டார் மகாதேவன்.

நிதானமாக எழுந்து அந்த பையனின் தோள்களில் கைகளை போட்டு அழைத்து வந்து என் எதிரில் அமர வைத்தேன்.

மிரண்டு விழித்தான் இப்போது. தணிவான குரலில்,”ஏன் தம்பி அப்படிச் செய்தே?” என்றேன்.

என் கனிவு அவனை கரைத்ததோ!

கலவரமிக்க கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க என்னைப் பார்த்தான்.
“பந்தயம் கட்டினான்க சார். இப்படி செஞ்சாத்தான் நான் ஆம்பிளனு சேலஞ்ச் பண்ணினான்க என் ஃபிரண்ட்ஸ்… ஏதோ ஒரு வேகத்தில் யோசிக்காம செஞ்சிட்டேன் சார்… சாரிங்க சார்.. மன்னிச்சிடுங்க சார்…” உடைந்தான் அவன். அழுதான் அவன்.

வாட்டசாட்டமான மகாதேவனைப் பார்த்தேன். அவரது பெரிய விழிகளிலும் மீசையிலும் ஒரு முரட்டுத்தனமான கோபம் இருந்தது.

பையனின் நாசித்துவாரம் வழியாக லேசா ரத்தம் கசிந்தது.

மகாதேவனின் கைகளிலிருந்து பிரம்பை வாங்கி மூலையில் எறிந்தேன்.
எனது ப்ரீஃப்கேஸை மேஜையில் வைத்து திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து அவரிடம் நீட்டினேன்.

படியுங்கள் என்றேன்.

“அடல்சென்ஸ் சைக்காலஜி… விடலைப் பருவத்து மனோவியல்” என்றார்.
“உங்களை இந்த புத்தகத்தின் தலைப்பை படிக்கச் சொல்லவில்லை. உள்ளிருக்கும் விஷயங்களைத் தான் படித்துக்கொள்ளச் சொன்னேன். மற்றய ஆசிரியர்களிடமும் இந்த புத்தகத்தை பாஸ் ஆப் செய்யுங்கள்.
பிரம்பும் பலாத்காரமும் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது.
பொறுமையும், பக்குவமும், புரிந்துணர்வும் தேவைப்படுகிற காலம் இது மிஸ்டர் மகாதேவன். தவறுகளுக்கு தண்டனை என்ன கொடுக்கலாம் என்பதை பற்றி யோசிக்காமல் தவறுகள் ஏன் நடக்கின்றன. அவை நடக்காதவாறு எப்படி அவற்றை தடுத்திருக்கலாம்னு யோசிக்க கத்துக்குங்க. இந்த வயசு மாணவ மாணவிகளிடம் அவர்களுடைய பாலுணர்வு பற்றியும் அவற்றை அவர்கள் எப்படி புரிந்து கொண்டு அவற்றிக்கு வடிகால் கட்டி, வழி நடத்தனும்னு சொல்லிக் கொடுங்க. சப்ளிமேட்டிங் செக்ஸுவல் டிரைவ்ஸ் பற்றி பேசுங்க… பாலியல் உணர்வுகள், பசி உணர்வு போல் ஒரு சாதாரண உடலியல் நிகழ்வு. அது குற்றம் சார்ந்த ஒன்றாய் அதனால் விளையும் தவறுகளை விவகாரமாக்கி, விகாரமாக்கி, அசிங்கப்படுத்தி அவர்களை கொடூரமாக குரூரமாக தண்டித்து ஒரு சேடிஸ்ட் போல நடந்துக்கிராதீங்க. இதுல எனக்கு நிறைய அனுபவம் இருக்கு… நீங்க போகலாம்…” என்றேன்.

ஒரு மாதிரியான குழப்பத்தோடு மகாதேவன் வெளியேறினார்.

“தம்பி, தெரியாம செய்ற தப்புக்கு வருந்தனும். தெரிஞ்சே செய்ற தவறுக்கு உன் சுயகௌரவத்த பாதிக்காம கொடுக்கப்படும் தண்டனையை ஆண்மையோடு ஏத்துக்கணும். ஆனா அதுக்கு முன்னால உங்கிட்டேயும் உன் ஃபிரண்ட்ஸ்க்கிட்டேயும் நான் நிறைய பேசனும்… தண்டனைய பத்தி அப்புறம் பேசுவோம்… முதல்ல தவறு ஏன் நடந்ததுன்னு பார்ப்போம். உனக்கு ஆட்சேபன இல்லேன்னா இன்னிக்கு மாலை உங்க வீட்டுக்கு வந்து உங்க பெற்றோர்களிட்ட பேசணும்… பயப்படாத எந்த விபரீதமும் நடந்துடாது… அந்த ஃபெஸ்ட் எய்டு பாக்ஸ்ல மருந்து இருக்கு… எடுத்து கன்னத்தில தடவிக்க… இப்ப வீட்டுக்கு போ”

இவன் மகாதேவனைக் காட்டிலும் இன்னும் அதிகமான குழப்பத்தோடும் கலக்கத்தோடும் வெளியேறினான்.

தாயின் பக்கத்தில் ஒண்டிக்கொண்டிருக்கும் ஆட்டுக் குட்டியைப் போல் அந்த பங்களாவின் பக்கத்தில் சிறியதாக ஒரு கார்ஷெட். அது இப்போது ஒரு வீடாக ஒடுங்கி நின்றிருந்தது.

வாசலில் சைக்கிளை ரிப்பேர் செய்து கொண்டிருந்தவன் என்னைப் பார்த்தவுடன் அவசரமாக கைகளை துடைத்துக் கொண்டு எழுந்தான்.
முகம் மலர்ந்திருந்தது.

அதில் கொஞ்சம் மரியாதையுடன், பயமும் கலந்து இருந்தது.
அவன் வழிகாட்ட நான் உள்ளே நுழைந்தேன்.

சிறியதாக இருந்தாலும் சுத்தமாகவும் அடக்கமாகவும் இருந்தது ஹால்.
இவர்கள் அந்த பங்களாவாசிகளின் வேலையாட்களாக இருக்கலாம்.
கிழிசல் தெரியாத வண்ணம் குஷனின் உரைகள் கீழிருக்கும்படியாக புரட்டிப் போடப்பட்டிருந்தன.

சுவரில் அவனது பெற்றோர்களின் மார்பளவு புகைப்படம் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது.

பக்கத்தில் ஒரு முதியவரின் படம் மாலையோடு.

அருகில் சென்று பார்க்க எத்தனித்த தருணம் உள்ளிருந்து யாரோ வரும் அரவம் கேட்டு எழுந்து நின்றேன்.

அந்த பையனின் தாய்தான். சேலை முந்தானையால் இழுத்துப் போர்த்தியபடி கதவருகில் சற்று தள்ளியே நின்றபடி “வணக்கம்” என்றாள்.
மறுகணம் மெல்ல விசும்பினாள்.

தேம்பினாள்.

குமுறினாள்.

திடீரென்று என் கால்களில் விழுந்து கதறியழுதாள்.

என் பாதங்களைப் பற்றிக் கொண்டு “மன்னிச்சுடுங்க” என்று மன்றாடினாள்.
“அழாத ராஜேஸ்வரி” என்று மட்டும்தான் அப்போதைக்கு என்னால் சொல்ல முடிந்திருந்தது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *