திரைகடலோடி

“இன்னிக்கு எப்படியும் ரெண்டுல ஒன்னு பார்த்தரணும்… ஆமா” மணிராசு தீர்மானித்துக் கொண்டான்.

“இன்னும் எத்தன நாளைக்கு இந்த வூர்ல இந்த சீரழிந்த பொழப்பு…”

மனமும் வாழ்வும் கசந்தது.

சிந்தனையைச் சற்று நிறுத்திவிட்டு சாலையைப் பார்த்தான்.

எதையுமே பொருட்படுத்தாது அசுர வேகத்தில் கடந்து செல்லும் வாகனங்களைப் பார்த்தான்.

சாலையைக் கடக்கும் போது இதில் ஏதாவது ஒன்று தன்னை மோதிக்கொன்றாலும் கேட்க நாதி இல்லை என்று தோன்றியது. அப்படியே மோதினாலும் பரவாயில்லை என்று கூட தோன்றியது. அடுத்தக் கணமே… “சே..சே.. என்ன நெனப்பு இது… வாழணும்… வாழ்ந்தே ஆகணும்… எனக்காக இல்லேனாலும் சரசுக்காகவாவது வாழ்ந்தே ஆகணும்… அவ வயித்துல வளர்ர என் பிள்ளைக்காக வாழ்ந்துதான் ஆகணும்…” என்று எண்ணிக்கொண்டான்.

சரசு பற்றி எண்ணிய மாத்திரத்தில் மனதின் இறுக்கம் தளர்ந்து கசிந்தது.

கழிவிரக்கத்தில் நெஞ்சுக்குழி அனலாய் தகித்தது.

கண்களை துடைத்துக் கொண்டு நெடுஞ்சாலையைக் கடந்து ஓடினான்.

ஹாரனை அலற அடித்துக்கொண்டு கடந்து சென்ற ஒரு லாரிக்காரன் முஷ்டியை உயர்த்தி திட்டினான்.

 

போன கிழமை சுஹாய்மி நீட்டின பத்து வெள்ளியை மணிராசு வாங்கிக் கொள்ளவில்லை.

“எனக்கு ஏழு மாசம் என் சம்பள பாக்கியை சேர்த்துக் கொடுத்துடுங்க துவான்… ஊருக்கு அனுப்பணும்… மனைவி கர்ப்பமா இருக்கா…” என்று அரைகுறை மொழியில் கெஞ்சாத குறையாக கேட்டுப் பார்த்தான்.

சுஹாய்மி நிதானமான குரலில் புகை நடுவே சொன்னதை டிரைவர் குஞ்சு நாயர் மொழிபெயர்த்தான்.

“இங்க பாரு… ஒன் சம்பளத்த எல்லாம் என் பாஸ் லிங்கம் வந்து வாங்கிட்டு போயிடுச்சு… நீ அவர்கிட்ட கேளு… நீ பாக்க பாவமா இருக்கே… அதனாலத்தான் துவான் அப்பப்ப அஞ்சு பத்த தர்ரதா சொல்லுது…”

சுஹாய்மியின் காலை பிடிக்காத குறையாக நா தழதழக்கச் சொன்னான்.

“துவான்… லிங்கம் எனக்கு வொர்க் பர்மிட் வாங்கி தரதா ஏழுமாசமா ஏமாத்திக்கிட்டு வர்ராரு. என் பாஸ்போர்ட்ட பிடுங்கி வச்சிக்கிட்டாரு. எனக்கு சம்பளமும் வேணாம்… வேலையும் வேணாம்… நான் இந்தியாவுக்கு போவணும், லிங்கத்துக்கிட்ட இருந்து என் பாஸ்போர்ட்ட வாங்கிக் கொடுத்துடுங்க துவான்…”

சுஹாய்மிக்கு சுத்தமாகத் தமிழ் தெரியாது இருந்தாலும் மணிராசின் மொத்தப் பிரச்சனையையும் ஓரளவு புரிந்து கொண்டதை முகம் காட்டியது.

“வொர்க் பர்மிட் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. லிங்கத்துக்கிட்ட நான் சொல்றேன். நீ வேலைய பாரு” என்று மணிராசின் தோளைத் தட்டிச் சொல்லிவிட்டு ட்ரூப்பரில் ஏறி சென்றுவிட்டான்.

 

இவர்களில் யார் தன்னை ஏமாற்றுகின்றான் என்று மணிராசுக்குத் தெரியவில்லை.

இந்நேரம் ஊரா இருந்தா இவன்கள இப்படியா விட்டு வச்சிருப்பேன்… த்தா… தூக்கிப் போட்டு கொடல வகுந்திருப்பேன்… “வேத்தூர்ல வினயமா நடந்துக்கப்பா… ஒன் முன் கோபத்த எல்லாம் காட்டிராதே” ன்னு ஆத்தா சொல்லி அனுப்பினா…

ஆத்தாவைப் பத்தி நினைக்கும் போதே அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

“கொல்லங்குடி மகமாயிக்கு ஆறுநாள் அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாம விரதமிருந்து பெத்தவடா உன்ன… அப்பன் இல்லாத பிள்ளையாச்சேன்னு அரும பெருமயா வளர்த்தவடா.. என்ன… நா சொல்றேன்னு கேளு ராசா… காசு பணமாடா பெரிசு… என் ராசா. ஆயிசுக்கும் கஞ்சித் தண்ணிய குடிச்சிக்கிட்டாவது ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கிட்டு இங்கனக்குள்ள கிடந்தா என்ன ஆகாதாடா ராசு…’ன்னு தாவங்கட்டைய பிடிச்சுக் கெஞ்சினியே ஆத்தா… கேக்லய ஆத்தா… நா கேக்லய…’ நெற்றியெல்லாம் முத்து முத்தாய் திரண்டிருந்த வேர்வைத் துளிகள் கன்னங்கள் வழியே கண்ணீரோடு கலந்தன.

பலனின்றி உழைக்கும் தேகம் சிந்தும் கண்ணீர்தான் வேர்வையோ.

நெஞ்சம் கொள்ளாத சுமையோடு ஆத்தாவைப் பற்றி நினைத்தால் இந்நேரத்தில் அது வெடித்தாலும் வெடித்துவிடும் என்று அஞ்சினான்.

அந்த குறுகலான ஜனநெருக்கடி மிகுந்த சாலையின் உயிரோட்டத்தில் இவன் மட்டும் ஜீவனற்று நடப்பது போல் உணர்ந்தான்.

நினைத்தால் நினைவுக்குள் வந்துவிடவும் நினைக்காத போது மறந்து விடவும் கூடிய முகமா ஆத்தாவுடையது.

 

கண்ணு முழிச்ச நாளிலிருந்து இனி கண்ண மூடும் நாழி வரைக்கும் அவ முகத்த எப்படி மறக்க முடியும்.

எந்த ஆத்தாளும் போய்ச் சேர்ந்துட்டான்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கடிதாசி வந்திச்சோ அப்பவே நானும் போயிருந்திருக்கனும் என எண்னிக் கொண்டான்.

சாகாம காப்பாத்தனது சரசுதான்.

அவ கருப்பைல வளர்ர அந்த சிசுவும்தான்.

டிராக்டர் ஒன்று அவனைக் கடந்து சென்றது. அதன் பெரிய சக்கரங்களின் சுழற்சி எதையோ சொல்வது போல் தோன்றியது.

வாழ்வின் குறியீடோ.

உடல் முறுக்கேறி, வலியின் உச்சத்தில் சில வினாடிகள் நின்று நிதானித்து விட்டுத் தளர்ந்தது.

வயிறு “பசி” என்றது.

மணி பதினொன்று இருக்கும்.

மார்க்கெட்டுக்கு எதிரில் உள்ள சலீம் பாய் கடைக்குச் சமீபித்து விட்டதை வயிறு எப்படியோ உணர்ந்து கொண்டது.

சலீம் பாய்க்கு நம்மூர்ப் பக்கம்

அளகன்குளம்.

நல்ல வாஞ்சையான மனுசன்.

 

இவனைப் பார்த்தவுடன் தலைக்கு மேல் கையைத் தூக்கி நுரை பொங்க ஆற்றும் டீயை டக்கென்று மேஜை மீது வைத்து விட்டு, “என்ன ராசு ஒரு மாதிரியா இருக்கே… டீ சாப்பிடு என்றார்.

இரண்டடொரு சீனர்கள் சப்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஸ்டாலின் பின்புறம், அடுப்பை ஒட்டிய மரத்தின் மறைவில், பாய் சில நேரங்களில் பேசும் ரகசிய குரலின் சப்தம் கேட்கும் தூரத்தில் அமர்ந்து கொண்டான்.

திடீரென்று இமிகிரேசன், போலீஸ் என்று எவனாவது வந்தால் சலீம்பாய் எச்சரிக்க ஏதுவாக அந்த இடம்தான் அமைந்திருந்தது.

கல்லில் காய்ந்த ரொட்டிகளின் மேல் எண்ணையில் தோய்த்த கரண்டியை லாவகமாக இழைத்துவிட்ட வேகத்தில் அவற்றைத் திருப்பிப் போட்டுவிட்டு, கழுத்தை மட்டும் திருப்பி மணிராசின் முகத்தை ஒரு கணம் கூர்ந்து பார்த்தார்.

கணித்து விட்டார்.

இருதோள்களும் மாறி மாறி மேலும் கீழுமாக ஏறி இறங்க மாவை பிசைந்த வாரே கொஞ்சம் கனிவான குரலில் கேட்டார். “என்ன நேத்து வந்த கடிதாசினாலயா ஒன் மூஞ்சு இப்படி வாடி போயிருக்கு… என்ன விசயம் சொல்லு… மனுசனுக்கு தகிரியம் வேணும்ப்பா… ச்சேச்சேச்சே… என்ன ஆளயா நீ.. ஊர் கடிதாசிப் பார்த்தா ஒடிஞ்சு போயிரியே…”

ஆற்றி வைத்திருந்த ‘த்தா தாரேக்’கை பெரிய குவளையிலிருந்து மூன்று சின்னக் கிளாஸ்களில் ஊற்றி அதில் ஒன்றை எடுத்து அவன் பக்கம் நீட்டினார்.

 

எண்ணெய் பிசுக்கும் அழுக்குமான அந்த முரட்டுக் கைகளுக்குரிய மனிதனின் மனதுக்குள் இவ்வளவு கனிவு கசிய முடியுமா?

அந்த அன்பு மணிராசை மேலும் நெகிழ வைத்தது.

டீயை வாங்கியவாறே

“ஒண்ணுமில்லண்ணே… சரசுக்கு இது ஏழாவது மாசமில்ல… வயித்துப் பிள்ளதான் குறுக்கால கிடக்குதாம்… இது ஆயுதக் கேசாத்தான் முடியுமா… மருத பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் போவனும்னு கிராமத்து மருத்துவச்சி சொல்லிட்டாளாம்… அந்த பயந்தானோ என்னவோ தெரியல… சரசுக்கு மாறி மாறி சூட்டு வலியும் குறுக்கு வலியுமா போட்டு வாட்டுதாம்… அள்ளி ரெண்டு பருக்க… எடுத்து வாயில போட முடியலயாம்… வாந்திதானாம்… ஆத்தா இருந்தா தகிரியம் சொல்லுவா… தனியா கிடந்து அவதிப்பட்ரேன்னு எழுதியிருக்கா.. இருந்த நெலத்தையும்ல வித்துட்டு நான் வந்திருக்கேன்.. காசும் அனுப்ப முடியல… திரும்பிப் போகவும் முடியல…” இதற்கு மேல் பேசினால் குரல் உடைந்து காட்டிக் கொடுத்துவிடுமே என்று டீயை உறிஞ்சினான்.

“அட நீ என்னப்பா… மசக்கைன்னா அப்படித்தான்… அதான் அபீதா… என் வீட்டுக்காரி.. மூணு பிள்ளைகளுக்குமே படாத பாடு பட்டுட்டாளாக்கும்… மூத்தது எட்டு பவுண்டாம்… அடுத்தது கொடி சுத்தி பொறந்ததாம்… ஆனா நான் காசு அனுப்பிடுவேன்… எல்லாம் பிரைவேட்டா மிஷின் ஆஸ்பத்திரியில தான் பொறந்திச்சீங்க… நான் ஊருக்குப் போயிட்டு படுத்து எந்திரிச்சு வந்திடரது தான்… பாவம் அவள்ள படாதபாடுபட்டு பொறதவிச்சு… ச்சேச்சே… பாவம்பா இந்த பொம்பளைங்க… என்னப் பண்றது பொண்ணா பொறந்தா அப்படித்தான்… அப்படித்தான் நம்ம ஆத்தா நம்பள பெத்தா. அவ ஆத்தா அவள பெத்திருப்பா. விடு… இதெல்லாம் சகஜம்தான்” என்று சொல்லிவிட்டு,

கொஞ்சம் ரகசியமான குரலில், “ இந்தா இந்த மீகோரெங்க அதோ அந்த தொந்தியும் தொபக்கையுமா பீர் போத்தலோடு ஒக்காந்திருக்கானே அந்த தடியனுக்கு வச்சிட்டு வா…” என்று சொன்னார். சற்று எட்டத்தில் அமர்ந்திருந்த அந்த மனிதரிடமே கைகளை உயர்த்தி புன்னகைத்த வண்ணம் சற்று உயர்ந்த குரலில், “என்ன சௌக்யமா தலைவரே… மீகோரெங் வருது.. வேரென்ன வேணும்.. மீனு தலையா.. கொஞ்ச நேரமாகும்” என்றார்.

காஸ் அடுப்பின் தீயைக் குறைத்த வண்ணம், “எப்ப பார்த்தாலும் போத்தலும் கையுமா இருந்தா உருப்புட்டு போவீங்கடா.. குடிகார குப்பன்களா…” என்று தனக்குள்ளேயே முணங்கிக் கொண்டார்.

மீண்டும் வந்து மரத்தடியில் அமர்ந்த மணிராசு வைத்துவிட்டுச் சென்ற டீயை எடுத்து உறிஞ்சினான்.

“ஏண்ணெ… இந்த லிங்கத்துக்கிட்ட இருந்து பாஸ்போர்ட்ட வாங்கிட்டேன்னா… எப்படியாவது சுஹாய்மி டிக்கெட்டுக்கும் கைச்செலவுக்கும் காசு கொடுத்துடுவான்… ஊருக்கு கிளம்பிடலாம்னு ஒரே முடிவா இருக்கேண்ன…”

“ஆறுமாசம் ஓவர் ஸ்டே பண்ணியிக்கியே இமிகிரேசன்காரன்கிட்ட பினால்டி யார் கட்டுவான்… ஒங்கப்பன்னா கட்டுவான்…”

“அதுக்குத்தாண்ணே லிங்கத்த இன்னிக்கு பார்த்து ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணனும்னு இருக்கேன். வொர்க் பர்மிட் வாங்கித்தரேன்.. கைநிறை சம்பளம் கிடைக்கும்… இப்படிலேம் சொல்லி என்னை அவருதான கூட்டியாந்தாரு… என் சம்பளத்த எல்லாம் சுஹாய்மிகிட்ட அவருதான வாங்கியிருக்காரு… இருந்த ஒரே நெலத்த வித்து சொளையா அம்பதனாயிரம் கொடுத்தேண்ண… ஆத்தா தடுத்துப் பார்த்தா… சரசு அழுதும் பார்த்தா… கேக்காம… கிராமத்து பெரிய தனக்காரரு முத்துராம சேர்வ மருமவன் ஏமாத்தமாட்டாகனு கொடுத்தேண்ணா…”

“பெரிய தனக்காரரு… பெரிய பணக்காரருன்னு இந்த வூர்ல வந்தும் சொல்லிக்கிட்டு இருக்கே… நல்ல ஆளப்பா நீ… பெரிய மோசடிக்காரனுக… பெரிய திருடன்னு சொல்வீயா…”

“இல்லேண்ணே முத்துராம சேர்வ நல்லவருண்ணே… அவருக்குத் தான நான் உளுதுகிட்டு இருந்தேன்… மலேயா மாப்பிள்ளைன்னு வயசு வித்தியாசம் கூட பார்க்காம பொம்பள பிள்ளய இந்த தில்லு முல்லுகாரனுக்கு கட்டி கொடுத்துட்டாரு… இங்க இவருக்கு பொண்டாட்டி வப்பாட்டி எல்லாம் இருக்குன்னு தெரியாம…”

“ஊரு கதயெல்லாம் எதுக்கு எனக்கு… பாஸ்போர்ட்ட அவருகிட்டயிருந்து வாங்குர வழிய பார்ப்பியா… பொண்டாட்டி, வப்பாட்டின்னு கிட்டு… நீ கேட்டா லிங்கம் என்ன தெரியுமா சொல்வாரு… பாஸ்போர்ட் ஏஜண்டுகிட்ட இருக்கு. இமிகிரேசன்ல இருக்கு… இந்தா வந்திரும்… அந்தா வந்திரும்னு இழுப்பாறு. ஒன் சம்பளத்த அடி தண்டமா சுஹாய்மி கொடுப்பான்… அதையும் இவரு வாங்கி பாக்கெட்ல போட்டுக்குவாறு… உன்னை மாதிரி எத்தனை பேரு இவன்ககிட்ட மாட்டியிருக்காங்க… இவன்க பொழப்பே இப்படித்தான்… நீயும் ராப்பகலா ஊர்ல இருக்கிற அத்தன அல்லூர்லயும் இறங்கி எத்தன வருசம் வேல பார்த்தாலும், சுஹாய்மியும் உன்ன விடமாட்டான்… லிங்கமும் உன்ன வச்சி காச  கறந்துருவான்… வேல பார்த்தது போதும்டா சாமினு பாஸ்போர்ட்ட வாங்கிகிட்டு ஊர் நாடிப் போய்ச் சேரு… என்னத்த உழச்சி என்ன… புத்திசாலித்தனமாக உழைக்க தெரிஞ்சிருக்கனும்… இல்லாட்டி இந்த மொதலாளிகளும் சரி, முதலையும் சரி.. ஒன்னுதான்… உறிஞ்சிறுவானுங்க… உறிஞ்சி..”

டக் டக் கென்று ஒரு கணித துல்லியத்தோடு அளவாக வெட்டப்பட்ட தவ்வு, கையும் கத்தியுமாய் இருமருங்கும் அணைவாக எடுக்கப்பட்டு காய்ந்து கொண்டிருந்த எண்ணெய் சட்டியில் போடப்பட்டது.

மணிராசுக்கு அவனது நிலைமை இன்னும் தெளிவாக தெரிந்தது.

ஒரு தேர்ந்த வீணை வித்வானின் விரல்கள் செயல்படும் லாவகத்துடன், சலீம் பாயின் கைகள் அந்தந்த இடங்களில் இருக்கும் வெங்காயம், கீரைத் தண்டு, தௌகே, முட்டை குவா, பலகாரம் என்று மீட்டு நறுக்கி, சட்டியில் ஒர் தாளகதியில் போட்ட வண்ணமாய் இருக்க… பார்வை வாடிக்கைக்காரர்கள் மேல் கவனத்துடன் பரவ, வார்த்தைகள் மட்டும் மணிராசவுக்கு பிரத்யேகமாகச் சொல்லப்படுபவைகளாகவும், அந்தந்த நேரத்தின் அழுத்த ஆழங்களோடும் வந்து கொண்டிருந்தன.

அந்த மரங்களடர்ந்த விளையாட்டுத் திடலைக் கடக்கும் போது, அதன் குளுமையான நிழலும், காற்றும், சலீம் பாயின் இதமான அன்பும், தொண்டையில் இறங்கி வயிற்றை நனைத்த டீயும் மணிராசின் மனப்புழுக்கத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டிருந்தன.

அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் கொஞ்சம் இளைப்பாற அமர்ந்தான்.

எதிரில் ஒரு பெரிய சாக்கடை.  இந்த ஊரின் விஷேசமே இங்கே பெய்யும் மழையும், அவற்றை அள்ளிக் கொண்டோடும் சாக்கடைகளும் தான் என்று நினைத்தான்.

வயல்காட்டின் சேறும், சகதியும் உழும்போது எழும் அந்தப் புழுதியின் மணமும் மகிமையும்… என்று திளைத்தவனுக்கு இந்த நாட்டின் சாக்கடைகள்தான் புகலிடம் தந்தன. பெட்டாலிங் ஜெயாவின் எந்த அல்லூறு எங்கே போய் எதனோடு சேரும் என்பதை மட்டும்தான் அவன் நன்கு அறிந்திருந்தான்.

மழைக் காலங்களின் பின்னிரவுகளில் அடைப்பட்டு பெருகி நிற்கும் இந்த சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய இவன் அழைத்துச் செல்லப்படுகையிலும் அங்கே வேலை செய்கையில் இவன் அங்கமெல்லாம் ஆரத்தழுவி உறவாடும் நகரத்தின் கழிவுகளின் சந்திப்பின் போதும்… இவன் வருந்தியது இந்த அகால நேரத்து வேலையின் தன்மைக்காக அல்ல… இந்த வேலைக்குக் கூட கூலி இல்லையே என்று எண்ணும்போதுதான்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் சந்திக்கப் போகும் லிங்கத்திடம்  என்ன கேட்பது… எப்படி ஆரம்பிப்பது… என்று சிந்தித்த வண்ணம் கால்களை மடக்கும் போது, அமர்ந்திருந்த பெஞ்சின் கீழ் பதுங்கியிருந்த பூனை ஒன்று வேகமாக ஓடி சாக்கடையில் விழுந்தது.

பதறிப் போய் எழுந்து பார்த்தான்.

அந்த பெரிய சாக்கடையின் நடுப்பகுதியில் மட்டும் கொஞ்சம் நீரோட்டம் இருந்தது.

பூனை அந்த விளிம்பில், நிறைமாத கர்ப்பிணியாய் மூச்சு இறைத்து கிடந்தது.

நகர இயலாமல் கால்களை உதைத்துக் கொண்டு விட்டு விட்டு ஓலமிட்டது.

மனம் துணுக்குற்றது.

மேலும் அங்கே நிற்க மனமின்றி திரும்பி வேகமாக நடந்தான்.

அந்த பூனையின் அழுகுரல் அவனைத் துரத்தியது.

சரசு நிறைமாத கர்ப்பிணியாய் படுத்திருக்கின்றாள்… புரள்கின்றாள். முணங்கல் அழுகையாய்… அழுகை கதறலாய்… யாருமே அற்ற தனிமையில் அவள்… கண்களை எத்தனை முறை தேய்த்தாலும் காட்சிகள் மறைய மறுக்கின்றன.

மரம், நிழல், காற்று… எல்லாம் காணாமல் போய்விட்டிருந்தன.

உஷ்ணம் உள்ளும் புறமுமாக.

ஆக்ரோஷமான ஒரு உள்ளுணர்வு அவனை ஆகர்ஷித்திருந்தது.

வேகமாக நடந்தான்.

முகம் வேர்வை கொப்பளிக்கும் ஊற்றுக்கண்ணாக ஆகியிருந்தது.

வெளியில் நின்று கொண்டு ஏதோ வேலை ஏவிக் கொண்டிருந்தார் குத்தகைக்காரரான மகாலிங்கம், எதிரே நின்றிருந்த லாரியின் டயர்களை நாலைந்து பேர்கள் கழட்டிக் கொண்டிருந்தார்கள்.

மணிராசு அவர் அருகில் சென்று கைகளை குவித்தான்.

அவர் அவனை கண்டும் காணாதவராக நின்றிருந்தார்.

காதுகளில் சரசுவின் அலறலும், அந்த பூனையின் அவலக்குரலுமே ஒலித்துக் கொண்டிருந்தன.

“என் பாஸ்போர்ட்ட குடுங்கய்யா… ஊருக்குப் போகணும்…” என்றான்.

திரும்பிப் பார்த்த லிங்கம், எரிச்சலோடு, “போடா… போய் வேலய பாரு… ரெண்டு நாள் வேலைக்கு  போவலயாமே… திமிரா… பாஸ்போர்ட்டு கீஸ்போர்ட்டெல்லாம் கிடையாது… கிடைக்க அஞ்சாறு மாசமாகும்… போ… போய் வேலய பாரு…” என்றார்.

மணிராசு சற்று கடுமையான குரலில், “ஐயா… நீங்க பணமும் பாஸ்போர்ட்டும் கொடுக்கலைன்னா நான் இன்னிக்கு இங்கிருந்து போகப் போறதில்ல… ஆமா…” என்று சற்று அழுத்தமாக, தீர்க்கமாகச் சொன்னான்.

இந்த திடீர் மாற்றம் கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தவராய் லிங்கம் இவனைக் கூர்ந்து பார்த்தார்.

“தண்ணி கிண்ணி போட்டுட்டு வந்திருக்கியா… கண்லாம் சிவப்பா இருக்கு… என்னை தெரியும்ல… இது ஒங்க ஊரில்ல… சொன்னேனா கைய கால வாங்கிருவான்க…”

தசைநார்கள் முறுக்கேறி நின்றன. உதடுகள் துடித்தன.

ஆத்திரத்தின் எல்லை கடந்து செல்வது அவனுக்கு தெரிந்தது.

“சரிதாண்டா.. எந்த வூரா இருந்தா என்ன… என் பாஸ்போர்ட்ட… என் அம்பதாயிரம்… என் உழைப்பு… என் சம்பளம் குடுடா நாயே…” என்று கத்தியவாறு ஆவேசத்தோடு லிங்கத்தின் சட்டையை பிடித்து குலுக்கினான். சற்று தொலைவில் பணிவாக நின்றுக் கொண்டிருந்த ஒரு முரட்டு மனிதனை பார்த்து கையசைத்தார் லிங்கம்.

அவன் ஓடி வந்து மணிராசின் கையை திருகி பிடரியில் ஓங்கி அறைந்தான்.

டயர் மாற்றிக் கொண்டிருக்கும் இடத்தில் போய் விழுந்தான் மணிராசு.

செவிகளில் ஒரே இரைச்சல்.

சரசுவின் அழுகுரல்.

புரண்டு புரண்டு கதறுகிறான்.

அங்கே கீழே கிடந்த ஸ்பானர் மணிராசின் கைகளுக்கு கிட்டியது.

சக்தியெல்லாம் திரட்டி, தன் வலுகொண்ட மட்டும் அந்த ஸ்பானரை லிங்கத்தின் முகத்தை நோக்கி வீசினான்.

“ஐயோ… அம்மா…” என்ற லிங்கத்தின் அலறல் கேட்டது.

ஆனாலும் அது சரசுவின், அந்த கர்ப்பிணி பூனையின் சகிக்க முடியாத அலறலைப் போல் அவ்வளவு குரூரமாக இல்லை.

லிங்கத்தின் அடியாட்கள் தத்தம் கைகளுக்குக் கிடைத்த இரும்பு குழாய்களோடு மணிராசை நோக்கி வேட்டை நாய்களைப் போல் வெறியோடு ஓடி வந்தார்கள்.

ஆனால் அப்பவும் மணிராசு அசையாமல் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு அங்கேயே தான் நின்று கொண்டிருந்தான்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *