மையம்

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து விட்டு சமையலை ஆரம்பிப்பது என்பது, அவன் விழிக்கும்போது ஈரத்தலையில் கூந்தல் தழையத் தழைய, அந்த சந்தன முகத்தில் சற்றுக் கூடுதலாக மஞ்சளும், நெற்றியில் விபூதிக் கீற்றுடன் குங்குமமும். லேசான சிரிப்புடன் “ம்ம் எந்திரிங்க… நேரமாச்சு” என்று சொல்ல வேண்டும் என்பதும் அவள் தனக்காக விதித்துக் கொண்ட நியதி. இந்த ஒரு வருடமாக அதைச் செய்ய அவள் தவறவிட்டதே இல்லை; அவன் அங்கு இல்லாத காலைப் பொழுதுகளைத் தவிர. ஆனால் ஆறுமணி வாக்கில் அவன் புரண்டு படுக்கையில், கையை வீசிப் போடுகையில் அவளின் இடத்தில் அவள் இல்லாதிருப்பதால் அவனும் விழித்துக் கொள்ளலாம், ஏதாவது எரிச்சலோடு முணங்கி விட்டு புரண்டு படுத்துக் கொண்டு மீண்டும் உறங்கிப் போகலாம், மடார் மடார் என்று தண்ணீர் ஊற்றி அவள் குளிக்கும் சப்தத்தில் இன்னும் கொஞ்ச நேரத்தில் சோப்பும் மஞ்சளும் கலந்த நறுமணத்தோடு குறுக்காக மட்டும் கட்டியிருக்கும் ஈரச்சேலையோடு வனப்பாக அவள் வரலாம் எனக் காத்திருந்துவிட்டு எழலாம்.

அப்போதைய அவனுடைய குறும்புகளில் அவளுக்கு பொய்மையான கோபம் இருக்கும். அவன் தன்னை இனி என்றைக்குமே நிரந்தரமான ஒன்று என்றாக இருந்துவிடக்கூடாதா என்ற ஏக்கமும் இருக்கும். இது வெறும் உடல் வசீகரிப்பு மட்டும்தானா. இதற்கும் அப்பால் உள்ளத்தில் இவன் என்னுடன் இருக்கும்படியான ‘உள்ள ஆகர்ஷிப்பு’ தனக்கு இல்லையோ என்ற சோகமும் கூடவே படரும்.

குளித்துவிட்டு வரும் அவனின் அடர்ந்த சுருண்ட கேசங்களை துவட்டி விட வேண்டும் போல் தோன்றும். அப்படித் துவட்டிவிடும்போது மார்போடு அவன் தலையை சேர்த்து சின்னக் குழந்தையை அணைத்துக் கொள்வதுபோல் அணைத்து உச்சிமுகர வேண்டும் என்ற கற்பனை அவளுள் தழைக்கும். அவனாக அப்படிச் செய்யச் சொன்னதில்லையே என்று மறுகணம் ஏங்கும்.

அந்த காலைப்பொழுதுக்கெ உள்ள அவளின் மலர்ச்சியின் ஊடே, குளித்துவிட்டு கலைத்தாலும் இன்னும் முற்றிலும் போகாத தூக்கம், இன்னும் கொஞ்சம் இதோ இருக்கிறேன் என்பதுபோல் அவன் பார்வையில் தேங்கி நிற்கும், பள்ளிக்கூடத்திற்கு போக தயங்கி நிற்கும் பிள்ளை போல.

அந்த அழகான, அமைதியான விடியலை விரும்பாதவன் போல திடீரென்று அவன் வேலைக்குக் கிளம்பும் அவசரத்தை வரவழைத்துக் கொள்வான். சட்டையை எடுத்து மாட்டிக் கொள்வதில் ஒரு வேகம் இருக்கும். அடிக்கடி மணியை பார்த்துக் கொள்வதில் ஒரு பரபரப்பு இருக்கும். அவள் கேட்கப் போகும் கேள்வியை சொல்லாமலே தவிர்க்க வேண்டிச் சாப்பிடும்போதும் கூட முன்கூட்டியே எச்சரிக்கையுடன் அவன் குரலின் தொனியில் ஒருவித எரிச்சல் தருவிக்கப்படும். அது அந்த காலையின் எல்லா சந்தோஷத்தையும் ஒரே மடக்கில் விழுங்கி விடுவதாக இருக்கும்.

“இங்கெல்லாம் காலை ரொட்டிதான் எல்லாரும் சாப்பிட்டுட்டு வேலைக்கு ஓடுறாங்க.. நீ என்னானா இட்லி, தோசை, சாம்பாருனு போட்டு உயிரவாங்குற… ருசியத்தான் இருக்கு… ஆனா, பத்து பதினோரு மணிக்கெல்லாம் தூக்கம் வருதே…” முன்பெல்லாம் சிரித்துக் கொண்டே இதைச் சொன்னவன் இப்பொது கொஞ்சம் கோபமாகச் சிடுசிடுவெனச் சொல்வது, அல்லது அந்தக் கேள்வி நிறைந்து வழியும் அவளது விழிகளை தவிர்க்க என்பதும் அவளுக்கும் அவனுக்கும் பரஸ்பரம் தெரிந்ததுதான்.

ஆனாலும், அவனுக்கும் இனி அவள் கேட்கமாட்டாள் என்பது தீர்க்கமாகத் தெரியும். அவளுக்கும் அப்படி ஒன்று நடந்துவிட்ட பிறகு இனிக் கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை என்பதும் தெரியும். இருந்தாலும் அவன் தன் கால்களுக்கு ஷு மாட்டிக்கொள்ளும் அந்தக் கணங்கள், அந்த வீட்டைவிட்டு வெளியேற இன்னும் சில வினாடிகளே உள்ளன என்ற அந்தத் தருணங்கள் “கேள்வி நேரம்” என்பது போல் இத்தனை நாட்களாக ஆகிவிட்டிருந்தது.

சில நாட்களுக்கு முன்னம் வரை, அவளுக்கு உண்மை தெரியும் வரை, ஆறுமுகம் சம்சாரம் கோமதியக்கா இவளிடம் அதைக் கூறும் வரை, இவளும் தன்னுள் அதனைப் புதைத்து வைத்திருந்து புழுங்கித் தவித்து ஒரு நாள் இந்த மாதிரியான ஒரு நேரத்தி கேட்டு, பதிலாக பளீரென்ற ஒரு அறையும், இந்த மாதிரிக் கண்டவங்க சொல்றதலாம் நம்பி என்னைக் கேள்வி கேட்டா… அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஆமா.. சொல்லிட்டேன்…” என்று படாரென்று கதவை அடித்துச் சாத்திவிட்டுச் சென்றவரை, இந்த நேரம் சகஜமான நேரமாக, இவ்வளவு உணர்ச்சிகரமான, சங்கடமான அந்த வேதனை நிறைந்த நிகழ்ச்சியோடு சேர்த்து எண்ணக்கூடிய நேரமாக இல்லாத, வெறுமே விஷயம் தெரிந்து கொள்ளும் நேரமாக, “இன்னிக்கு ராத்திரி டூட்டியா” என்று அந்த டூட்டிக்கு ஒரு அர்த்தம் மட்டும்தான் இருக்க முடியும் என்ற அப்பாவித்தனமான எண்ணத்தோடு கேட்க, “ஆமா.. கோலாலம்பூருக்கு கேஸ் எடுத்துகிட்டு போவணும்… அங்கே ராவுக்குத் தங்கிடுவேன்.. நாளைக்குச் சாய்ந்தரம் தான் வருவேன்.. ஒண்டியா இருக்கே… கதவ பூட்டிக்க…” என்பதாக இருக்கும். அவளுக்கு அது அவன் வேலை சம்பந்தப்பட்ட செய்தியாகவும், அவனுக்கு அது அவள் மனமறிந்து சொல்லும் சாமர்த்தியமான பொய்யாகவும் இருக்கும்.

மிகச் சாதாணமாக அந்த நேரம் கடந்து செல்ல, அவள் ரேடியோவைத் தட்டிவிட்டு அதன் பாடல் வரிகளை தானும் மென்மையாகப் பாடிக் கொண்டே தன்வீட்டு வேலைகளில் கரைந்து போவாள். ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வளவு சாதாரணமாக அந்த பொழுது கழியாமல் தன்னைப் பற்றியும் தன் வாழ்வு பற்றியுமான ஒரு நம்பிக்கையற்ற காலமாக, அவளை ஏதோ ஒரு விளிம்பில் நிறுத்தி, ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று கீழே பார்க்கும் ஒரு இனம் புரியாத பீதியுடன் அவளை அச்சுறுத்துகின்றது.

பள்ளியில் படிக்கும் போதும், படித்துவிட்டு வீட்டில் கல்யாணத்துக்குக் காத்திருந்த நாட்களிலும், அது குறித்த குழப்பமான காலங்களில் இருந்த நம்பிக்கைக்கூட இப்போது தன்னிடம் இல்லாதது வேதனையாக இருந்தது.  முன்பின் தெரியாத ஒருத்தரிடம் கழுத்தை நீட்டி, உடலை ஒப்படைத்து, வாழ்வைச் சமர்பித்து வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில் ஒட்டியிருந்த அச்சத்தோடு, அந்த ஒருத்தர் எப்படித் தன்னை எதிர்கொண்டு தன் வாழ்வில் என்னையும் ஒரு பாதியாக்கி, தனக்கு அவன் எல்லாமுமாகி வாழப்போகிறோம் என்பதில் இருந்த அடர்த்தியான அந்த, வாழ்க்கைப் பற்றி இனம் புரியாத அந்த பருவத்தில் கூட எப்படியோ உள்ளுக்குள் ஏற்பட்டுவிட்ட ஒரு நம்பிக்கையோடிணைந்த எதிர்பார்ப்பு, நிச்சயம் எல்லாம் நல்லாதான் அமையும் என்பதில் இருந்த குருட்டாம் போக்கான பிடிப்பு, வாழ்க்கையில் வாழ்வதில் இருந்த முனைப்பு… எல்லாமே மெல்ல… மெல்லக் கழண்டு.. உருவி… சுருக்கிச் சென்றுவிடுமோ என்ற பயம்… பெண்மையின் இந்த பயமும் பலஹீனமும் அதற்கே உரித்தானதா… அதன் இயல்பா… இல்லை காலங்காலமாக அதனுள் இதனை விதைத்து… அது வேரூன்றி வளர வேண்டுமென்று பாத்தி கட்டி, நீருற்றி, பத்திரமாகப் பாதுகாத்து, கவனமாக அமைத்துக் கொடுக்கப்பட்டதா?

அவன் போன பின்பு சோபாவில் அமர்ந்திருந்தவள் சில நேரம் சிந்தனையே அற்று இருக்க எண்ணினாள். ரேடியோவைத் திருகிவிட்டுத் துவைத்து உலர்ந்து போயிருந்த துணிகளை எடுத்து மடிக்க ஆரம்பித்தாள்.

ஒலி அலை ஆறில் ஒரு பெண் சமையல் குறிப்பு ஒன்றைச் சொல்லப் போவதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருந்தாள். நேயர்கள் பேனா, பேப்பருடன் தயாராகும்படி வலியுறுத்தினாள். எழுதுவதற்கு தோதாக நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக உரித்து விரித்து சொன்னாள்.

கணவரின் ருசி அறிந்து அந்தப் பதார்த்தத்தைத் தயார் செய்து அவருக்கு கொடுத்து மகிழும்படி கேட்டுக் கொண்டாள். பெண்களின் அழகுக் குறிப்பு பற்றி ஒப்பனை கலைஞர் ஒருவரை மிகவும் சிரத்தையுடன் பேட்டி கண்டாள். அந்த வானொலிப் பெண் தன் நேயர்களை இப்படியாகத் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டு தன் கணவனின் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி தரும்படி மன்றாடிவிட்டு “சகோதரிகளே” என்ற சொந்தத்தோடு பாசமுடன் விடைபெற்றாள்.

ஆணின் ருசிக்கும், ரசனைக்கும் தங்களைப் பெண்கள் எப்படிச் சமைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியதான மகளிர் நேரம் முடிந்ததும் இவள் எழுந்து அரிசி களைந்து குக்கரில் போட்டுவிட்டு இனி காய்கறிக்காரி வந்தபின்தான் இன்றைக்கு என்ன குழம்பு, கூட்டு என்று தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டாள்.

வாசலில் போஸ்ட்மேனின் மோட்டார் சைக்கிளின் சப்தம் கடந்து சென்று அவளுக்கு இன்று கடிதம் ஏதுமில்லை என்றது. கடிதம் வந்தாலும் அம்மா ஒரே கேள்வியைத் தான் வெவ்வேறு விதத்தில் கேட்டிருப்பாள். “ஏதும் உண்டாகலையா” “டாக்டரை போய் பார்த்தாயா” “இத்துடன் பிள்ளையாருக்கு உன் பெயருக்கும் மருமகன் பெயருக்கும் அர்ச்சனை செய்த விபூதி பிரசாதம் இருக்கு.. திருச்சி உச்சிமலை பிள்ளை மிகவும் சக்தி வாய்ந்தவர்.” என்கிற மாதிரி இருக்கும் அவளுடைய கடிதம்.

அம்மாவுக்கு தன் அருமைந்த புதல்வியை பிடித்து ஒருத்தன் கையில் கொடுத்தாகிவிட்டது என்பதில் மனம் நிறைந்த திருப்திதான். இனி இந்த மகள் ஒரு பிள்ளை பெற்றுத் தந்து தன் பெண்மையை உலகுக்கு நிரூபிக்கும் வரை ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவனைப்போல் நிலை கொள்ளாது தவிப்பாள். பெண்களுக்கு இயற்கையால் விதிக்கப்பட்டு, மனிதர்களால் மார்க் போடப்படும் பரீட்சை இந்த மகப்பேறு. தேர்வு இருவர் எழுதியுள்ளதால் வெற்றியும் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். ஆனால், தோல்வி… பெண்ணுக்கு மட்டுமே உரித்தானதாகத் தீர்ப்பளிக்கப்படும் வினோதமான பரீட்சை இது.

அம்மா இதில் அரை டஜன் பெற்று அமோகமாக தேறியவள். அப்பாவோடு இருபத்தைந்து வருடம் வாழ்ந்தவளிடம் இவ்வளவு எளிதில் உனக்கு எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டால் என்ன சொல்வாள்? இந்தக் கேள்வி அம்மாவின் நாணத்தோடு கூடிய சிரிப்பையும், அந்த சிரிப்போடு கூடிய போலியான கோபத்தையும் ஒரு வினாடி காட்டி மறைத்தது. அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

இந்த அப்பாவும் இவர் மாதிரி வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பாரா? அப்படி வைத்திருந்தால் அம்மா அதை எப்படி எதிர் கொண்டிருப்பாள். சண்டை போட்டு வென்றிருப்பாளா? “எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தான், ஏன் அலட்டிக் கொள்ளனும். பிள்ளை குட்டினு வந்தபுறம் எல்லாம் சரியாயிடும்னு” சரணடைந்திருப்பாளா? நான் பார்த்த அம்மா பரம சாது. அவளுக்குக் கோபம் வந்தால் அழுவாள். சந்தோஷம் வந்தால் கணவனைப் பூஜிப்பாள். பூஜைக்குரிய தகுதியைப் பற்றியெல்லாம் அவள் சிந்தித்தவளில்லை. பூஜையை மட்டும் தவறாது செய்வதைப் பற்றி மட்டுமே சிந்தித்தவள். இந்த அம்மாகிட்ட இருந்து நான் எத கத்துக்கிட்டேன். “ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி”ன்னு அடிக்கடி சொன்னதுதான் ஞாபகம் இருக்கு. ஆனால், அவன் ராமனாக இல்லாதிருந்தால் எது அயோத்தினு சொல்லலையே.

ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுமுகம் சம்சாரம் கோமதியக்கா சொல்லித்தான் தெரிஞ்சது. ஒரு தாயின் வாஞ்சையோடு நிதானமாகச் சொன்னாள். “இந்தாப் பாரம்மா, சொல்ரேன்னு ரொம்ப வருத்தப்படாத… ஒன் புருஷனுக்கு அந்த கோலாலம்பூர் ஆஸ்பத்திரியில நர்ஸ் வேலை பார்க்கிற ஒருத்தருக்கும் ரொம்ப நாளா தொடர்பு… அவரு கேஸ் கொண்டு போரேன்னு  போய் தங்கிட்டு வரது அவளுக்காகத்தான். இல்லாட்டி ஒங்க வீட்டுக்காரரு ஒரு ஹெச்.ஏ. அவரு கோலாலம்பூர்ல தங்குரதுக்கு எந்த ஜோலியும் நியாயமும் இல்ல. உன் வீட்டுக்காரரு வண்டியிலேயே அந்த ராவே திரும்பிடலாம் பாரு… இது அறிஞ்ச ரகசியம்… பாவம் நீ சின்னப் பொண்ணு… ஊர்ல இருந்து ஒண்டியா வந்திருக்கே…” அவளுக்கு காலுக்கு கீழ் தரைதிறந்து தான் உள்ளே போய்விட மாட்டோமா என்றிருந்தது.

அடுத்த நாளே இது உண்மையாக இருக்க கூடாது என்று கடவுளிடம் வரமெல்லாம் வாங்கிக் கொண்டு, அவன் வேலைக்குப் புறப்படும்முன் கேட்டுவிட்டாள். அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அவள் கன்னத்தில் விழுந்த அறையைக் காட்டிலும் உள்ளத்தில் விழுந்த அந்த உண்மை நெஞ்சில் ஆழமாய் இருந்தது.

மேற்போக்கான மறுப்பும் ஆத்திரமும் அவனைக் குற்றவாளியெனக் காட்டிக் கொடுத்தபோதிலும் அதைப்பற்றித் தீவிரமாக பேசித் தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தோன்றியும், கேட்கும் தைரியம் இல்லாமல் இருந்தாள். ஒருவேளை “ஆமா…அப்படித்தான்”ன்னு சொல்லிவிட்டால்,  ஒத்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வது. சிந்திக்கவே தைரியமில்லாமல், உண்மையைச் சந்திக்க வலுவில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குள் சிதைந்து போவதே அப்போதைக்கு சௌகரியமாகப்பட்டது எத்தனை நாளைக்கு?

இனிச் சகிப்பதற்கில்லை என்றாகிவிட்டபோதில் ஒரு மழைநாளின் சாயங்காலப் பொழுதில், இரவின் எதிர்பார்ப்புக்கள் அடங்கிய பார்வைகளில், லாபம் கருதிய கடைக்காரரின் வரவழைக்கப்பட்ட சிரிப்போடு அவன் அவளை நெருங்கிய தருணத்தில் மெல்ல மீண்டும் ஒருமுறை அதைப்பற்றி கேட்டுவிட்டாள். அதற்கு அவன் சமாதானமாகவோ சமரசமாகவோ எதுவும் சொல்லக்கூடியவனாக இல்லை. அவனுக்கு “அது” நிராகரிக்கப்பட்ட நேரத்தில் அவன் பார்த்த அந்தப் பார்வை அன்றைக்கு அவள் வாங்கிக் கொண்ட அறையின் மொத்த வலிமையுடன் அவளின் இதயத்தில் இறங்குவதாக இருந்தது.

“இஷ்டம்னா இரு… கஷ்டம்னா போய்விடு” என்று சொல்லிவிட்டு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு போய்விட்டான். இழப்பதற்கு ஒன்றுமில்லை, அப்படியே இழப்பதானாலும் பரவாயில்லை என்பதாக அவனது ஆண்மையின் ஆளுகை பிரகடனப்படுத்தியது போல் இருந்தது. வாழ்க்கை ஒரு கூர்மையான வளைவில் சடக்கென்று அவளைக் கீழே தள்ளிவிட்டுத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போவதுபோல் இருந்தது. இவ்வளவு நெருக்கத்திலும் தான் எவ்வளவு தூரத்தில் அவனிடம் தனிமைப்பட்டுப் போவதைத் திடீரென்று அவளால் உணர முடிந்தது.

அவனுக்கு அவளின் தொடர்பு நீண்ட காலமாக இருந்ததென்றால் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த நான் எதற்கு? பக்கத்தில் படுத்துக் கொள்ள, அவன் ருசியறிந்து பக்குவமாய்ச் சமைத்துப் பரிமாற, வீட்டைப் பெருக்கி சுத்தமாய் வைத்திருக்க, அவன் “அங்கே” போகாத நாட்களில் மாலைகளில் வீடு திரும்புகையில் அழகாய் அலங்கரித்துக் குளிர்ச்சியாய் அவன் களைப்பு, நீக்க இந்த மாதிரியான புறத் தேவைகளை பூர்த்தி செய்ய… இரவில் சுகிக்க… மையம் அவனாக இருக்கும் வரை தனது வாழ்க்கைச் சுழற்சியின் கதி இப்படியாகத்தான் இருக்கும். அந்த மையம் இருவரும் இனைந்த குடும்பமாகவும், அதன் சுழற்சியின் இயக்கம் இருவரின் ஆத்மார்த்தமான அன்பாகவும் இருக்க வேண்டும் என்பது ஒரு யதார்த்த உண்மையாக இருந்துவிடக் கூடாதா? ஏக்கம் நெஞ்சில் நிரம்பி விழிகளின் விளிம்பில் நீராய் கோர்த்து நின்றது.

வாசலில் வேன் நிறுத்திய சப்தம் அவளை அழைத்தது. காய்கறிக்காரி வந்துவிட்டாள். அவள் வெளியே வந்து காய்கறிகளை நோட்டம் விட்டாள். பசுமையாகவும் புதியதாகவும் இருந்த அவைகளை வாங்குவதில் இன்று மனதுக்கு உற்சாகம் இல்லாது இருந்தது. இவளது பார்வை காய்கறிகளிடமிருந்து அதை விற்கும் அந்த சீனத்தியிடம் படர்ந்தது. அவள் இப்போது கொஞ்சம் தளர்ந்துவிட்டிருந்தாள். முன்பெல்லாம் அவள் தன் கணவனோடு வரும்போது வேறு மாதிரித் தோன்றினாள். சத்தமாகப் பேசுவாள் கொஞ்சம் அதிகமாகவே பேசுவதாய்த் தோன்றும். வாய்விட்டுச் சத்தமாகச் சிரிப்பாள். சிரித்துக் கொண்டே பேசுவதால் எச்சில் தெறிக்கும்.

அவனும் அமைதியாக சிரித்த வண்ணமே இருப்பான். அவளது சத்தம், சாமர்த்தியம், எல்லாவற்றிலுமே அவனுக்கு சம்மதமும் கொஞ்சம் பெருமிதமும் இருப்பதாக தோன்றும். வேன் ஓட்டுவதும் காய்கறிகளை நிறுத்துக் கொடுப்பதும் தான் தனது வேலை என்றிருப்பான். பேரம் பேசுபவர்களிடம் பேரம் பேசுவது, விலைவாசி நிலைமைகளை அனாயாசமாக அலசுவது, “தௌகே’’ மொத்த வியாபாரிகளின் விலை, சில்லறை வியாபாரிகளின் விலை, நிகர லாபம், இதில் எதை எப்படிக் குறைக்க முடியும் என்பதெல்லாம் பற்றியதாக இருக்கும் அவள் பேச்சு, அவள் விலை சொல்லும் குரலின் தொனியில் இருந்தே வாங்குபவர்கள் கொள்ளத்தக்க வகையில் அவளால் பேச முடிந்திருந்தது ஆச்சரியம்தான். வாடிக்கையாளர்கள் பெண்களாக இருப்பதால் அவள்தான் அங்கே எல்லாருமே என்பதுபோல் தோன்றும், அவன் புற்று நோயில் போன வருடம் இறந்தபின், அவள்தான் வேன் ஓட்டி வருகிறாள். முன்புபோல் அவ்வளவு கலகலப்பாக இல்லைதான். முகமும் கூடத் திடீரென்று ஐந்தாறு வருடம் கூடி காட்சி தந்தது. இருந்தாலும் அவள் அவன் இல்லாத சோகத்தினின்றும் மீண்டு விட்டது போல் தோன்றுவது இவளுக்கு ஒரு நிம்மதியைத் தந்தது.

அவளுக்கு பிள்ளைகள் உண்டா என்று இது வரையில் கேட்டதில்லை. இருந்திருந்தால் எப்போதாவது ஒரு நாளாவது, விடுமுறையிலாவது வேனில் வந்திருப்பார்கள் தானே. இப்போது வியாபாரம் முன்னைக் காட்டிலும் அதிகமாக நடப்பது போலிருக்கு.

காய்கறி வாங்கத் தோன்றவில்லை. அவளையே, அவள் காய்கறிகளை விலை சொல்லி நிறுத்துப் பிளாஸ்டிக் பையில் போட்டும், காகித்ததில் சுற்றியும் கொடுத்து, காசு வாங்கிப் போடும் லாவகத்தையும் அதை அவள் ஒரு யந்திர கதியில் செய்வதையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. இவளது பெருந்தொடைக்கும் மேல் இவள் அணிந்திருந்த கட்டையான கால்சட்டை, மார்பைப் பாதி மூடியிருந்த “டி” ஷெர்ட்டும், தனது உடம்பைப் பற்றி எள்ளளவும் எண்ணங்கொள்ளாத மிக இயல்பான மனப்பாங்கும், முழங்காலுக்கு கீழே விரிந்து நின்ற கருப்பு ரப்பர் பூட்சும், சிறு கொண்டையாய்த் தலைமுடியை இழுத்துச் சுற்றியிருந்த “ரப்பர்பேன்”டும் சற்றுக் குள்ளமாகத் தோன்றச் செய்யும் சரீர கனமும்… இவளது வாழ்க்கையின் மையம் எதுவாக இருக்கும். மையமும் இவளே… சுழற்சியும் இவளே தானோ?

வேன் புறப்பட்டு போய்விட்டது.

இன்னமும் அவள் வாசலில்தான் நின்று கொண்டிருந்தாள். பார்வை தொலைதூரத்தில், இன்ன தென்றில் என்றில்லாமல் எதையோ பார்த்துக் கொண்டிருந்தது.

அன்று அவள் காய்கறி எதுவும் வாங்கவில்லை.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *